Wednesday, 3 February 2021

காடு - ஜெயமோகன் - புத்தக விமர்சனம்

                    இந்த வருடம்  முதல் வாசிப்பாக எடுப்பது என்று முடிவு பண்ணி வைத்திருந்தது இந்த புதினம். என்றுமே ஜெயமோகன் நூல்கள் மேல் ஒரு தனி பிரியம் உண்டு. பெங்களூரு, சென்னை என்று பல இடங்களில் வேலை பார்க்கின்ற போது ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நீல பத்மநாபன், ஆ.மாதவன் இவர்கள் படைப்புகளில் நான் எனது குமரி மண்ணில் இருக்கின்ற ஒரு உணர்வை பெற்றேன். அதிலும் ஜெயமோகன் படைப்புகளில் உள்ள மொழி ஆளுமை என்னை என்றும் வசீகரித்தது. குறிஞ்சித் திணை மற்றும் முல்லைத் திணை என்றும் என்னை வியப்படைய செயகின்ற  நிலைத்திணைகள். அதுவும் ஒரு காரணமே இந்த வருடம் 'காடு' என்ற புதினத்தில் இருந்து தொடங்க.

                      கிரிதரன் என்ற ஒரு முதியவரின் எண்ண அலைகளின் பிரதிபலிப்பு தான் 'காடு'. அவர் இளமை பருவத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். இன்றைய குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் கல்வெர்ட் கட்டும் பணி நடக்கும் காலம். அம்மாவின் சிபாரிசு படி காண்ட்ராக்டர் ஆன மாமா அவனை கட்டுமான கணக்கை பார்த்துக்கொள்ள கல்வெர்ட் பணி  நடக்கும் இடத்திற்கு அனுப்புகிறார். ஊரை விட்டு காட்டில் சென்ற அவனுக்கு அது ஒரு புது அனுபவம். மனிதர்கள், நில அமைப்பு எல்லாம் அவனுக்கு புதுசு. காட்டில் வாழும் மலையத்தி பெண்ணிடம் காதல் வளருது. அவளை சந்திக்க தைரியம் திரட்டி அடர்ந்த மலை காட்டுக்குள் செல்கிறான். அதன் பிறகு அந்த மலை மற்றும் காடு அவன் வாழ்விலும் எண்ணங்களிலும் கொண்டு வரும் மாற்றங்கள் ஏராளம். இந்த நினைவுகளின் சஞ்சாரமே 'காடு'.

                    காடு, மலை, இயற்கை இதன் மேலெல்லாம் மோகம் கொண்ட எனக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அதிலும் எங்க ஊர் வட்டார சொல் மற்றும் நில அமைப்பு என்பது மிக அழகாக சொல்ல பட்டிருக்கிறது. குமரி மக்களை தவிர்த்து மற்றவர்களுக்கு இந்த வட்டார வழக்கு சற்று கடினமாக படலாம். திருவிதாம்கூர் கீழ் இருந்த நாஞ்சில் நாட்டை, ஊர் நிலையை, சாதி மத அமைப்புகளை எல்லாம் அழகாக காகிதத்தில் கொண்டு வந்திருக்கிறார் ஜெயமோகன். காடு பற்றிய வர்ணனை அபாரம். அதுவும் கிரி முதல் முதலாக அடர்ந்த காட்டிற்க்குள் போகின்ற போது சொல்லப்பட்டிருக்கும் கானகத்தின் வர்ணனை எனக்குள் சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷத்தை தந்தது. ரெசாலம், குடுப்பான், அம்மா, அப்பா, என்ஜினீயர் அய்யர், அம்பிகா அக்கா, நீலி எல்லாரும் மிகவும் வித்தியாசமான பாத்திரங்கள். ஒவ்வொருத்தரும் மற்றவர்களிடம் இருந்து நல்ல மாறுபடுகிறார்கள். காதல், காமம், சாதி, இயற்கை, மனித குணங்கள் என்று பல விஷயங்களை தொட்டு செல்கிறந்து இந்த புதினம்.

                    கண்டிப்பாக எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு புதினம். இயற்க்கையை அதனுடைய அழகை எந்த விதத்திலும் குறையாமல் துல்லியமாக தீட்டப்பட்டிருக்கும் ஒரு புதினம். கதை அடிக்கட்டி வரும் ஒரு சொல் 'காடுக்க விளி'. அதாவது காட்டில் இருந்து பழகி சிலருக்கு காட்டை விட்டு விலக முடியாத ஒரு பிணைப்பு ஏற்பட்டுகிறது. எனக்கும் அதே 'காட்டுக்கு விளி' கிடைக்கத்தான் செய்தது இப்புதினத்தின் வாயிலாக.



No comments:

Post a Comment