Sunday 15 September 2019

காதுகள் - எம்.வி.வெங்கட்ராம் - புத்தக விமர்சனம்

இத்தனை வருடங்களாக பல புத்தகங்களை புதினங்களாகவும் சிறு கதைகளாகவும் படித்திருந்தாலும் வித்தியாசமான ஒரு படைப்பு என்பதை அவ்வளவாக கண்டடைந்ததில்லை. அப்படி ஒரு தேடலின் பலனே இந்த காதுகள். நான் இது வரை படித்ததில் மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது இந்த புத்தகம்.வெங்கட்ராம் என்ற எழுத்தாளரை பற்றி அறிமுகம் இல்லாத நான் இந்த புத்தகத்தை பல நாட்கள் புறக்கணித்து வந்தேன். பிறகு சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகம் என்று கண்டு கொண்டதும் வாசித்து தான் பார்ப்போமே என்று முற்பட்டேன். அது நல்ல ஒரு முடிவும் கூட. இல்லையேல் இப்படி ஒரு கதையை தெரிந்திருக்க முடியுமா என்ன?
                    மாலி (எ) மகாலிங்கத்தின் கதையே இந்த காதுகள். தனது பெற்றோருக்கு ஒரே மகனாக பிறந்த மாலி கூச்ச சுபாவத்துடன் வளர்கிறான். எல்லோரையும் போலவே படித்து முடித்து வேலை செல்கிறான். அதன் பிறகு தொழில் நடந்திகின்றான். அதோடு சிறு வயதில் கல்யாணமும் நடத்தி வைக்கப்படுகிறது. செல்வ செழிப்பில் திகழும் மாலியின் நிலையில் மாற்றம் வர செல்வங்கள் இழந்து நடுத்தெருவுக்கு தள்ள படுகிறான். நாட்கள் செல்ல செல்ல அவனது காதுகளில் விசித்திரமான பல ஒலிகளை கேட்கிறது. அவனது நாசி பல வாடைகளையும் உணர்கிறது.
பல குரல்கள் முருகன் என்றும் ராமர் என்றும் காளி என்றும் சிவன் என்றும் பேசுகிறது. முருகன் அவனை நெறி தவறாமல் இருக்க சொன்னாலும் காளியின் பேச்சு அவனை பல கேட்ட செயல்களை செய்யவும் கேட்ட எண்ணங்களை நினைக்கவும் தூண்டுகிறது. காமம், கேட்ட வார்த்தைகள் மற்றும் வேறு கெட்ட சிந்தனைகள் பற்றின குரல் கேட்கையில் அவனை சுற்றி துர்நாற்றம் வீசுவதை உணர்கிறான். மாலியினுள் நடக்கும் இந்த போராட்டமும் அது அவனது இயல்பு வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றது என்பதுமே "காதுகள்".
நாமெல்லோரும் ஏதாவது சில தருணங்களில் நம் வாழ்க்கையில் தனியாக பேசியிருப்போம். பேசி முடித்த பிறகு சற்று வித்தியாசமாக நமக்கே சில நேரங்களில் படும். அப்படி இருக்கையில் இப்படி ஒரு அனுபவம் வர நேர்ந்தால் என்னவாகும் என்று சற்று யோசித்து பாருங்கள்! மாலியின் மனக்குழப்பத்தை தத்ரூபமாக சொல்லியிருக்கார் எம்.வீ . ஆரம்பத்தில் சில நேரங்களில் மட்டும் கேட்கும் குரல்கள் போக போக எங்கும் அவரை தொடர ஆரம்பிக்கின்றது. அந்த நேரங்களில் நிகழும் மாற்றங்கள் மற்றும் நினைவலைகள் அழகாக அமைக்க பட்டிருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் ஆக இருந்தாலும் இந்த கதைக்களம் நம்மை அது ஒரு கற்பனை கதை என்றே நினைக்க தூண்டுகிறது. காளி, ராமர், அவனோட குரு எல்லோரும் பாத்திரங்களாகவே படுகின்றன. கதையில் வரும் அவனது மனைவி, நண்பன், குழந்தை போன்றவர்கள் இவனது நடத்தையில் குழம்ப நம்மையும் அந்த குழப்பத்தில் தள்ளுகிறார்கள். சில நேரம் மட்டுமே வந்து போனாலும் அவர்களது உணர்வுகளையும் நமக்குள் நன்று செலுத்துகிறார் எம்.வீ.
இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள் சிலர். மனநல மருத்துவக்காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் படைப்புலகில் இதற்க்கு ஒரு முக்கிய இடம் என்றுமே இருக்க தான் செய்யும். எல்லோருக்கும் பிடித்தமான ஒரு வாசிப்பாக இது இருக்கும் என்று திட்டவட்டமாக கூற முடியாது என்றாலும் அனைத்து புத்தக பிரியர்களுக்கு கண்டிப்பாக வாசித்திருக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.

Book-o-Meter

2 comments:

  1. சிறந்த விமர்சனம். சில எழுத்துப் பிழைகள் உள்ளன. இறுதியில் மாலிக்கு சரியாகி விடுமா இல்லை பையித்தியம் பிடித்து விடுமா?

    ReplyDelete
  2. பிழைகளுக்கு வருந்துகிறேன். படித்து தெரிந்து கொள்ளுங்கள் 😀

    ReplyDelete