A simple introvert who likes to confine his world to books and family away from the maddening crowd.. நான் யார்? இன்னும் என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்..... கடல் அலைகளால் சேதப்பட்டு கிடக்கும் வீட்டை தேடி அலையும் சிறு நண்டுபோல் தேடி திரிகிறேன்!!! கடல் மணலில் பதித்த எனது பெயரையும் காலடிதடத்தையும் தொலைத்து விட்டு இன்னும் தேடி அலைகிறேன்!!! பிடித்தவை - தனிமை, ஓவியம், புத்தகம், கோவில்கள், கடல் அலைகள், இயற்கை, குடும்பம், கவிதைகள், இசைஞானியின் இசை
Friday, 8 August 2025
ஐந்து நெருப்பு - ஜெயமோகன் - புத்தக விமர்சனம்
Friday, 14 February 2025
மானசரோவர் - அசோகமித்திரன் - புத்தக விமர்சனம்
நான் அதிகமாக வாசிக்காத சில எழுத்தாளர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் அசோகமித்திரன். 'தண்ணீர்', 'கரைந்த நிழல்கள்' என்று இரண்டு புதினங்கள் பல வருடங்கள் முன்பு வாசித்தது. பிறகு 18-ஆவது அட்சக்கோடு ஆரம்பித்து பாதியில் நின்றுவிட்டது. பல வருடங்கள் கழிந்தது இந்த வருடம் மீண்டும் இவரின் படைப்புகளை வாசிக்கவேண்டும் என்பதின் பலனே இந்த வாசிப்பு.
கோபால் மற்றும் சத்யன்குமார் என்ற இருவரை சார்ந்ததே இந்த புதினம். இரண்டு பெரும் திரை துறையை சேர்ந்தவர்கள். கோபால் மெட்ராஸில் வாழும் தமிழ் கதையாசிரியர். சத்யன்குமார் நாடறிந்த மிக பிரபலமான நடிகர். ஒரு படப்பிடிப்பின்போது இருவரும் சந்திக்க ஒரு நல்ல நட்புமலர்கிறது. சத்யா கோபால் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்க, கோபாலும் சத்யனிடம் அதே நட்பை பாராட்டுகிறார். இவர்கள் நட்பும், வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களும் இருவரின் பார்வையில் சொல்லப்படுவதே 'மானசரோவர்'.
வித்தியாசமான வாசிப்பு. ஒருவன் அவன் செய்யும் தொழில் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து எப்படியெல்லாம் அவன் வகைப்படுத்தப்படுகின்றன என்பதை காணலாம். கோபாலின் மனைவி அவர் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறாள். சத்யனையோ அண்டிப்பிழைக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. தான் யோக்கியன் என்று எங்கும் சொல்லாத நபர். எங்கு சென்றாலும் அவரை திருப்திப்படுத்த நினைக்கும் கூட்டங்கள். கோபால் மீது சத்யன் கொண்ட மரியாதை கலந்த நட்பு இந்த கதையின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. எதையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று பார்க்கும் மனிதனின் குணத்தை இந்த கதை பிரதிபலிப்பதாக எனக்கு பட்டது. எழுத்து நடை சற்று வித்தியாசமாக தோன்றியது. வேகமாக சென்ற வாசிப்பு சில இடங்களில் தடை படுகிறது. புதினம் கோபால் மற்றும்சத்யன் என்ற இருவர் கோணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு இலை கதைமாந்தர்கள் என்றாலும் அவர்கள் கதையின் ஓட்டத்திற்கு பங்களிப்பவர்களாய் இருக்கின்றனர்.
கோபாலின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் சற்றும் எதிர் பாராமல் நிகழ்கையில் நம்மை நிலைகுலைய வைக்கிறது. அதில் இருந்து மீள எனக்கு சற்று நேரம் தேவைப்பட்டது. கதையின் ஓட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருவரின் பின்கதைகளை சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். கோபால் பல இடங்களில் ஒரு யோகியாக தென்படுகிறார். பணம், பதவி, அந்தஸ்து இருந்தும் நிம்மதியும் உண்மையான சந்தோஷமும் அறியாதவராக சத்யன் வளம் வருகிறார். ஒரு மரணம் கூட நம்மை பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது. புதினம் முடிகையில் நமது மனதிற்குள் அமைதிபரவுவது போல் ஒரு மாயை.
ஹிமாலய மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு ஏரி தான் இந்த மானசரோவர். இங்கு குளித்தால் பாவங்கள் தீரும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. வாழ்க்கை என்ற ஒரு புதிரை புரிந்துகொள்ள நினைக்கும் சில மனிதர்களின் கதையே இந்த "மானசரோவர்".
Friday, 24 January 2025
ஆளண்டாப் பட்சி - பெருமாள் முருகன் - புத்தக விமர்சனம்
பெருமாள் முருகன் - என் வாசிப்புக்கும் சிந்தனைக்கும் ஒரு புதிய கோணத்தை தந்தவர் இவர். தி. ஜானகிராமன் மற்றும் ஜெயகாந்தனுக்கு பிறகு என்னை வாசிப்பின் வேறு தளங்களுக்கு எடுத்து சென்றவர் இவர். சென்ற வருடம் அவரின் புத்தகங்கள் எதுவும் வசிக்கவில்லை என்பதால் இந்த வருடம் அவரிடம் இருந்தே ஆரம்பிக்க நினைத்ததின் விளைவு தான் இந்த வாசிப்பு.
முத்து தன குடும்பத்தின் கடைக்குட்டி. செல்லமாக வளந்தவன் பாக பிரிவினையின் போது குடும்பத்திற்கு வேண்டாதவனாகிறான். ஒரு கட்டத்தில் தன மனைவிக்கு ஒரு அவமானம் நேர முத்து தன பிறந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்து புது இடத்தை தேடி செல்வதே இந்த புதினம்.
என் வரையில் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்பது தன் வாசகனை அந்த கதைக்குள்எப்படி இழுத்து செல்ல முடியும் என்பதில் தான். தனது ஒவ்வொரு புதினத்தில் அந்த அனுபவத்தை எனக்கு பெருமாள் முருகன் தருகிறார். இந்த கதையிலும் அப்படித் தான். என்னையும் முத்து மற்றும் குப்பண்ணாவுடன் புது இடத்தை தேடி செல்ல வைக்கிறார். கரிசல் நிலத்தை அறியாதநான் இந்த புதினத்தின் வாயிலாக அந்த நிலத்தை அறிந்து, அங்குள்ள மக்கள், விலங்குகள், உணவு முறை, பழக்க வழக்கங்கள் என பல விஷயங்களை அறிய நேர்ந்தேன். பாசம் என்ற ஒரு உணர்வு இருந்தாலும் பணம் சொத்து என்று வரும்போது பாசத்திற்கு இடமேது என்று பல சம்பவங்களை காண்கிரோம். அதுபோல் ஒன்றை இங்கும் நமக்கு காட்டுகிறார் எழுத்தாளர். இடம்பெயர்தல், புது இடத்தில் தந்து வாழ்க்கையை மாற்றி அமைத்தல் என்பது அவ்வளவு தத்ரூபமாக இங்கு காட்டியுள்ளார் பெருமாள் முருகன். நம்மில் சில பேர் இந்த அநுபவத்தை கடந்து சென்றிருப்போம் அல்லவா!
புது இடம் தேடுவது, வாங்குவது, வேறு ஊரில் வாஸ்த்த தன் வாழ்க்கையை பறித்து இங்கு மீண்டும் புதிதாக நட்டு வளர்த்தும் விதம் மிகவும் நன்றாக காட்டியுள்ளார் எழுத்தாளர். அவர் எழுத்து நடைநம்மை அந்த கதைக்குள் இழுத்து செல்கிறது. செல்லமாக வளர்ந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றி கொண்டு வாழ்க்கையை நிமிர்ந்த பார்வையோடு எதிர்கொள்ளும் முத்து மனதிற்குள் நிற்கிறார். அவனுக்கு பக்கபலமாக இருக்கும் குப்பண்ணன், மனைவி பெருமா, அண்ணன்கள், தாய் தந்தையர், ஊர் தலைவர் என்று பல பாத்திரங்கள் வந்து போகிறது. எந்த பாத்திரங்களும் சும்மா எழுதப்படவில்லை. பெருமா ஒரு முத்துச்சியான வலிமையான பெண்ணாக கட்டப்படுகிறாள். முத்துவின் அப்பா அம்மா சொல்லும் சொற்கள், அவனது அண்ணனால் நிகழும் இன்னல் இவையெல்லாம் நமக்குள்ளும் ஊடுருவி வழியை தருகிறது. குப்பண்ணாவை முத்து நடத்தும் விதம், சரிசமமாக பார்க்கும் விதம், செய்யும் செயல்கள், பதிலுக்கு ஊரைவிட்டு வெளியே இது வரை செல்லாத அவன் எப்படி முத்துவுக்கு உதவுகிறான் என்பதை வாசிக்க அப்படி ஒருமகிழ்ச்சி. முத்துவின் சிறு பெண் மற்றும் பெருமாவின் பாட்டி என்று சில பக்கங்களே வந்து பாத்திரங்கள் கூட அவ்வளுவு பொறுப்பான, வலிமையானவை.
'மாற்றம் ஒன்றே மாறாதது' - இந்த நியதியை உண்மையாக்கும் விதம் மனிதர்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். படிப்பு, வேலை, பிரிவு, துக்கம், ஆரம்பம் என்று பல காரணங்கள். அதில் வரும் இன்னல்கள், அதை கடந்து போகும் தருணங்கள், அதனால் நம்முள் வரும் மாற்றங்கள் என்று பல விஷயங்களை பற்றி பேசி ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருகிறந்து இந்த 'ஆளண்டாப் பட்சி'.
Friday, 17 January 2025
ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா - புத்தக விமர்சனம்
Friday, 20 December 2024
ஆலம் - ஜெயமோகன் - புத்தக விமர்சனம்
ஒவ்வொரு வருடமும் புத்தகக்கண்காட்சியின்போது தவறாமல் ஒரு சில எழுத்தாளர்களின் புத்தகங்களில் ஒன்றேனும் வாங்கும் பழக்கம் என்னிடம் உண்டு. அதில் ஒருத்தர் ஜெயமோகன். அப்படி 2024இல் வாங்கின புத்தகம் தான் ஆலம். ஒரு தொலைக்காட்சி தொடருக்காக எழுதப்பட்ட கதை என்று தெரிந்ததும் பரபரப்பான ஒரு கதைக்களம் எதிர்பார்த்து வாசித்தது தான் இந்த புதினம்.
திருநெல்வேலியை மையமாக நடக்கும் கதை இது. பகை என்ற சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு குடும்பங்களில் ஒன்றைச் சார்ந்தது இந்த புதினத்தின் நிகழ்வுகள். இரண்டு குடும்பங்களின் நடுவே நடக்கும் ரத்த வெற்றியாட்டத்தின் நடுவில் ஒரு இளைஞன் தவறாகக் கொலை செய்யப்படுகிறான். அதையும் அந்த குடும்பம் துச்சமாக மதிக்கிறது. வருடங்கள் செல்ல செல்ல அந்த கொலை நிகழ்த்திய குடும்பத்தின் அங்கங்கள் பலர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த குடும்பமே பூண்டோடு அழியும் நிலையில் இதற்க்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். இரு குடும்பங்களின் பகையால் நடந்த கொலைகளா? அல்லது வேறு யாராவது நிகழ்த்தும் வெறியாட்டமா என்று கண்டறிவதே இந்த புதினம்.
முதல் பக்க முதல் கடைசி வரை பரபரப்பாகவே செல்லும் கதை இது. ஜெயமோகன் வழக்கமாக எழுதும் பாணியிலிருந்து சற்று வித்தியாசமாக நிற்கிறது இந்த புதினம். வேகமான நடையால் நம்மை கட்டிப்போடுகிறார். ஆனால் அந்த வேகம் கதையின் உணர்ச்சியை எங்கேயும் சிந்திக்கவில்லை. கதை மாந்தர்கள் அனுபவிக்கும் மரண பயமும், கோபமும், பகைமை உணர்வையும் நம்மால் உணர முடிகிறது. திரைக்காக எழுதப்பட்டதாலோ என்னவோ ஒரு திரைக்கதை வசிக்கும் அனுபவம் எனக்குள் இருந்தது. இந்த புதினத்தின் பெரு ஆலம். அதன் பொருள் நஞ்சு. பகையானது அதனைச் சார்ந்து இருக்கிறவர்களுக்கு எப்படி நஞ்சாக மாறுகிறது என்பதை இங்குக் காணலாம். ஒரு சாதுவான தனி மனிதனை எப்படி அது ஒரு மிருகமாக மாற்றுகிறது என்பதை மிக அழுத்தமாக இந்த புதினம் காட்டுகிறது.
ஆரம்ப பக்கங்களில் பூஞ்சையைப் பற்றி வரும் பேச்சு எதற்கு என்று நம்முள் கேள்வி எழுந்தாலும் அதற்கும் கதைக்குமான தொடர்பை அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பகைமையைப் பூஞ்சையோடு நம்மால் உவமைப்படுத்த முடிகிறது. கதை முழுதும் நாம் இதைக் காணலாம். கத்தியின் முடிவுக்கு முன்னால் வரும் சில பாகங்கள் சற்று நம்பகத்தன்மை குறைவாக இருந்தது என்றாலும் நாம் அதைப் பெரிதாக நினைக்காத அளவுக்குக் கத்தி நகரும். ஒரு வழக்குரைஞரின் ஜூனியரின் பார்வையில் நாம் இந்த கதையைக் காண்கிறோம். கதையை ஒரு மூன்றாம் நபராகக் கதையின் வெளியிலிருந்து ரசிக்க அது உதவுகிறது. இந்த கதையில் வரும் கதை மாந்தர்கள் மிகவும் ஆழமானவர்களாகப் படுகிறார்கள். இருந்தும் பகை, பயம் இரண்டும் பொதுவானதாக உள்ளது. பழமை, புதுமை, ரத்த வெறியாட்டத்தை விட்டு வெளியே செல்ல நினைக்கும் சிலர், வேறு வழியில்லாமல் சிக்கித் தவிக்கும் சிலர் என்று வித்தியாசமான மாந்தர்கள்.
மிஷ்கின்-கௌதம்மேனன்-வெற்றிமாறன் கூட்டணியில் திட்டமிடப்பட்ட ஒரு தொடருக்கான கதை. அது எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லோராலும் வாசித்து ரசிக்க முடிந்த ஒரு கதை. கோபமும் பகையும் எதற்கும் தேர்வு அல்ல என்று அந்த இரண்டையும் வைத்தே சொல்லப் படும் ஒரு கதை. பகைமையும் ரத்த நெடியும் நிறைந்த ஓர் புதினம்.
Thursday, 19 December 2024
காகித மலர்கள் - ஆதவன் - புத்தக விமர்சனம்
இந்த வருடம் இரண்டு எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்கு அறிமுகமானது. ஒன்று இமயம் அவர்கள். இன்னொன்று ஆதவன். ஆதவன் என்ற பெயரைக் கேட்டதுண்டு என்றாலும் இது வரை அவரின் படைப்புகள் எதுவும் வாசித்ததில்லை. நூலகத்தில் சென்ற பொது பார்க்க நேர்ந்த இந்த புத்தகத்திலிருந்து இவருடன் அறிமுகம் ஆகலாம் என்று முடிவு செய்தேன்.
தில்லியில் வசிக்கும் பசுபதி மற்றும் அவர் குடும்பத்தின் வாழ்க்கையில் சில நாட்களே இந்த புதினம். அரசு அதிகாரியாகப் பனி புரியும் பசுபதி, அதற்க்கேரப்ப பகட்டு வாழ்க்கை வாழும் மனைவி. குடும்பத்தின் மீது பிணைப்பே இல்லாமல் வாழும் பத்ரி, வாழ்க்கையை எந்த திசைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று தெரியாத செல்லப்பா, அமெரிக்காவில் முதுகலை படிப்பு படிக்கும் விசுவம் என்று இவர்கள் சிந்தனைகளினூடே செல்லும் கதை இது.
எனக்கு இந்த வாசிப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றியது. கதையானது கதைமாந்தர்களின் நினைவுகளின் வாயிலாக நகர்கின்றது. நிகழ்வுகளைவிட நினைவலைகளே இதில் நிறைந்திருக்கிறது. இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. கதை முழுதும் தில்லியில் நடக்கிறது. ஆதவன் சில காலம் அங்கு வேலை புரிந்ததாலோ என்னமோ அந்த இடத்தை தத்ரூபமாகக் காட்டியுள்ளார். இடம், சுற்றுச்சூழல், மக்கள், நெரிசல் என்று அனைத்தையுமே நம் கண் முன்னாள் காட்டுகிறார். சிந்தனைகளினூடே நகரும் இந்த கதையில் பல நம் சிந்தனைகளை அங்கங்கே பிரதிபலிக்கத்தான் செய்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை சமூகச் சூழல்களால் எப்படி மாறுகிறது என்று இதில் காணலாம். சிந்தனைகள் கூட. சிந்தனைகளின் உள்ளும் புறமும் நடக்கும் சம்பாஷணைகள் பல கதைமாந்தர்கள் எப்படி வாழ்க்கையைப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தனி நபர் சுதந்திரம், பெண்ணியம், சமூக மாற்றங்கள், காதல், காமம், வேளையில் நடக்கும் அரசியல்கள் என்று பல விஷயங்கள் இங்குப் பேசப்படுத்து. இருந்தும் இந்த கருத்துக்களும் கதைமாந்தர்களும் நம் மனதில் அவ்வளவாக ஒன்றவில்லை. அங்கங்கே சில இடங்களில் வாசிப்பு சற்று தொய்வடைகிறது.
ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை ஆதவன் இதில் எனக்கு அளித்திருக்கிறார். ஆழமான கருத்துக்களைக் கொண்டாலும் என் மனதுள் ஆழமாகப் பதியவில்லை. ஒரு முறை வாசிக்கலாம்.
Wednesday, 11 December 2024
வெல்வெட் குற்றங்கள் - ராஜேஷ் குமார் - புத்தக விமர்சனம்
Wednesday, 27 November 2024
அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன் - புத்தக விமர்சனம்
Monday, 14 October 2024
பந்தயப் பாவை - பட்டுக்கோட்டை பிரபாகர் - புத்தக விமர்சனம்
சென்னையில் வேலை
இந்த புத்தகம் இரண்டு மர்ம கதைகள் கொண்டது. முதல் கதை ஒரு ஓட்ட பந்தய
இரண்டுமே பரத்-சுசீலா கதைகள் தான். இரண்டுமே விறுவிறுப்பான கதைக்களம் கொண்டது. முதல் கதையிலோ
மொத்தத்தில், ஒரு வாட்டி
Monday, 19 August 2024
நூலக மனிதர்கள் - எஸ்.ராமகிருஷ்ணன் - புத்தக விமர்சனம்
நூலகங்கள். எந்த ஊர் சென்றாலும் நான் முதலில் அங்கு செல்ல நினைக்கிறது நூலகங்கள் மற்றும் புத்தக கடைகள் தான். அப்படி பட்ட எனக்கு இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் தென்பட்ட புத்தகம் தான் இந்த நூலக மனிதர்கள். புதினங்கள் வாசித்தல் சற்று சலிப்பு தட்டவே இந்த புத்தகத்தை படிக்கலாம் என்று நினைத்தேன்.
இந்த புத்தகமானது எஸ். ரா சென்றுள்ள நூலகங்கள் மற்றும் அங்கு அவர் சந்தித்த வேறுபட்ட மனிதர்கள், வேறுபட்ட அனுபவங்கள் - இவைகளின் தொகுப்பே இந்த புத்தகம். தனக்கு வாசிக்கதெரியாது என்றாலும் மகளுக்காக லா.சா.ரா-வின் புத்தகங்களை தேடி எடுத்து செல்லும் அப்பா, ஞாயிற்று கிழமையானால் நூலகம் வந்து வாசிக்கும் ஒரு குடும்பம், சமையல் குறிப்பு புத்தகத்தை மட்டுமே எடுத்து செல்லும் காவலர், நூலகத்தில் புத்தகங்கள் வசிப்பதற்காகவே அங்கு வேலை செய்யும் அகதிகள் என்று அவர் நூலகங்களில் கண்டவர்களை பற்றி சொல்லும் கட்டுரை தொகுப்பு இந்த நூலக மனிதர்கள்.
எஸ்.ரா-வின் கட்டுரை தொகுப்புகளுக்கென்று ஒரு தனி அழகு உண்டு. நேர்த்தியான சிந்திக்க வைக்கும் எழுத்து நடை. இதில் வரும் சில தொகுப்புகள் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. படிப்பின், வாசிப்பின் முக்கியத்தை உணர்த்தும் கட்டுரைகள் அவை. சில கட்டுரைகளினூடே அவர் சில கருத்துக்கள் மற்றும் திட்டங்களை கூறியுள்ளார். அது அமல்படுத்தினால் நன்றாக தான் இருக்கும். சற்று பொறாமையாக தான் இருந்தது எஸ்.ரா-வின் அனுபவங்களை வாசிக்கையில். எத்தனை பயணங்கள் அதில் தான் எத்தனை நூலக அனுபவங்கள்.
என்றுமே எஸ்.ரா-வின் புதினங்களை விடவும் அவரின் கட்டுரை தொகுப்புகளை நேசிக்கும் எனக்கு இது ஒரு சிறந்த வாசிப்பாக அமைந்தது. நூல்கள் மற்றும் நூலகங்களை நேசிக்கும் அனைவரால் வாசிக்க படவேண்டிய புத்தகம்.
நான் வாசித்த எஸ்.ரா-வின் மற்ற புத்தகங்களின் விமர்சனங்களை வாசிக்க கீழே கொடுத்துள்ள இனைப்புகளைபார்க்கவும்.
Thursday, 25 July 2024
சிதம்பர ரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன் - புத்தக விமர்சனம்
சின்ன வயதில் இருந்தே நான் தொலைக்காட்சியில் ரசித்த தொடர்களில் பலவற்றின் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். மர்ம தேசம், சிவமயம், கிருஷ்ணதாசி, ருத்ரவீணை, கோட்டைபுரத்து வீடு என்று பல தொடர்கள். பிறகு வாசித்தலே வாழ்க்கையானபோது அதிகமாக வாசித்ததும் இவர் புத்தகங்களைத்தான். இந்த வருடம் இவரின் படைப்பில் எனது முதல் வாசிப்பு இந்த புதினம்.
காவேரி கரையில் உள்ள மகேந்திரமங்கலம் என்ற தனது ஊருக்கு ராஜேந்திரன், மனைவி, மகளோடு வருகிறார். குடும்ப சொத்தை விற்றுவிட்டு போவது என்பதே லட்சியம். தடங்களில் ஆரம்பிக்கும் இந்த பயணம் ஊருக்கு வந்த பிறகும் மேலும் மேலும் தடங்கல்களாக மாறுகிறது. வீட்டில் அவர் கண்டெடுக்கும் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி. அதை கண்டுபிடித்த பின் ஊருக்குள்ளும் குடும்பத்திலும் நிகழும் விசித்திரமான சம்பவங்களும் அதன் பின்னணி கண்டறிவதுமே இந்த புதினம்.
சித்தர்கள் ஆன்மிகம் என்ற எழுத்தாளரின் பழக்கப்பட்ட பாணியில் கதை நகர்கின்றது. அடிப்படை கருத்துக்கள் இவைகள் என்றாலும் வித்தியாசமான கதைக்களம் வாசிப்பை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. 250 பக்கங்கள் கிட்ட வரும் இந்த புத்தகம் சற்றும் சலிப்பு தராமல் நகர்கின்றது. ராஜேந்திரனின் மகளில் தெரியும் மாற்றங்கள் அதிகமாக கதையின் சுவாரஸ்யாவும் அதிகரிக்கிறது. இரண்டு மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஆரம்பிக்கும் கதையில் திடீரென்று ஏகப்பட்ட பாத்திரங்கள் வந்து போகின்றன. இருந்தும் கதையின் வேகத்தை எந்த அளவிலும் இது பாதிக்கவில்லை. ஒரு படம் பார்க்கின்ற போல் எண்ணம். இருந்தும் கதை சற்று அவசரப்படுத்தியது போல் தோன்றியது. சில கேள்விகளுக்கு பதில் தெரியாமலே போனது போல் ஓர் உணர்வு,
விறுவிறுப்பாக நகரும் கதைகளை வசிப்பவர்களுக்கு இந்த புதினம் ஒரு நல்ல வாசிப்பாக அமையும். அனைவராலும் வேகமாக ஒரு முறை வாசிக்க தகுந்த ஒரு புத்தகம்.
Sunday, 23 June 2024
செல்லாத பணம் - இமையம் - புத்தக விமர்சனம்
சென்ற வருடம் இறுதியில் என் புத்தக அலமாரியை இடம் மாற்றுகையில் இந்த புத்தகம் கண்ணில் பட்டது. சென்ற வருட புத்தக கண்காட்சியில் வாங்கி பிறகு அலமாரிக்குள் மறக்கப்பட்டு இருந்தது. இமயம் என்ற பெயர் கேட்டுள்ளேன். என் நண்பர்கள் அவரை பற்றி சொல்லியிருக்கிறார்கள். சரி இந்த வருடம் இந்த புத்தகம் படித்து விடலாமே என்று முடிவின் விளைவே இந்த வாசிப்பு.
அப்பா, அம்மா, அண்ணன் என்று ஒரு அழகான குடும்பத்தில் வளரும் ரேவதி. காதல் கல்யாணத்தால் குடும்பத்திடம் இருந்து பிரிந்து வாழ்கிற நிலைமை. அது காதல் கல்யாணம் என்று சொல்ல இயலாது. அவளை ஒருதலையாக காதலித்தவன் உயிரை விட்டுவிடுவேன் என்று சொன்னதால் ரேவதியின் முடிவு அவனை கல்யாணம் பண்ணிப்பதே என்றாகிவிட்டது. திடீர் என்று ஒரு நாள் அவள் தீவிபத்தில் சிக்கி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். இதன் பின் என்ன நடக்கிறது, இந்த நிகழ்வால் அவள் குடும்பத்தினருக்கு ஏற்படும் கஷ்டங்களும் மனக்குமுறல்களுமே இந்த புதினம்.
எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பித்த வாசிப்பு. ஆனால் போக போக மீண்டு வரமுடியாத ஒரு அனுபவத்திற்கு உள்ளாக்கியது இந்த புதினம். எழுத்தாளர் யதார்த்தத்தை தத்ரூபமாக சொல்லியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மிடம் வாழ்க்கையை சொல்லி செல்கிறது. ரேவதி முக்கால்வாசி கதையிலும் மற்றவர்கள் பேச்சிலும் நினைப்பிலுமே சஞ்சரிக்கிறாள். இந்த புதினத்தை வாசிக்கிறவர்கள் கண்டிப்பாக ரேவதியின் வாழ்க்கையையும் வழியையும் கஷ்டங்களையும் எளிதாக கடந்து போக மாட்டார்கள். கதை அதிகமாக நகரும் இடமானது ஜிப்மர் வளாகம் தான். அதுவும் குறிப்பாக தீக்காயசிகிச்சை பிரிவு. அங்கு நடக்கும் அவலங்கள் மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார், அங்கு தீக்காயம் பட்டு வருகிறவர்கள் வலி ஒரு புறம் என்றால் அவர்களுக்காக ஏங்கி அரை வெளியில் காத்திருக்கும் குடும்பத்தினர் மறு புறம். ஒரு சம்பவம் சுற்றியுள்ள எத்தனை பேரை பாதிக்கின்றது. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, புருஷன் என்று பல பேர் பார்வையில் இந்த கதை நகர்கிறது. ஒரு அற்பமான விஷயத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிறததா என்று நாம் ரேவதியை பற்றி நினைக்கலாம். அது ஒகாதல் என்று கூட நம்மால் சொல்ல இயலாது. ஆனால் போக போக அவள் அனுபவிக்கும் வலி அவள் வாழ்க்கையை பார்க்கும் விதம் மருத்துவமனையில் படும் இன்னல்கள். கோபம், பகை மற்றும் ஏற்றத்தாழ்வு மனிதர்களை எப்படியெல்லாம் நிலைகுலைய வைக்கிறது என்று இதில் நாம் காணலாம். இந்த புதினத்தை எளிதில் கடந்து செல்லமுடியாமல் பல முறை பக்கங்களை விரித்து வைத்து சிந்தனையில் ஆழ்ந்த்திருக்கிறேன், கணீர் விட்டிருக்கிறேன். அவளது அண்ணனும் அப்பாவும் அவ்வளவு கோவம் வைத்திருந்தாலும் செய்தி அறிந்த நொடிப்பொழுதில் அதெல்லாம் மறக்கப்பட்டது. ரேவதியின் கணவன் மீது வெறுப்பு ஏற்பட்டாலும் கூட கடைசியில் சில விஷயங்களில் அவன் நினைப்புகள் சரியென பட்டது. பணத்தை வாரி இறைக்க தயாராக இருந்தும் அதை வைத்து ஒன்றும் செய்யமுடியாத நிலைமை. பணத்தால் மரணத்தை, வலியை போக்கமுடியுமா என்ன? மிக சரியாகவே இந்த பேரை இமையம் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த கதாபாத்திரங்கள் மட்டுமின்றி புதினம் முழுதும் வந்துசெல்லும் பாத்திரங்கள் மூன்று - மரணம்,பணம், ஆம்புன்ஸ்.
அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாத புதினம். பல சிந்தனைகள் சில கண்ணீர்கள் நெறய சிந்தனை என்று எனக்குள் பலவிதமான உணர்ச்சிகளை உண்டாக்கிய வாசிப்பு. கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புதினம். இமையம் கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்கப்படவேண்டியவரே. இளகிய மனம் படைத்தவர்களுக்கு இது சற்று கடினமான வாசிப்பாகவே அமையும்.
Monday, 15 April 2024
ராஜகேசரி - கோகுல் சேஷாத்திரி - புத்தக விமர்சனம்
கதைகள் என்றுமே பல விதங்களில் சொல்ல படுகின்றன. இருந்தாலும் துப்பறியும் கதைகள் மீது எனக்கு உள்ள நாட்டம் வேறு எதிலும் இல்லை. அதுவும் இந்த புத்தகத்தின் கருவை வசித்த பொது வித்தியாசமான ஒரு துப்பறியும் கதையாக பட்டது.
ராஜ ராஜ சோழனின் பிறந்தநாள் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திர நாளன்று வரவுள்ளது. தலைநகரில் அதற்கான விமரிசையான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் ராஜாவை கொலை செய்ய ஒரு சாதி திட்டம் தீத்தப்பட்டு வருகிறது என்று ஒரு ரகசிய தகவல் அமைச்சர்களுக்கு வருகின்றது. இதே வேலையில் தலைநகரத்தில் இருந்து சில காத டூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீரன் ஒருவர் மர்மமான முறையில் கொள்ள படுகிறான். அந்த தகவலை அம்பலவாணர் தலைநகருக்கு கொண்டு செல்ல அங்க அவருடன் இணைந்து சேனாதிபதி பரமன் மழபாடியார் இந்த திட்டத்தின் வேர் வரை செல்ல யத்தனிக்கிறார். ஆனாலும் அது அவ்வ்வளவு எளிதல்ல. யார் இந்த சதிகாரர்கள் - பாண்டியர்களா இல்லை சேரர்களா?சதிகாரர்கள் ஆசை நிறைவேறுமா? சோழநாட்டு பிரமுகர்களால் இதனை முறியடிக்க இயலுமா? மழபாடியார் ராஜ ராஜனை காப்பாற்றுவாரா? இதுவே கதைக்களம்.
இந்த புதினத்தில் என்னை மிகவும் கவர்ந்தது இதன் கதைக்களம் தான். ஏற்கனவே இந்த எழுத்தாளரின் பைசாசம் இது போன்று தான். அதாவது பண்டைய காலத்தில் நடக்கும் ஒரு குற்றமும் அதனை துப்பு துலக்கி தீர்வை காணும் அந்த காலத்து நபர்களும். இந்த மாதிரி இரண்டையும் அருமையாக இணைத்துள்ளார் எழுத்தாளர். 'ஹிஸ்டாரிகல் பிக்ஷன்' என்ற ஒரு வகை புனைவை மேற்கொண்டுள்ளார்.கற்பனையுடன் உண்மையும் கலந்து எழுதப்படும்பொழுது நம் வாசிப்புக்கு இன்னும் மெருகேறுகின்றது. கோகுல் அவர்களின் எழுத்து நடையும் கற்பனையும் நம்மை அந்த காலத்துக்கே கொண்டு சென்று அம்பலவாணர் மற்றும் மழபாடியார் இவர்களுடன் இணைந்து கதையின் முழு ஓட்டத்தையும் உடனிருந்து கண்டு கழிக்கிறோம். முக்கியமான கதைமாந்தர்கள் சிலவர்களே என்றாலும் நிறையவே சின்ன சின்ன பாத்திரங்கள் வந்து செல்கின்றன. வாசிப்பின் ரசனையை அது மேலும் யதார்த்தமாக்கிறது. அங்கு அங்கு வரும் சங்க காலத்து வட்டார வழக்கு அழகு.
எனக்கு இது வேகமான வாசிப்பிப்பாகவே அமைந்தது. அதே நேரத்தில் விறுவிறுப்பான ஒரு திரைப்படம் கண்ட நிறைவு. ஒரு வேகமான சுவாரஸ்யமான வாசிப்பை விரும்புகிறவர்கள் இதை கட்டாயம் படிக்கலாம்.
Thursday, 29 February 2024
பசி - நட் ஹாம்சன் - புத்தக விமர்சனம்
இந்த வருடம் புத்தக கண்காட்சியில் வாங்கினது இந்த புத்தகம். இதை பற்றி நான் முன்னதாக கேள்விப் பட்டதில்லை என்றாலும் இந்த அட்டைப்படம் எனக்கு பிடித்திருந்தது. கா.நா.சு வின் மொழி பெயர்ப்பு என்பதால் வாங்கி படித்து பார்ப்போமே என்ற ஒரு ஆவல்.
ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளே இந்த புதினம். ஒரு ஏழையான எழுத்தாளர்நோர்வேயில் உள்ள ஒரு நகரத்தில் வசித்து வருகிறான். தன் வீட்டு வாடகை கூட கட்ட வழியில்லாத ஏழை. சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல் அவஸ்தை படுகிறான். எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தின் மேல் சிறிய மரக்கட்டைகளை வாயிலிட்டு உரியுறான் தன பசியை போக்கிக்கொள்ள. தனது தொழில் தொடர காகிதங்களோ, பென்சிலோ கூட வாங்க வழியில்லாமல் தனது கோட்டின் பொத்தானை பிரித்து விற்கும் அளவிற்கான கஷ்டம். ஒரு கட்டத்தில் அவன் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக கூட நடந்துகொள்கிறான். அவன் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள், சம்பவங்கள், பசி, இருட்டில் வெளிச்சமாய் சிறிய ஒரு காதல் என்று பல அத்தியாயங்கள் தான் இந்த பசி.
ஒரு வித்தியாசமான வாசிப்பு. ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றிய கதை சில பக்கங்கள் தாண்டி அந்த கதைக்குள் என்னை கொண்டு சென்றது. அந்த எழுத்தாளனின் வாயிலாகவே நாம் இந்த கதையா; அதாவது அவன் வாழ்க்கையை பார்க்கிறோம். பசி மற்றும் குளிர் வாட்டி எடுக்கும் தருணங்களை மிகவும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் கதையின் ஆசிரியர். காசில்லாத ஒரு மனிதன் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்று தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. என்ன தான் ஏழ்மை அவனை வாட்டினாலும் நல்ல இருந்த நேரத்தில் வாழ்ந்த வாழ்க்கயே வாழ நினைக்கிறார். நண்பர்களிடம் உதவி கேட்க வெட்கப்படுகிறார், அத்தோடு சந்தோஷமாக இருப்பது போல் அவர்களிடம் பிரஸ்தாபிக்கிறார். தான் கஷ்டப்படும் போதும் மற்றவர்களுக்கு சிறு உதவிகள் புரிவது உதவும் மனப்பான்மையை விட தன்னை ஒரு வசதியானவர் என்று காட்டிக்கொள்ளவே என்றுதான் யோசிக்க தோன்றுகிறது. நடுவில் வரும் காதல் பகுதி மென்மையாக வந்து அதே போல சென்று விடுகிறது. சில நேரங்களில் மனச்சிதைவுக்கு உள்ளாகும் தருணங்கள் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. க.நா.சு -வின் மொழிபெயர்ப்பு மிகவும் கச்சிதமாக உள்ளது. அந்த கதாபாத்திரத்தின் அனுபவங்கள் துல்லியமாக மொழிபெயர்த்துள்ளார் க.நா.சு.
இந்த புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பசியின் கொடுமை ஒரு மனிதனை எப்படி எல்லாம் ஆட்கொள்ளும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த புதினம் கண்டிப்பாக வாசிக்க படவேண்டிய ஒன்று தான்.
Friday, 16 February 2024
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன் - புத்தக விமர்சனம்
இரண்டு மூன்று வருடங்கள் முன்பு கேள்விப்பட்டு கடைசியில் வீட்டிற்கு பக்கம் இருக்கும் நூலகத்தில் யதேர்ச்சியாக கண்டெடுத்து வாசிக்க நேர்ந்தது தான் இந்த புதினம். எதாவது விமர்சனம் இல்லை முன்னுரை இந்த புதினத்தை பற்றி கேட்டதுண்டா என்றால் இல்ல. இருந்தாலும் எதோ ஒரு உந்துதல் இதை படித்தே ஆகவேண்டும் என்று.
புலிப்பனம் என்ற ஊரில் தான் இந்த கதையின் பெயரான புத்தம் வீடு உள்ளது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் நலிந்து போன குடும்பம். லிசி, அம்மா, அப்பா, தாத்தா, சித்தி, சித்தப்பா என்ற ஒரு குடும்பம். லில்லியின் பள்ளிப்பருவம் துவங்கி இந்த கதை அவளோடு வளர்கிறது. இடையில் ஏற்படும் சந்தோஷங்கள், கஷ்டங்கள், காதல் என்று பல நிகழ்வுகள். அந்த வீட்டில் உள்ளவர்களையும் அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் லிஸியின் பார்வையில் காணும் நாம் அவளுள் காதல் மலர்வதையும் காண்கிறோம் அந்த காதல் கைகூடியதா என்று சொல்வது இந்த 'புத்தம் வீடு'.
வாசிக்க ஆரம்பித்தபோது சாதாரணமாக தோன்றிய ஒரு கதை. படிக்க படிக்க மனதிற்குள் பல விஷயங்கள் வந்துபோயின. வெறும் ஒரு காதல் கதையாக மட்டும் இதை பார்த்துவிட முடியாது. கதை நடக்கின்ற காலகட்டம் என்று தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும் சுதந்திரம் அடைவதற்கு முன் என்பது நமக்கு புலனாகிறது. அந்த காலகட்டத்தில் பெண்களின் நிலைமையை தத்ரூபமாக ஹெப்சிபா அவர்கள் எழுதியுள்ளார். லிசி பள்ளிக்கு அனுப்ப பட்டாலும் வயதுக்கு வந்த பிறகு அவளது படிப்பை நிப்பாட்டி வீட்டுக்குள் அடைக்கப்பட்டாள். வயது வந்ததற்கு ஒரு குற்றமா? இது ஒரு சிறையில் அடைப்பது போன்ற வாழ்க்கை என்பதை லிசி யோசிக்கிறாள். அந்த குடும்பத்தின் ஆண்கள் பெருமை பேச மட்டுமே லாயக்கானவர்களாய் வந்து போகிறார்கள். அவளது தாத்தா கூட அப்படி தான் என்றாலும் அவள் மேல் கொள்ளை ஆசை அவருக்கு. லிசி மற்றும் அவர் தாத்தா இடையேயான இந்த அன்பை அழகாக காட்டியுள்ளார் ஹெப்சிபா அவர்கள். பாட்டி, சித்தி, அம்மா என்று புத்தம் வீட்டு பெண்கள் அனைவருமே வீட்டின் நான்கு சுவர்களை மட்டுமே அறிந்தவர்கள். தேவாலயம் செல்வதற்கு மட்டும் வெளியே செல்கிறவர்கள். அம்மா சித்தி, அப்பா, சித்தப்பா இவர்களிடையே ஏற்படும் மனஸ்தாபங்களை ஆழமாக காட்டப்பட்டுள்ளது. அப்பாவின் குடிப்பழக்கம், சித்தப்பாவின் ஊதாரித்தனம் மற்றும் கோபம் என்று கதை முன்னே நகர நகர உறவுகள் தடம் மாறி போகிறது. லிசி தனது சித்தியோட பெண் லில்லி மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அவர்களிடையே இருக்கும் அன்பு வயது ஏற எப்படி மாறுகிறது என்று காட்டும் தருணங்கள் அழகு. தனக்கு தானே லிசி அழும் தருணங்கள் எதார்த்தமானவை.
படிப்பு, வரன் தேடல், பெண் பார்க்கும் படலம், நிராகரிப்பு இதில் எல்லாம் பகடைக்காய் போல அவள் அலைக்கழிக்க படுகிறாள். இதில் மலரும் காதல் மிக அழகாக உள்ளது. இரண்டு பேரும் கிருத்துவர்கள் என்றாலும் ஜாதி அந்தஸ்து எல்லாம் பார்க்க படுகின்றது. அதையும் மீறி அவர்களுக்குள் வரும் காதல் அதனை அவர்கள் வெளிக்காட்டும் விதம் நேர்த்தியாக இருந்தது. கதையானது வேகமான ஒரு வாசிப்பை அளித்தது. 200 பக்கங்களுக்கும் குறைவாகவே இருந்தாலும் பல விஷயங்களை சொல்லியுள்ளது. எழுத்தின் நடை மிகவும் சாதாரனமாக ஆனால் ரொம்பவும் தாக்கமுள்ளதாக பட்டது எனக்கு. குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் எனக்கு அதில் வரும் இடங்கள், மக்களின் வாழ்க்கை, வட்டார வழக்கு இதெல்லாம் வெகுவே ரசிக்க முடிந்தது. கதையின் போக்கில் என்னை கதைக்குள் இழுக்க அது ஒரு முக்கியமான காரணியாக இருந்தது.
எல்லோராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புதினம் இந்த 'புத்தம் வீடு'. ஒரு காலகட்டத்தில் குடும்பங்களில் நிலவியிருந்தகட்டுப்பாடுகள், ஆணாதிக்கம் கொண்ட குடும்பங்களில் பெண்களின் நிலைமை, குடும்ப உறவுகள், காதல் என்று பல விஷயங்கள் லிஸியின் பார்வையில் சொல்ல பட்டிருக்கிறது. ஹென்றி, கல்யாணி இவர்களை போல் இனி லிசியும் என் மனதிற்கு மிகவும் இணக்கமான ஒரு கதாபாத்திரமாக இருப்பாள்.
Monday, 12 February 2024
கன்னிகள் ஏழுபேர் - இந்திரா சௌந்தர்ராஜன் - புத்தக விமர்சனம்
நான் அதிகமாக படித்த ஒரு எழுத்தாளர் என்றால் அது இந்திரா சௌந்தர்ராஜன் தான். சிறு வயதில் தொலைக்காட்சியில் அவர் கதைகளை தழுவிய பல நாடகங்களை பார்த்ததாலோ என்னமோ தெரியவில்லை. சற்றுவேகமான நடை கொண்ட, அதே நேரத்தில் பல விஷயங்களை சொல்கின்றதாக அவர் கதைகள் அமையும். இந்த வருடம் வாசிப்பு ஆரம்பித்ததே இந்த புதினத்தில் இருந்து தான்.
சிவன்கோவில் குருக்களாக இருக்கும் சாமிநாத குருக்களுக்கு ஏழு பெண்பிள்ளைகள். யாருக்குமே இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தனக்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. அதே போல தனது பெண்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று எப்பொழுதும் மனக்குழப்பமாகவே இருக்கிறார். நாடி ஜோதிடம் பார்த்த போது அவருடைய பெண்கள் சப்தகன்னியர்கள் என்றும் கன்னிப்பட்டி என்ற ஊரில் சென்ற கோவில் எழுப்பினால் எல்லாம் தானாகவே நல்லதாய் அமையும் என்று அறிந்து கொள்கிறார். சாமிநாத குருக்களும் அவரது நண்பரும் அங்கு செல்ல; அந்த ஊரில் பற்பல மர்மங்கள். சப்தாகன்னியர் சிலைகளையே காணவில்லை. அந்த ஊரின் மர்மங்கள் உடைக்கப்பட்டது, சிலைகள் மீட்கப்பட்டு கோவில் எழுப்பப்பட்டதா, அந்த பெண்கள் வாழ்வில் சந்தோசம் மலர்ந்தது என்பதே இந்த புதினம்.
எப்பொழுதும் போல் வித்தியாசமான ஒரு கதைக்களம். ஆன்மீகம் சார்ந்தது. அவருடைய மற்று புத்தகங்களில் காணும் அதே நடை தான் இந்த புதினத்திலும். கதை ஒரு பக்கமாக நகரும் அவர் ஆன்மீகத்தை பற்றி சொல்லும் கருத்து போன்றது தனியாக இடைக்கலர்ந்து வரும். இந்த புத்தகத்திலும் ஆன்மீகம், நாத்திகம், கடவுள் வழிபடு என்று பல விஷயங்களை பேசியுள்ளார். புதினத்தின் முக்கியமான பலமே கதை தான். என்றாலும் சற்று வேகம் தளர்ந்த எழுத்து. கதையின் நடுபாகம் வரும்போது வீணாக கதையை வளர்க்க நினைப்பது போன்ற ஒரு உணர்வு. கதையின் பாத்திரங்கள் சற்று அதிகமாகவே இருந்தார்கள். இருந்தாலும் தேவையான பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பிரச்சினையே அங்கு தான். கருத்துக்களை ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் பகுதியில் சொன்னாலும் எழுத்தாளர் சில கதைமாந்தர்களின் வாயிலாக மீண்டும் எடுத்துரைக்க நினைக்கிறார். அது சலிப்பை தான் அளிக்கிறது.
மொத்தத்தில், வேகமற்ற ஒரு நடையால் பாதிக்கப்பட்ட ஒரு நல்ல கதை என்றே இந்த புதினத்தை சொல்லலாம். கொஞ்சம் பொறுமையாக வாசித்தால் மற்ற இந்திரா சௌந்தர்ராஜன் புத்தகங்களை போலவே வாசிக்கமுடிந்த ஒரு புத்தகம்.
ஐந்து வழி மூன்று வாசல் - ஐந்து வழி மூன்று வாசல் - புத்தக விமர்சனம்
விட்டு விடு கருப்பா - விட்டு விடு கருப்பா - புத்தக விமர்சனம்
ஆனந்த தாண்டவம் - ஆனந்த தாண்டவம் - புத்தக விமர்சனம்
கோட்டைபுரத்து வீடு - கோட்டைபுரத்து வீடு - புத்தக விமர்சனம்
வானத்து மனிதர்கள் - வானத்து மனிதர்கள் - புத்தக விமர்சனம்
விக்ரமா விக்ரமா (பாகம் 1) - விக்ரமா விக்ரமா (பாகம் 1) - புத்தக விமர்சனம்
Thursday, 1 February 2024
குமரித்துறைவி - ஜெயமோகன் - புத்தக விமர்சனம்
சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியது. எல்லா வருடமும் தவறாமல் வாங்குகிற எழுத்தாளர்களில் ஒருத்தர் ஜெயமோகன். அதுவும் எங்க ஊரை சார்ந்த ஒரு புதினம் என்று தெரிந்ததும் வாங்கிவிட்டேன். வாசிக்கத்தான் சற்று நாட்கள் ஆகிவிட்டன.
முகலாய படைகள் மதுரை மீது போர் தொடுத்தபோது மீனாட்சி மற்றும் சொக்கநாதர் சிலைகளை கோவிலில் இருந்து அப்புறப்படுத்துகிறார்கள். மீனாட்சி அம்மையை கொண்டு வந்தது ஆரல்வாய்மொழி பரகோடி சாஸ்தா ஆலயத்தில் தான். இதை அறிந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. பின்பு முகலாயர்களை வீழ்த்தி விஜயநகர பேரரசு ஆட்சியை பிடிக்கிறது. விஜயநகர ராணியின் கனவில் மீனாட்சி அம்மை தோன்றி தன்னை மறுபடியும் அழைத்து செல்வதற்கு சொல்ல, வேணாடு அரசு அவர்களை மனமில்லாமல் வழியனுப்புகிறார்கள். நாஞ்சில் நாட்டில் இருக்கும் மீனாட்சியை சொக்கநாதருக்கு கல்யாணம் பண்ணி அனுப்புவதாக முடிவாகுது. மீனாட்சி சொக்கநாதர் கல்யாண வைபவத்தை கருவாக கொண்டதே இந்த குமரித்துரைவி.
ஜெயமோகன் அவர்கள் இதை ஒரு மங்கள படைப்பாக குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையான வார்த்தை. இதை வாசிக்கையில் ஒரு மகா திருமண வைபவத்தை கண்ட அனுபவம். எப்போதும் தமிழ் மொழியை ஜெயமோகன் அவர்கள் கையாளும் விதம் என்னை வியப்படைய செய்யும். இந்த புத்தகத்தில் கூட அப்படியே. மொழியின் ஆளுமை என்னை வியப்பூட்டியது. ஒரு சிறு கதையாக முடிக்க முடிந்த ஒன்று தான் இந்த கதைக்களம் . ஆனால் தனது கற்பனை குதிரைகள் பூட்டிய ரத்தத்தில் ஏற்றி நம்மை ஒரு பயணமாக கொண்டு செல்கிறார். என்றாலும் சிலருக்கு கொஞ்சம் சலிப்பு தட்ட வாய்ப்பு உள்ளது. அவர் அவர் ரசனையை பொறுத்து. நாஞ்சில் நாட்டை சேர்ந்த எனக்கு அதன் இலக்கணம், நம்பிக்கை, வழக்கு இதெல்லாம் பழக்கம் உள்ளதினால் இந்த புதினத்தினுள் வெகுவாக ஊடுருவ முடிந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளும் அருமையாக காகிதத்தில் வரையப்பட்டுள்ளது. ஒரு போரை தடுப்பது மட்டுமல்ல இந்த ஒரு நிகழ்வை ரெண்டு நாட்டிற்கும் இடையே சந்தோஷத்தை அளிக்கும் தருணமாக மாற்றி அமைத்த ஏராளமான கதாபாத்திரங்கள். அரசர்கள் ஆண்ட காலத்தில் கல்யாணம் என்ற ஒரு நிகழ்வை இதற்க்கு பயன்படுத்த பட்டத்தை நாம் நிறையவே வாசித்திருக்கிறோம். ஒரு சில பாத்திரங்கள் மட்டுமே சற்று எதிர்மாறாக செயல் பட்டது. ஒரு பெண்ணை தாரை வார்த்து குடுக்கும் அப்பா, சகோதரன், அனைத்து சொந்தபந்தங்கள் இவர்களில் ஒன்றாக நாமும் மாறிவிடுகிறோம். வாசித்து முடிக்கும் பொழுது எனக்குள் ஒரு சிறு புன்னகை மலர்ந்தது. ஜெயமோகன் படைப்புகளை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அவரோட கதை, இடம், சூழல் விரிவாக்கம் பற்றி. கல்யாண வைபவம், அதற்க்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகள், பந்தி, சொந்தபந்தங்கள், ஊரார்கள், அந்த ஊர் அமைப்பு என தத்ரூபமாக வர்ணித்துள்ளார் அவர்.
இந்த கதை அரசல்புரசலாக ஊரில் கேள்விப்பட்டதுண்டு என்றாலும் பரசேரி சாஸ்தா கோவில் சென்றதில்லை இது வரை. கண்டிப்பாக ஒரு நாள் அங்கு சென்று பார்க்க வேண்டும். இந்த கதை உண்மையில் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை என்றாலும் அங்கு சென்று இந்த கதை மற்றும் வர்ணனையை சற்று நேரம் கண்மூடி இருந்து நினைத்து பார்க்க வேண்டும். எல்லாமே மங்களமாக அமையும் இந்த புதினம் ஒரு சிறந்த பீல்-குட் வாசிப்பு. ஏற்கனவே சொன்னது போல் சிலருக்கு இது சற்று இழுவையாக தோன்றலாம்.
Sunday, 6 August 2023
சாயாவனம் - சா.கந்தசாமி - புத்தக விமர்சனம்
ரொம்ப நாட்களாக கையில் இருக்கின்ற புதினம். இப்போது தான் வாசிக்க ஒரு மனம் வந்தது. வாசிப்பதற்கு முன் சில விமர்சனங்களை கண்ட பிறகே இந்த வாசிப்புக்கு வந்தேன்.
சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பி அவனது அம்மாவின் சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். மீதி நாட்கள் அங்கேயே ஒரு தொழில் செய்து தனது மக்களோடு வாழவேண்டும் என்பது அவன் ஆசை. சாயாவனம் என்ற ஊருக்கு வரும் அவன் அங்கு ஒரு காட்டை விலைக்கு வாங்குகிறான். அதை அழித்து ஒரு சர்க்கரை ஆலை துவங்குவதே அவன் ஆசை. ஆனால் அது ஒரு சாதாரணமான காடு அல்ல. வருடங்களாக வளர்ந்து ஒரு பெரும் வனமாக தென்பட்டது. முதலில் தனியாக ஆரம்பிக்கும் அவன் போக போக தனது மாமா அந்த ஊரில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் என்று ஒரு சிறு கூட்டத்தை சேர்த்து அழிக்க முற்படுகிறான். அந்த பெருங்காட்டுடன் நடந்ததும் போராட்டமே இந்த புதினம்.
ஒரு அழிவின் கதையை வாசிப்பது என்பது சற்று கஷ்டமான ஒன்று. எழுத்தாளர் இந்த கதையை சொல்லியிருக்கும் விதம் அந்த வாசிப்பை மிகவும் கடினமாக்குகிறது. அழிவும் சேதாரங்களும் நம் மனதில் ஆழமான ஓர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிதம்பரம் தன் வழியில் எது வந்தாலும் அதை ஏறி மிதித்து முன்னேறி செல்லும் ஒருவன். லட்சியத்தை அடைய துடிக்கும் அவன் மன உறுதி அபாரமானது. ஆனால் மறு பக்கத்திலோ அந்த வனமும் தன் முழு பலத்தை வெளிக்காட்டுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவன் உறுதி வெல்வதை காண்பது வேதனையாக இருந்தது.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரை மிக அழுத்தமாக காட்டியுள்ளார் சா.கந்தசாமி. சிதம்பரம் எனது கண்ணில் ஒரு வில்லமாகவே காட்சியளிக்கிறான். பல விதமான மரங்களும் சிறு விலங்குகளும் பறவைகளும் கொண்ட அந்த பூமி கடைசியில் வெறிச்சோடி கிடக்கையில் மனதில் இனம்புரியாத ஒரு நெருடல், ஒரு வலி. வனம் தோல்வியினுள் தள்ளப்பட என் வாசிப்பின் வேகமும் வெகுவாக குறைந்தது. எழுத்தாளரின் பலம் அதில் தென்படுகிறது. நம்முள் அந்த வலியை மிக ஆழமாக கொண்டு வருகிறார். மனித உறவுகளோடு கடந்து செல்லும் இந்த கதையில் எங்குமே வனத்தின் அழிவுக்கு எதிராக ஒரு குரல் கூட கேட்கவில்லை. சிதம்பரத்தினுள் ஒரு சிறு குற்ற உணர்ச்சி ஆழ் மனதில் இருந்தாலும் எந்த பயனும் இல்லை. கதை நடக்கும் காலகட்டத்தை நுணுக்கமாக சொல்லியுள்ளார் சா.கந்தசாமி. பாப்பாவின் கல்யாணம், பண்டம் மாற்றும் முறை, பிறகு காசு என்ற ஒரு பொருளை அங்கு சிதம்பரம் கொண்டு வருவது, அதை முதலில் கையாள தெரியாமல் கஷ்டப்படும் ஜனங்கள், அந்த காலத்து ஊரின் அமைப்பு, கிராமத்து வாழ்க்கை என்று அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் கந்தசாமி அவர்கள்.
வாசிப்பின் போது ஒவ்வொரு மரம், செடி, விலங்கு இவற்றின் பெயர்களை கோடிட்டுகொண்டே வாசித்தேன். போக போக கோடுகள் குறைந்து வெறுமை மட்டுமே மிஞ்சியது. கதையின் ஒரு தருணத்தில் ஒரு கூடு உடைந்து விழுந்து சிறு குஞ்சு ஒன்று பரிதாபமாக இரக்கிறது. சிதம்பரம் கண்ணீர் விட்டான். கூடவே நானும். புத்தகத்திலும் மனதிலும்! ஆங்கிலத்தில் "Sustainable Development" என்று ஒரு வார்த்தை உண்டு. இயற்கையோட இணைந்தது நாமும் வாழுதல் வளருதல் - இதுவே சரியான ஒரு வளர்ச்சி என்பது. நாம் பள்ளிகளில் இதை படித்திருப்போம். அது துளி கூட இல்லாத ஒரு கதை. ஆனால் அதன் முக்கியத்தை உணர்த்தும் ஒரு கதை. "சாயாவனம்" என்ற தலைப்பு கூட ஏதோ சொல்ல நினைப்பது போல் ஒரு உணர்வு. கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்கபடவேண்டிய ஒரு புத்தகம்.
Sunday, 29 January 2023
தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன் - புத்தக விமர்சனம்
பயணங்கள்! யாருக்கு தான் பயணங்கள் பிடிக்காது. நண்பர்களுடன் போகும் சில பேர், தனிமையில் பயணம் செல்லும் சில பேர். அப்படி பயணங்கள்என்று தனியாக போகாவிட்டால் கூட வாழ்க்கை நம்மை பல நேரங்களில் பயணங்களுக்கு இட்டு செல்லும். அப்படி சில பயன்களில் வாயிலாக என்ன சொல்ல உள்ளார் என்பதை அறிவதற்க்கே இந்த வாசிப்பை இந்த வருடம் எடுத்தேன். இரண்டு வருடங்களாக புத்தக அறையில் என் தீண்டலுக்காக இருக்கும் இந்த புத்தகம் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
ஒரு சாதாரணமான பயண குறிப்பு அல்லாமல் வாழ்க்கையின் பல நுணுக்கமான விஷயங்களையும் சேர்த்து சொல்லியுள்ளார் எஸ்.ரா. தனது வீட்டின் ஜன்னல் வழியாக உலகத்தை பார்க்க ஆரம்பித்ததை பற்றி எழுதும் அவர் இந்த புத்தகத்தின் முடிவில் எல்லா பயணங்களும் முடிவது நம் வீட்டை நோக்கி என்று சொல்லியுள்ளது அவ்வளவு அழகாக இருந்தது. இந்த உலகத்தில் நாம் சிறு சிறு விஷயங்களில் கூட சந்தோஷத்தை காணலாம் என்றும் நம்மை வியப்புக்கு உள்ளாக்க நம் நாட்டிலே எத்தனையோ இடங்கள் உண்டு இதற்காக கண்டம் விட்டு கண்டம் சுற்றி அலையவேண்டிய அவசியம் இல்லை என்ற உண்மையை அருமையாக சொல்லியுள்ளார். அவர் போன பல இடங்கள் நான் காண ஆசை பட்ட இடங்கள் தான் - சரஸ்வதி மஹால், கங்கை கொண்ட சோழபுரம், காசி என்று பல இடங்கள். சென்னையில் நான் வசித்த 9 வருடங்களும் பரங்கிமலை என்ற ஒரு ரயில் நிலையத்தை கடந்து சென்றிருக்கிறேன் பலமுறை. ஆனால் அந்த இடத்தின் பெருமையை அவர் சொல்லி தான் அறிகிறேன்.அடுத்த முறை சென்னை செல்களில் கண்டிப்பாக அந்த மலையை சென்று காணவேண்டும். இது போன்று எத்தனை எத்தனை அனுபவங்களால் நம்மை சுற்றி இருக்கும் விசாலத்தையும் நாம் அதற்குள் ஒரு சிறு புள்ளி தான் என்பதையும் உணர்த்துகிறார். மிக அழகான எளிமையான நடை. ஒவ்வொரு பகுதிக்கும் ஆரம்பத்தில் ஒரு அழகிய கவிதை கூட இருந்தது.
ஒரு தனிமை விரும்பியான நான் பயணங்கள் செல்வது மிகவும் கம்மி. சென்றால் கூட தனியாகவோ அல்லது நெருங்கிய நண்பன் ஒருவனுடனோ மட்டும் தான். அப்படியே சென்றாலும் எல்லோரும் செல்வது போல முக்கியமான பொழுதுபோக்கு இடங்களை நாடி செல்வதில்லை. கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், காடு, மலை, ஊர் தெருக்கள் என்று சுற்றி திரிவது வழக்கம். அதே போல் மண், கற்று, மழை, மரங்கள், நீர்நிலைகள் என்று செல்லும் எனக்கு இது ஒரு சிறந்த புத்தகமாக பட்டது. என்னை போல் யோசிக்கும் ஒருவரின் அனுபவங்கள் எனக்கு மிக பெரிய ஊக்கமாக உள்ளது. இது போல் பயணங்கள் மேலு மேலும் மேற்கொள்ளவும் அதே போல் நம்மை சுற்றி உள்ள சிறு சிறு சந்தோஷங்களை கண்டறியவும்.
வாசிப்போம்! நேசிப்போம்!!
Sunday, 25 December 2022
வெண்முரசு 01 - முதற்கனல் - ஜெயமோகன் - புத்தக விமர்சனம்
பாரதத்தின் மிக பெரிய காவியங்கள் இரண்டு - ராமாயணம் மற்றும் மகாபாரதம். அதிலும் மகாபாரதம் என்பது பல கிளை கதைகளை கொண்ட மாபெரும் காவியம். அதை ஒருவர் மீண்டும் தனக்கே உண்டான பாணியில் எழுதுவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். அதுவும் ஜெயமோகன் அதை முயற்சிக்கிறார் என்பது எனக்குள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதின் விளைவு தான் இந்த வாசிப்பு.
நாகர்களிடம் இருந்து ஆரம்பிக்கும் இந்த பாகம் முக்கியமாக கங்கை மற்றும் பீஷ்மரின் ஆரம்ப கால கதையை சுற்றியே சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல அஸ்தினாபுரம் என்ற நாட்டையும் அதற்காக பீஷ்மர் செய்யும் தியாகங்கள் மற்றும் செயல்களை பற்றி சொல்ல பட்டிருக்கிறது. மற்றுமொரு முக்கியமான பாத்திரம் பீஷ்மர் மேல் பகை கொண்டிருக்கும் சிகண்டி. இவர்கள் இரண்டு பேரின் கதையும் முக்கியமாக சொல்லப்பட்டிருப்பதே இந்த "முதற்கனல்".
சிறந்த ஒரு அனுபவத்தை தந்த ஒரு வாசிப்பு இந்த புத்தகம். அதுவும் கதைக்கான அரங்கம் அமைக்க பட்டிருக்கும் விதம் அற்புதம். இது ஒரு கதையாடல் என்று நம்மை மறக்க செய்யும் ஒரு அனுபவம் இந்த முதற்கனல். ஜெயமோகனின் மொழி ஆளுமையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். பல வார்த்தைகள் புரிவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. இருந்தாலும் அந்த எழுத்து நடை மற்றும் கற்பனை அவ்வளவு அழகாக சொல்ல பட்டிருக்கிறது. இப்படி ஒரு முயற்சிக்காக ஜெயமோகனை பாராட்டியேயாகவேண்டும். மகாபாரதத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார் எழுத்தாளர். பல அர்த்தங்களை கொண்ட இந்த பாகத்தை ஒரே வாசிப்பில் படித்து புரிந்து கொள்வது என்பது சற்று சிரமமான காரியமே. கண்டிப்பாக இன்னொரு முறை நான் படிக்கத்தான் போகிறேன்.































