Tuesday, 2 March 2021

கோட்டைபுரத்து வீடு - இந்திரா சௌந்தர்ராஜன் - புத்தக விமர்சனம்

 

                        சென்ற வருடம் இந்திரா சௌந்தர்ராஜனின் புத்தங்களில் இருந்து எடுத்து சின்னத்திரைக்கு கொண்டு வரப்பட்ட சில தொடர்களை மீண்டும் பார்த்தேன். மர்ம தேசம், சொர்ண ரேகை, சிவமயம், ருத்ர வீணை. எல்லாம் சிறுவயதில் வியப்புடன் பார்த்த தொடர்கள். அதன் வரிசையில் வந்த ஒரு தொடர் தான் 'கோட்டைபுரத்து வீடு'. தொடர் எனக்கு அவ்வளவு சுவாரஸ்யத்தை அளிக்கவில்லை என்றாலும் அந்த புதின வடிவை வாசித்து தான் பார்ப்போமே என்ற உந்துதல் தான் இந்த வாசிப்பு.

                    மதுரை அருகே உள்ள 'கோட்டைபுரத்து' சமஸ்தானம் ஒரு பழைய அரச பரம்பரை. அதன் இளைய ராஜா தான் 'விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தான்' என்கிற விசு. ஒரு புது வணிக முயற்சியை பற்றி கற்றுக்கொள்ள கோவை சென்று திரும்பும் இடத்தில் கதை ஆரம்பமாகிறது. அங்கிருந்து செல்லும் விசு தனது அண்ணன் கஜேந்திரனுக்கு குடும்ப கோவிலில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்கிறார். ஆனால் அவர் அண்ணன் பாம்புக் கடியில் இறக்கிறார். முப்பது வயதை அடையும்போது  கோட்டைபுரத்து சமஸ்தானத்தின் ஆண்வாரிசுகள்  இறப்பார்கள் என்றும் பெண் வாரிசானால் பிறப்பிலேயே இறப்பார்கள் என்றும் அங்கு உள்ள நம்பிக்கை. எல்லாம் ஒரு சாபத்தின் காரணம். அப்படித்தான் நடக்கவும் செயகிறது. விசுவும் முப்பது வயசை நெருங்குவதால் மிகவும் குழப்பம் அடைகிறார். அவர் காதலி அர்ச்சனா ஒரு துணிச்சலான முற்போக்கு சிந்தனைஉடைய பெண்  என்பதால் இந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க நினைக்கிறாள். தனது இலக்கை அவள் அடைகிறாளா, விசு சாபத்தில் இருந்து தப்பிக்கிறானா, இருவரும் ஒன்று சேர்கிறார்களா என்பதே 'கோட்டைபுரத்து வீடு'.

                    அர்ச்சனா என்ற ஒரு பெண் எடுக்கும் தைரியமான முயற்சி தான் இந்த கதையின் முக்கிய பலம். நாம் கண்ட இது மாதிரி பட்ட மர்ம கதைகளில் எப்பொழுதும் நாயகன் தான் மர்மத்தை கண்டறிகிறான். நாயகி சும்மா ஒரு துணை பாத்திரம் மட்டுமே. ஆனால் இங்கு விசு தைரியமின்றி குழப்பத்தில் தவிக்கும் தருணங்களில் அவனை அரவணைத்து ஆறுதல் கூறுவதோடு நானே இதை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லும் இடங்களும் அர்ச்சனா எடுக்கும் முயற்சிகளும் அருமை. கதை இரண்டு காலகட்டத்தின் அடிப்படையில் நடக்குது - ஒன்று கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருக்கும் இந்தியா என்ற காலகட்டம். இன்னொன்று இந்த நவீன காலகட்டம். பழைய காலத்து சமூக வாழ்வியல், அன்று சிறு மன்னர்களும் ஜமீன்தார்களும் இழைத்த கொடுமைகள், அவர்கள் கீழ் இருந்த குடிமக்களின் இன்னல்கள் இவையெல்லாம் தத்ரூபமாக படமிட்டு காட்டியிருக்கிறார் இந்திரா சௌந்தர்ராஜன். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் எல்லோருக்கும் அவுங்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மர்மமும். பிடித்தது என்று தனித்து குறிப்பிட ஒரு கதாபாத்திரத்தை சுட்டிக்காட்ட முடியவில்லை. ஒரு கட்டத்தில்  மர்மத்தின் ரகசியத்தை  கண்டுபிடித்து விட்டேன் என்று கூறி  அதற்க்கான வாதங்களை அர்ச்சனா முன்வைக்கையில்; அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்  வாதங்களை முழுவதும் சுக்குநூறாக்குவது போல் அமைந்தது அருமை.  என்னை வியப்படைய செய்த பகுதியும் கூட. எழுத்தாளரின் மற்று கதைகளில் நடப்பது போல் இங்கும் மூட நம்பிக்கைக்கும் ஆன்மீகத்திற்கும் முற்போக்கு சிந்தனைக்கும் நடக்கும் போர் இங்கும் தொடர்கிறது.

                    இதன் சின்னத்திரை  வடிவம் என்னை வெகுவாக கவரவில்லை என்றாலும் புத்தக வடிவம் என்னை ரொம்பவும் ரசிக்க வைத்தது. அருமையான ஆன்மீக மற்றும் வாழ்வியல் சிந்தனைகளை நிலைநாட்டி மூட பழக்கங்களை சுட்டிக்காட்டும் விதத்தில்இருக்கும் இப்புதினம்; இந்திரா சௌந்தர்ராஜனின் மற்று  கதைகளை போலவே. வாசகரை இருக்கையின் ஓரத்திற்கு வரவைக்கும் ஒரு புதினம்.



No comments:

Post a Comment