Friday, 28 February 2025

சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - புத்தக விமர்சனம்

                                            

                    சென்ற வருடம் புத்தக திருவிழாவில் கண்ட புத்தகம். கேரளத்தில் இருப்பதால் இவர் பெயரை கேட்டதுண்டு. சில படங்களில் இவரை ஒரு நடிகராக கண்டதுண்டு. ஆனால் இவர் மிக பிரபல கவிஞர் என்று அறிந்தது ஒன்று இரண்டு வருடங்கள் முன்னே தான். இவரின் படைப்பை ஏன் வாசிக்க கூடாது என்ற உந்துதலில் பெயரில் இந்த புத்தகத்தை வாசிக்க எடுத்து கொண்டேன்.
                    கவிஞர் பாலச்சந்திரனின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பே இந்த புத்தகம். கல்லூரி நாட்களில் தன வீட்டை விட்டு வெளியேறி, சக தோழியுடன் காதல், வேலை இல்லாத நாட்கள், அந்த நேரங்களில் காசு இல்லாமல் படும் கஷ்டம், குடும்ப வாழ்க்கை என்று தன வாழ்க்கையின் அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் கொண்ட குறிப்புகளே இந்த நினைவுகள்.
                    இந்த புத்தகத்தில் என்னை ஈர்த்தது எழுத்தாளரின் தைரியம். தன்னை பற்றி எழுதுவதென்றால் பலரும் தன்னை மிகை படுத்தியே எழுத முயல்வார்கள். ஆனால் இங்கோ தான் தவறாகவே நடந்து கொண்டிருந்தாலும் அதை பற்றி தைரியமாக எழுதியுள்ளார். அதுவும் நவீன மலையாள இலக்கியத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவர். தனது அனுபவங்கள் என்றாலும் இப்படி வெளிப்படையாக எழுதுகையில் நம்மை பல கோணங்களை இருந்து பல விஷயங்களை யோசிக்க வைக்கிறார். காதல், காமம், கோபம், பொறாமை, பரிவு, பசி என்று பல விஷயங்களை சொல்லியுள்ளார். ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பால் இருப்பது அன்பு ஒன்று தான் என நம்மை உணர வைக்கிறார். பல இடங்களில் நம்மை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். இவரின் எழுத்துக்களின் வாயிலாக நாம் காணும் மனிதர்கள் தினமும் நம்மை சுற்றி நாம் காண்பவரே. அப்பாவின் மரணம், குழந்தையை கர்ப்பச்சிதை, வீட்டில் வந்த பெண்ணிடம் தவற நடக்க நினைப்பது, வேசியுடனான சந்திப்பு என்று பல இடங்களில் வாழ்க்கையின் பல விசயங்களை விளக்குகிறார். மிக யதார்த்தமான சுவாரச்யமான எழுத்து நடையால் நாம் இந்த புத்தகத்தை வேகமாக வாசிக்கலாம். இதை தமிழில் மிக அழகாக மொழிபெயர்த்தவர் கே.வி. ஷைலஜா. பாலச்சந்திரன் என்பவரின் எழுத்துக்களின் தாக்கத்தை சற்றும் குன்றாமல் நமக்காக மொழி பெயர்த்துள்ளார். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் ஏன் தேவை என்பதை இந்த புத்தகத்தின் வாயிலாக நீங்கள் காணலாம்.
                    இந்த புத்தகத்தின் முதல் அனுபவம் என்பது சிதம்பரம் கோவிலில் அவர் சந்தித்த ஒரு தம்பதியரை தான். அன்பு என்பது இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கும் மிக முக்கியமான சக்திகளில் ஒன்று என்பதை உணரவைக்கிறார். அதன் பிறகு வரும் மீதி பக்கங்களிலும் கூட அதையே முன்வைக்கிறார். இந்த படைப்பை வாசித்த பிறகு பலரும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களையும் மனிதர்களையும் ஒரு புதிய கோணத்தில் பார்க்க  முற்படுவார்கள். அதுவே இந்த படைப்பின் வெற்றியும். அனைவராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புத்தகம் இந்த 'சிதம்பர நினைவுகள்'.


   






No comments:

Post a Comment