Monday, 14 October 2024

பந்தயப் பாவை - பட்டுக்கோட்டை பிரபாகர் - புத்தக விமர்சனம்

 


                    சென்னையில் வேலை பார்க்கிற காலத்தில் புறநகர் ரயில் பயணங்கள் வாழ்வின் ஒரு முக்கியமான பாகமாக இருந்தது. புத்தகங்களின் தோழமை என் பயணங்களை சிறப்பாக்கியது. ரயில் நிலைய புத்தகக் கடைகளிலிருந்து அதிகமாக வாங்கி படித்தது பட்டுக்கோட்டை பிரபாகரின் புத்தகங்கள் தான். இப்போது சில வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பட்டுக்கோட்டை புத்தகம்.

                    இந்த புத்தகம் இரண்டு மர்ம கதைகள் கொண்டது. முதல் கதை ஒரு ஓட்ட பந்தய வீராங்கனையைச் சார்ந்தது. ஒரு பிரபலமான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் கிரிஜா, மேற்கொண்டு பயிற்சிகளில் ஈடுபடுகிறார். இந்த நிலையில் போட்டிகளிலிருந்து விலகச் சொல்லி மர்மமான எச்சரிக்கையும் கொலை மிரட்டலும் வர காவல்துறை மற்றும் பரத்-சுசீலா-வின் உதவியை நாட, மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பது 'பந்தய பாவை'. பெங்களூரூவில் உலா தனது நண்பனின் வீட்டில் ரகசிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் தீபக் வெண்குஷ்டத்துக்கு மருந்து கண்டு பிடித்திருக்கிறார். அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தீபக் முடிவு செய்ய, நண்பன் கௌதம் அதைக் கைப்பற்ற அவனைக் கொல்ல நினைக்கிறார். இதை அறிந்த தீபக் பார்முலாவோட சென்னை தப்பிச் செல்ல அங்குக் கொலை செய்யப்படுகிறான். பார்முலாவை தேட கௌதம் ஒரு பக்கத்தில் முயற்சி எடுக்க தீபக்கின் காதலி வினிதா பரத்தின் உதவி நாடுகிறார். யார் கையில் அந்த பார்முலா அகப்படும், தீபக் யாரால் கொல்லப்பட்டார் என்று அறிவதே 'உன் கதை முற்றம்'.

                    இரண்டுமே பரத்-சுசீலா கதைகள் தான். இரண்டுமே விறுவிறுப்பான கதைக்களம் கொண்டது. முதல் கதையிலோ பக்கத்துக்குப் பக்கம் பரபரப்பு என்பது போல் பரத்துக்குப் போட்டியாகத் தனது தந்திரங்களை வகுக்கும் அந்த மர்ம ஆசாமி வேகமான பரபரப்பான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறார். எதிர் பாராத திருப்பு முனைகள் கொண்டது முதல் கதை. இரண்டாவது கதையில் கொலைகாரனை ஏவிவிட்டது யார் என்று தெரிந்தும் எப்படிக் கதை நகரும் என்று நினைத்தேன். என்றாலும் மிக மிகச் சுவாரஸ்யமாக எழுத்தாளர் கதையைக் கொண்டுசெல்கிறார். கதைக்குத் தேவையான பாத்திரங்கள் மட்டும் கொண்டது தான் இந்த இரண்டு கதைகளும். அதிலும் இரண்டிலுமே பரத்துக்குச் சரியான சவாலாக அமையும் பாத்திரங்களைத் துல்லியமாக எழுதியுள்ளார் பட்டுக்கோட்டை  பிரபாகர்.சில இடங்களில் லாஜிக் அடிபட்டாலும் தங்குதடையின்றி அமையும் வாசிப்பு அந்த தப்பை மறக்க வைக்கிறது. பரத்தின் இரட்டை அர்த்த நகைச்சுவைகள் தவிர்த்திருக்கலாம். சற்று முகம் சுளிக்க வைக்கிறது.

                    மொத்தத்தில், ஒரு வாட்டி வாசிக்கத் தகுந்த ஒன்று இந்த புத்தகம். விறுவிறுப்பான வேகமான வாசிப்பை எதிர்பார்ப்பார் கண்டிப்பாக வாசிக்கலாம்.



No comments:

Post a Comment