Showing posts with label Translated to Tamil. Show all posts
Showing posts with label Translated to Tamil. Show all posts

Friday, 28 February 2025

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - புத்தக விமர்சனம்

                                            

                    சென்ற வருடம் புத்தக திருவிழாவில் கண்ட புத்தகம். கேரளத்தில் இருப்பதால் இவர் பெயரை கேட்டதுண்டு. சில படங்களில் இவரை ஒரு நடிகராக கண்டதுண்டு. ஆனால் இவர் மிக பிரபல கவிஞர் என்று அறிந்தது ஒன்று இரண்டு வருடங்கள் முன்னே தான். இவரின் படைப்பை ஏன் வாசிக்க கூடாது என்ற உந்துதலில் பெயரில் இந்த புத்தகத்தை வாசிக்க எடுத்து கொண்டேன்.
                    கவிஞர் பாலச்சந்திரனின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பே இந்த புத்தகம். கல்லூரி நாட்களில் தன வீட்டை விட்டு வெளியேறி, சக தோழியுடன் காதல், வேலை இல்லாத நாட்கள், அந்த நேரங்களில் காசு இல்லாமல் படும் கஷ்டம், குடும்ப வாழ்க்கை என்று தன வாழ்க்கையின் அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் கொண்ட குறிப்புகளே இந்த நினைவுகள்.
                    இந்த புத்தகத்தில் என்னை ஈர்த்தது எழுத்தாளரின் தைரியம். தன்னை பற்றி எழுதுவதென்றால் பலரும் தன்னை மிகை படுத்தியே எழுத முயல்வார்கள். ஆனால் இங்கோ தான் தவறாகவே நடந்து கொண்டிருந்தாலும் அதை பற்றி தைரியமாக எழுதியுள்ளார். அதுவும் நவீன மலையாள இலக்கியத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவர். தனது அனுபவங்கள் என்றாலும் இப்படி வெளிப்படையாக எழுதுகையில் நம்மை பல கோணங்களை இருந்து பல விஷயங்களை யோசிக்க வைக்கிறார். காதல், காமம், கோபம், பொறாமை, பரிவு, பசி என்று பல விஷயங்களை சொல்லியுள்ளார். ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பால் இருப்பது அன்பு ஒன்று தான் என நம்மை உணர வைக்கிறார். பல இடங்களில் நம்மை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். இவரின் எழுத்துக்களின் வாயிலாக நாம் காணும் மனிதர்கள் தினமும் நம்மை சுற்றி நாம் காண்பவரே. அப்பாவின் மரணம், குழந்தையை கர்ப்பச்சிதை, வீட்டில் வந்த பெண்ணிடம் தவற நடக்க நினைப்பது, வேசியுடனான சந்திப்பு என்று பல இடங்களில் வாழ்க்கையின் பல விசயங்களை விளக்குகிறார். மிக யதார்த்தமான சுவாரச்யமான எழுத்து நடையால் நாம் இந்த புத்தகத்தை வேகமாக வாசிக்கலாம். இதை தமிழில் மிக அழகாக மொழிபெயர்த்தவர் கே.வி. ஷைலஜா. பாலச்சந்திரன் என்பவரின் எழுத்துக்களின் தாக்கத்தை சற்றும் குன்றாமல் நமக்காக மொழி பெயர்த்துள்ளார். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் ஏன் தேவை என்பதை இந்த புத்தகத்தின் வாயிலாக நீங்கள் காணலாம்.
                    இந்த புத்தகத்தின் முதல் அனுபவம் என்பது சிதம்பரம் கோவிலில் அவர் சந்தித்த ஒரு தம்பதியரை தான். அன்பு என்பது இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கும் மிக முக்கியமான சக்திகளில் ஒன்று என்பதை உணரவைக்கிறார். அதன் பிறகு வரும் மீதி பக்கங்களிலும் கூட அதையே முன்வைக்கிறார். இந்த படைப்பை வாசித்த பிறகு பலரும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களையும் மனிதர்களையும் ஒரு புதிய கோணத்தில் பார்க்க  முற்படுவார்கள். அதுவே இந்த படைப்பின் வெற்றியும். அனைவராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புத்தகம் இந்த 'சிதம்பர நினைவுகள்'.


   






Thursday, 29 February 2024

பசி - நட் ஹாம்சன் - புத்தக விமர்சனம்

 


                இந்த வருடம் புத்தக கண்காட்சியில் வாங்கினது இந்த புத்தகம். இதை பற்றி நான் முன்னதாக கேள்விப் பட்டதில்லை என்றாலும் இந்த அட்டைப்படம் எனக்கு பிடித்திருந்தது. கா.நா.சு வின் மொழி பெயர்ப்பு என்பதால் வாங்கி படித்து பார்ப்போமே என்ற ஒரு ஆவல்.

                ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளே இந்த புதினம். ஒரு ஏழையான எழுத்தாளர்நோர்வேயில் உள்ள ஒரு நகரத்தில் வசித்து வருகிறான். தன் வீட்டு வாடகை கூட கட்ட வழியில்லாத ஏழை. சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல் அவஸ்தை படுகிறான். எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தின் மேல் சிறிய மரக்கட்டைகளை வாயிலிட்டு உரியுறான் தன பசியை போக்கிக்கொள்ள. தனது தொழில் தொடர காகிதங்களோ, பென்சிலோ கூட வாங்க வழியில்லாமல் தனது கோட்டின் பொத்தானை பிரித்து விற்கும் அளவிற்கான கஷ்டம். ஒரு கட்டத்தில் அவன் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக கூட நடந்துகொள்கிறான். அவன் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள், சம்பவங்கள், பசி, இருட்டில் வெளிச்சமாய் சிறிய ஒரு காதல் என்று பல அத்தியாயங்கள் தான் இந்த பசி.

                ஒரு வித்தியாசமான வாசிப்பு. ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றிய கதை சில பக்கங்கள் தாண்டி அந்த கதைக்குள் என்னை கொண்டு சென்றது. அந்த எழுத்தாளனின் வாயிலாகவே நாம் இந்த கதையா; அதாவது அவன் வாழ்க்கையை பார்க்கிறோம். பசி மற்றும் குளிர் வாட்டி எடுக்கும் தருணங்களை மிகவும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் கதையின் ஆசிரியர். காசில்லாத ஒரு மனிதன் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்று தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. என்ன தான் ஏழ்மை அவனை வாட்டினாலும் நல்ல இருந்த நேரத்தில் வாழ்ந்த வாழ்க்கயே வாழ நினைக்கிறார். நண்பர்களிடம் உதவி கேட்க வெட்கப்படுகிறார், அத்தோடு சந்தோஷமாக இருப்பது போல் அவர்களிடம் பிரஸ்தாபிக்கிறார். தான் கஷ்டப்படும் போதும் மற்றவர்களுக்கு சிறு உதவிகள் புரிவது உதவும் மனப்பான்மையை விட தன்னை ஒரு வசதியானவர் என்று காட்டிக்கொள்ளவே என்றுதான் யோசிக்க தோன்றுகிறது. நடுவில் வரும் காதல் பகுதி மென்மையாக வந்து அதே போல சென்று விடுகிறது. சில நேரங்களில் மனச்சிதைவுக்கு உள்ளாகும் தருணங்கள் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. க.நா.சு -வின் மொழிபெயர்ப்பு மிகவும் கச்சிதமாக உள்ளது. அந்த கதாபாத்திரத்தின் அனுபவங்கள் துல்லியமாக மொழிபெயர்த்துள்ளார் க.நா.சு.

                இந்த புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பசியின் கொடுமை ஒரு மனிதனை எப்படி எல்லாம் ஆட்கொள்ளும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த புதினம் கண்டிப்பாக வாசிக்க படவேண்டிய ஒன்று தான்.



Tuesday, 20 December 2022

பாத்தும்மாவின் ஆடு - வைக்கம் முஹம்மது பஷீர் - புத்தக விமர்சனம்

 

                    பஷீர் மலையாளம் இலக்கிய உலகில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருப்பவர். அவர் எழுதிய "நீலவெளிச்சம்" மற்றும் ஒரு சில குட்டி கதைகளை மலையாள மொழியிலேயே படித்ததுண்டு. இந்த புத்தகத்தின் கதை ஓரளவுக்கு தெரியும் என்பதால் தமிழ் மொழி பெயர்ப்பு எப்படி இருக்கிறது என்று அறிவதற்க்கே இந்த புதினத்தை வாசித்தேன்.

                    நீண்ட நாள் பிரயாணத்தின் பிறகு பஷீர் அவர் வீட்டிற்கு வருகிறார். பஷீர் அவர்களின் வாழ்க்கையில் நடந்தாக சொல்ல படும் விஷயங்களை கொண்டதே இந்த புத்தகம். அவரது சகோதரியான பாத்தும்மாவின் ஆடானது எதை கிடைத்தாலும் தின்னும். அவரது புத்தகங்களை கூட. அதை மையமாக வைத்து தனது அம்மா, சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், அவருடைய வாழ்க்கை - இதையெல்லாம் பற்றி வேடிக்கையாக பஷீர் சொல்வதே இந்த புத்தகம்.

                    பஷீரிடம் எனக்கு பிடித்ததே அவரின் மொழி மற்றும் கதை சொல்லும் விதம் தான். இலக்கியம், இலக்கணம் அல்லாமல் எதோ பக்கத்துக்கு வீடு மனிதர் ஒருவர் நம்முடன் பேசி, கதைகள் சொல்வது போன்ற ஒரு உணர்வு அளிப்பது பஷீரின் தனித்துவம். எதையும் நகைச்சுவையாக சொல்லும் திறமை அவரிடம் உள்ளது. இந்த புத்தகத்தில் கூட ஆடு அவர் புத்தகங்களை தின்னும் பொழுது " நீ அதை வேண்டுமானால் சாப்பிட்டுக்கொள், நான் மறுபிரதி போட்டுக்கொள்வேன்; ஆனால் என் கம்பளி புதப்பை தின்றுவிடாதே, எனக்கு அது ஒன்றே உள்ளது" என்பது அவரின் எழுத்துக்களின் அழகை குறிக்கின்றது. தனது வாழ்க்கையின் கஷ்டங்களை கூட ஹாஸ்யமாக எழுதியிருப்பார். பள்ளிப்பெண்களிடன் அவர் நடத்தும் உரையாடல் கூட எனக்கு சிரிப்பை தந்தது. ஒரு புதினம் என்றல்லாமல் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சிறு கதைகளாக நமக்கு தந்திருக்கிறார். இந்த கதையை அந்த தன்மை மாறாது மொழிபெயர்க்க பட்டிருப்பது பாராட்டப்படவேண்டியது.

                    சிரிப்புடன் சிந்தனையும் ஊட்டுவது என்பது எல்லோராலும் முடிந்த ஒன்றல்ல. அதை திறம் பட செய்தவர் பஷீர். இயல்பான எழுத்துக்களை விரும்புகிறவர்கள் நிச்சயம் ரசிக்கும்படியான ஒரு புத்தகமே இந்த "பாத்தும்மாவின் ஆடு".


Wednesday, 10 March 2021

வெண்ணிற இரவுகள் - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி - புத்தக விமர்சனம்

 

                    பிற மொழி நூல்களில் என்னை எப்பொழுதும் ஈர்த்த ஒன்று  ரஷ்ய சாகித்யம். சிறு வயதில் வாசித்த ரஷ்ய மொழிபெயர்ப்பு கதைகள் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. இப்பொழுது ரஷ்ய புதினங்களையும் சிறுகதைகளையும் வாசிக்க நினைக்கையில் எத்தனை பிரபலமான பெயர்கள் - டால்ஸ்டாய், அன்டன் செகோவ், கோர்க்கி, தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின் என்று உலக சாகித்யத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள். அதில் நான் முதலாவதாக தேர்ந்தெடுத்து இந்த வாசிப்பு. நாகர்கோயில் புத்தக கண்காட்சியில் வாங்கிய இந்த சிறு புதினத்தில் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன் - ரஷ்ய சாகித்ய உலகத்திற்குள் எனது முதல் படி.
                    ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் தான் கதை காலம். பீட்டர்ஸ்பர்கில் வாழும் நமது கதையின் நாயகன் தனிமையான வாழ்க்கை வாழ்பவன். வாழ்க்கையின் பெரும் பங்கு கனவு காண்பதில் கழிக்கும்  நாயகன் ஒரு மாலை நேரம் ஊரை சுற்றி வருகின்ற போது ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவளை பின்தொடரும் நாயகன் ஒரு கட்டத்தில் அவளுக்கு உதவி செய்யும்படி சூழ்நிலை அமைகிறது. அந்த சந்திப்பு நட்பாக மாறி தினமும் அவளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுகின்றனர். அவனுள் அவனையே அறியாமல் காதல் மலர; அதே நேரம் அவள் மனதில் ஏற்கனவே ஒரு காதல் இருப்பதை அறிகிறான். தனது காதலனுக்காக காத்திருக்கிறாள் அவள். அந்த பெண்ணின் காதலன் அவளுடன் இணைகிறானா இல்லையா அல்லது இளைஞன் காதல் கைகூடுமா என்பது தான் 'வெண்ணிற இரவுகள்'.
                   வெறும் ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறும் கதை தான் இது. ஒரு புதினம் என்று சொல்ல முடியாது. 'வாடிவாசல்' போல் ஒரு சிறு புதினம் என்று எடுத்துக்கொள்ளலாம். அந்த சில பக்கங்களுக்குள்ளே அன்றைய காலகட்டத்தில் உள்ள ரஷ்ய வாழ்க்கை பற்றி அழகாக விவரித்திருக்கிறார். கதையின் அதிக நேரமும் உரையாடல்களில் ஓடுகின்றன. இரண்டு  குணாதிசயங்கள் ஒரு கோணத்தில் ஒத்துப்போகிறது போல் இருந்தாலும் இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை அழகாக காட்டுகிறார் பியோதார். ஆரம்பத்தில் மேலோட்டமாக நகர்ந்தாலும் சில பக்கங்கள் சென்ற பின் கதாபாத்திரங்கள் நம்முள் ஊடுருவி செல்கின்றன. கதையின் நடுவில் எனக்கு கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டது என்னமோ உண்மை தான்.  இருந்தாலும் போக போக கதாநாயகன் காதலின் வெற்றிக்காக ஏங்க ஆரம்பித்துவிட்டேன். தாஸ்தோவ்ஸ்கி மனித மனதிற்குள் ஊடுருவும் திறமையுடைய சொல் மாந்த்ரீகன் என்று சொல்வது மிகையல்ல. கதாநாயகியான பெண்ணின் சித்தரிப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. வயதான பாட்டியின் கூடவே நான்கு சுவர்களுக்குள் அவள் வாழ்ந்த வாழ்க்கை கூட ஒரு விதத்தில் தனிமையே. நாயகனோ வெளியில் சுற்றி திரிந்தும் தனிமையில்  வாடுகிறான். இப்படிப்பட்ட மாறுபடும் சூழ்நிலைகள் தாஸ்தோவ்ஸ்கியின் எழுத்துக்களில் அருமை. இந்த புத்தகம் முழுதும் பயணிக்கும் காதல் என்ற உணர்வு அதன் கவுரவத்தை அதன் மேன்மையை அதன் மென்மையை எங்கும் சிதறவிடாமல் தன் எழுத்துக்களுக்கும் கட்டி போட்டிருக்கிறார் தாஸ்தோவ்ஸ்கி. இதனை எந்த உணர்வும் உணர்ச்சிகளும் கலையாமல் மொழிபெயர்ப்பு செய்திருக்கும் விதம் அருமை.
                    இந்த புத்தகம் வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களுக்குள்ளே இந்த கதைக்களத்தை எங்கோ கண்டது போன்ற ஒரு உணர்வு. எதோ ஒரு திரைப்படத்தில். யோசித்தபோது தான் 'இயற்க்கை' என்ற அந்த படம் ஞாபகத்திற்கு வந்தது. நான் மிகவும்  ரசித்த ஒரு மென்மையான திரைப்படம். இந்த புதினத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தால் அப்படித்தானே இருக்கும்! வெண்ணிற இரவுகள் என்றால் ரஷ்ய  போன்ற ஊர்களில் காணப்படும் இயற்க்கையின் விந்தை. இரவு இருள்சூழ்ந்ததாக இருக்காது. Solsticeஇன் பொழுது சூரியன் முழுவதாக மறைவதில்லை. அதனால் இரவு கூட மாலைப்பொழுது போல ஒளிமயமாக இருக்கும். ஒன்றை யோசித்தால் கதைக்கு சரியான ஒரு தலைப்பாகவே படும். மென்மையான உணர்ச்சி மிகுந்த ஒரு வாசிப்பு இந்த 'வெண்ணிற இரவுகள்'.