Monday 30 March 2020

கூளமாதாரி - பெருமாள் முருகன் - புத்தக விமர்சனம்


உயிரோட்டமுள்ள கதைகள் என்று நினைக்கையில் என் மனதிற்குள் கடந்து வரும் முதல் பெயர் பெருமாள் முருகன். மாதொருபாகன் தொடங்கி பூனாச்சி வரை நான் வாசித்த அவர் புத்தகங்கள் அனைத்தும் என்னை மிகவும் பாதித்தவை. அதிலும் பூனாச்சி என் நெஞ்சில் என்றும் ஒரு நீங்கா இடத்தை பிடித்தது. இந்த கூலமாதாரி கூட என்னை அப்படி ஒரு அனுபவத்திற்குத்தான் உள்ளாக்கும் என்ற நம்பிக்கையோடு தான் இப்புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.
கூளையன் என்பவன் கொங்கு பிரதேசத்தை சேர்ந்த ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன். பண்ணையாரிடம் பெற்றோரால் வேலைக்கு அனுப்பப் படும் அநேக சிறுவர்களில் இவனும் ஒருவன். தன தந்தை பண்ணையிடம் பேசிய கூலிக்காகவும் வாங்கின கடனுக்காகவும் வேலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும் சிறுவன். வீடு வேலைகள் முடித்து விட்டு ஆடு மேய்க்க செல்வது அவனுக்கு பிடித்திருந்தது. ஏன் என்றால் அங்கு தான் அவனுடைய நண்பர்களும் அவர்களுடைய பண்ணையார்களின் ஆடுகளை மேய்க்க வருகிறார்கள் - நெடும்பன், வவுறி மற்று சிறுவர்களோடு  விளையாடி உண்டு மகிழ்கிறான். பண்ணையார் மகனான செல்வமும் அடிக்கடி இவர்களுடன் சேர்ந்து விளையாடுகிறான். அவன் வாழ்க்கையில்  நடக்கும் சந்தோசம், துக்கம், கோபதாபங்கள் இவற்றின்  ஒரு பகுதியை சொல்வது தான் இந்த கூளமாதாரி . மேலும் ஒரு சில சம்பவங்கள் அவன் வாழ்க்கை திசையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பது தான் இந்த புதினம்.
பண்ணை நிலங்களில் வேலை செய்யும் சிறுவர்களின் வாழ்க்கையை அழகாக காட்டியிருக்கிறார் பெருமாள்  முருகன். அவர்களுக்கும்  மற்று குழந்தைகள் போல் நல்ல  உடைகள்  அணியவும், நல்ல உணவு உண்ணவும், பள்ளிக்கு செல்லவும், கவலை இன்றி விளையாடி திரியவும் ஆசைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் வாய்த்ததோ ஒரு கோமணம், பழைய சோறு, மாட்டு கொட்டாயில் உறக்கம். மற்று சிறுவர்களுடன் ஆடு மேய்க்க செல்லும் அந்த சமயங்கள் மட்டுமே அவர்களால் ஆனந்தமாக கழிக்க முடிகிறது, தூக்குப்போணியில்  அவர்களுக்கு கிடைக்கும் கூழும் பழையதும் ஊற்றுவதோடு அவள் கோபங்களையும் ஏசல்களையும் சேர்த்து அடைகிறாள் பண்ணையக்காரி. என்றாவது நோம்பி அன்று தான் அவர்களுக்கு கறி  சோறு. அதுவும் மீதமாகிற துண்டுகள். ஆடு மேய்க்கயில் சிறு தவறு  நேர்ந்தால்  கூட பண்ணையார் சாட்டை அவர் உடம்புகளை பதம் பார்க்கும். பண்ணையாரின் மகனான செல்வமும் கூளையனுடன் விளையாடுகிறான். கூளையன் செல்வம் நட்பு நன்றாக வரையப்பட்டிருக்கிறது. ராத்திரி காவலுக்கு உடன் செல்கிறான். என்ன தான் நட்பாக பழகினாலும் ரெண்டு பேருக்கும் இடையே உள்ள இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை. என்னதான் நட்போடு பழகினாலும் செல்வம் தான் ஒரு பண்ணை பையன் என்று கூளையனை நினைவுபடுத்திக்கொண்டு தான் இருக்கிறான். ஆடு மேய்க்க இட்டேரிகளில் தான் இச்சிறுவர்கள் சந்தோஷத்தை காண்கிறார்கள். யாரும் கேட்பாரற்று விளையாடவும், நீச்சலடிக்கவும், உண்ணவும் , உறங்கவும் செய்கிறார்கள். கூளையனே முக்கிய கதாபாத்திரம் என்றபோதும் மற்று சிறுவர்களின் வாழ்க்கையும் ஒவொரு பகுதிகளாக காட்டுகிறார். அனைத்திலும் வேறு வேறு விதங்களில் அதே சோகம் தான்.  பல இடங்களில் வாசிப்பிற்கு தடை போடும் விதம் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன; நம்மை நிதானமாக யோசிக்கவைக்க! பண்ணையார்களின் நெஞ்சின் எதோ ஒரு மூலையில் கொஞ்சம் ஈரத்தன்மை இருக்கத்தான் செய்கிறது என்றாலும் அவர்கள் மற்று நேரங்களில் இவர்களை நடத்தும் விதம் நம்மை முகாம் சுழிக்க வெக்கிறது. ஜாதி சாடல்கள் நேரடியாக எங்கும் சொல்லப்படாவிட்டாலும் ஆங்காங்கே தன் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது இப்புதினம். சின்ன பிழைக்கு அவமானப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டும் அவனுள் வரும் மாற்றத்தை நம் மனதிலும் கொண்டு வருகிறார் பெருமாள் முருகன். தன்  பாட்டியை சந்திக்க போகும் கூளையன் அவளுடனே இருந்து விட முடியாதா என்று ஏங்கும்  ஏக்கம், தனது சொந்த வீட்டில் கறி சோறு சாப்பிட போன தருணம் தங்கை தம்பியுடன் விளையாடி முடியவில்லையே என்று எண்ணி  அவர்கள் தூங்கும் அழகை ரசிக்கும் தருணம் - இதெல்லாம் நம்மை கசப்பான யதார்த்தத்திற்குள் தள்ளுகிறது. கோவை வட்டார சொல்  பழக்கமில்லாததால் சில வார்த்தைகள் புரிய சிரமமாக இருந்தது. இருந்தும் நான் வசிக்கும் பெருமாள் முருகனின் ஐந்தாவது படைப்பு என்பதால் நிறைய சொற்களுக்கு அர்த்தம் காண முடிந்தது. புயலுக்கு முன்னும் பின்னும் வரும் அமைதியாக கூளையன் கதையின் கடைசியில்  மாறுகிறான். ஒரு முடிவில்லாமல் முடித்திருப்பார் இப்புதினத்தை.
களங்கமற்ற அவர்கள் விளையாட்டுக்களில்  ஆனந்தம் கண்ட நான் வாசித்து முடிக்கையில் அவர்களினூடே ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனாக மாறி வாழ்க்கை தந்த பல கஷ்டங்களை அன்பவித்த வலியோடு வெளியே வந்தேன். வாழ்க்கையின் யதார்த்தங்களை கண்டறிய பிரியப்படும் நபர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு புதினம்.
என்னை மிகவும் பாதித்த ஒரு சில வரிகள் கீழே:
//எங்குமே அழிவு இன்பத்தை உண்டாக்குவதில்லை. எல்லா அழிவுகளும் வேதனைகளைப் பரப்புகின்றன.//
//வவுறி அவனை பார்த்துச் சிரித்தாள். "வயசுக்கு வந்துட்டா நானும் பண்ணையத்த உட்டு நின்னுக்குவன்". அவள் சந்தோஷமாகச் சொன்னாள். உணர்ச்சியற்ற முகத்தோடு அவளைப் பார்த்தான். "நானு?" என்றான். அவனிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.//
கூளையன் சொல்லும் "நானு" என்ற ஒரு வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்களை காணலாம் நாம்! அவன் விட்ட அந்த பெருமூச்சு இன்னும் என்னை அனலாக தாக்கிக்கொண்டு தான் இருக்கின்றது.

4 comments:

  1. 'கூளமாதாரி' புதினத்தை நன்றாக அலசி உள்ளீர்கள். ஆடு மேய்க்கும் சிறுவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த விமர்சனத்தை படிக்கும் பொழுதே ஒரு புரிதல் வருகிறது. சிறு சிறு எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே இருப்பது சற்று உறுத்தல். அதை திருத்திக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது திண்ணம்.

    ReplyDelete
  2. நன்றி தாஸ். தங்கள் ஊக்கத்திற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் எழுத்து பிழை வரத்தான் செய்கின்றது. நானே மறுபடியும் வசித்து பார்க்கையில் எப்படியோ அதை நழுவ விடுறேன். இனிமேல் நன்றாக அலசி பார்க்கிறேன்,

    ReplyDelete
  3. Wonderful review. Childhood always reminds of fond and happy memories for majority of people. The book has various emotions and hardships faced by children; how unfortunate they are. But they did find some relief and happiness and cherish that. Something we have to learn from kids. I'd love to read the book. Thanks for this great review.

    ReplyDelete