Wednesday, 10 March 2021

வெண்ணிற இரவுகள் - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி - புத்தக விமர்சனம்

 

                    பிற மொழி நூல்களில் என்னை எப்பொழுதும் ஈர்த்த ஒன்று  ரஷ்ய சாகித்யம். சிறு வயதில் வாசித்த ரஷ்ய மொழிபெயர்ப்பு கதைகள் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. இப்பொழுது ரஷ்ய புதினங்களையும் சிறுகதைகளையும் வாசிக்க நினைக்கையில் எத்தனை பிரபலமான பெயர்கள் - டால்ஸ்டாய், அன்டன் செகோவ், கோர்க்கி, தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின் என்று உலக சாகித்யத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள். அதில் நான் முதலாவதாக தேர்ந்தெடுத்து இந்த வாசிப்பு. நாகர்கோயில் புத்தக கண்காட்சியில் வாங்கிய இந்த சிறு புதினத்தில் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன் - ரஷ்ய சாகித்ய உலகத்திற்குள் எனது முதல் படி.
                    ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் தான் கதை காலம். பீட்டர்ஸ்பர்கில் வாழும் நமது கதையின் நாயகன் தனிமையான வாழ்க்கை வாழ்பவன். வாழ்க்கையின் பெரும் பங்கு கனவு காண்பதில் கழிக்கும்  நாயகன் ஒரு மாலை நேரம் ஊரை சுற்றி வருகின்ற போது ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவளை பின்தொடரும் நாயகன் ஒரு கட்டத்தில் அவளுக்கு உதவி செய்யும்படி சூழ்நிலை அமைகிறது. அந்த சந்திப்பு நட்பாக மாறி தினமும் அவளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுகின்றனர். அவனுள் அவனையே அறியாமல் காதல் மலர; அதே நேரம் அவள் மனதில் ஏற்கனவே ஒரு காதல் இருப்பதை அறிகிறான். தனது காதலனுக்காக காத்திருக்கிறாள் அவள். அந்த பெண்ணின் காதலன் அவளுடன் இணைகிறானா இல்லையா அல்லது இளைஞன் காதல் கைகூடுமா என்பது தான் 'வெண்ணிற இரவுகள்'.
                   வெறும் ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறும் கதை தான் இது. ஒரு புதினம் என்று சொல்ல முடியாது. 'வாடிவாசல்' போல் ஒரு சிறு புதினம் என்று எடுத்துக்கொள்ளலாம். அந்த சில பக்கங்களுக்குள்ளே அன்றைய காலகட்டத்தில் உள்ள ரஷ்ய வாழ்க்கை பற்றி அழகாக விவரித்திருக்கிறார். கதையின் அதிக நேரமும் உரையாடல்களில் ஓடுகின்றன. இரண்டு  குணாதிசயங்கள் ஒரு கோணத்தில் ஒத்துப்போகிறது போல் இருந்தாலும் இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை அழகாக காட்டுகிறார் பியோதார். ஆரம்பத்தில் மேலோட்டமாக நகர்ந்தாலும் சில பக்கங்கள் சென்ற பின் கதாபாத்திரங்கள் நம்முள் ஊடுருவி செல்கின்றன. கதையின் நடுவில் எனக்கு கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டது என்னமோ உண்மை தான்.  இருந்தாலும் போக போக கதாநாயகன் காதலின் வெற்றிக்காக ஏங்க ஆரம்பித்துவிட்டேன். தாஸ்தோவ்ஸ்கி மனித மனதிற்குள் ஊடுருவும் திறமையுடைய சொல் மாந்த்ரீகன் என்று சொல்வது மிகையல்ல. கதாநாயகியான பெண்ணின் சித்தரிப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. வயதான பாட்டியின் கூடவே நான்கு சுவர்களுக்குள் அவள் வாழ்ந்த வாழ்க்கை கூட ஒரு விதத்தில் தனிமையே. நாயகனோ வெளியில் சுற்றி திரிந்தும் தனிமையில்  வாடுகிறான். இப்படிப்பட்ட மாறுபடும் சூழ்நிலைகள் தாஸ்தோவ்ஸ்கியின் எழுத்துக்களில் அருமை. இந்த புத்தகம் முழுதும் பயணிக்கும் காதல் என்ற உணர்வு அதன் கவுரவத்தை அதன் மேன்மையை அதன் மென்மையை எங்கும் சிதறவிடாமல் தன் எழுத்துக்களுக்கும் கட்டி போட்டிருக்கிறார் தாஸ்தோவ்ஸ்கி. இதனை எந்த உணர்வும் உணர்ச்சிகளும் கலையாமல் மொழிபெயர்ப்பு செய்திருக்கும் விதம் அருமை.
                    இந்த புத்தகம் வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களுக்குள்ளே இந்த கதைக்களத்தை எங்கோ கண்டது போன்ற ஒரு உணர்வு. எதோ ஒரு திரைப்படத்தில். யோசித்தபோது தான் 'இயற்க்கை' என்ற அந்த படம் ஞாபகத்திற்கு வந்தது. நான் மிகவும்  ரசித்த ஒரு மென்மையான திரைப்படம். இந்த புதினத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தால் அப்படித்தானே இருக்கும்! வெண்ணிற இரவுகள் என்றால் ரஷ்ய  போன்ற ஊர்களில் காணப்படும் இயற்க்கையின் விந்தை. இரவு இருள்சூழ்ந்ததாக இருக்காது. Solsticeஇன் பொழுது சூரியன் முழுவதாக மறைவதில்லை. அதனால் இரவு கூட மாலைப்பொழுது போல ஒளிமயமாக இருக்கும். ஒன்றை யோசித்தால் கதைக்கு சரியான ஒரு தலைப்பாகவே படும். மென்மையான உணர்ச்சி மிகுந்த ஒரு வாசிப்பு இந்த 'வெண்ணிற இரவுகள்'.





No comments:

Post a Comment