Thursday 29 February 2024

பசி - நட் ஹாம்சன் - புத்தக விமர்சனம்

 


                இந்த வருடம் புத்தக கண்காட்சியில் வாங்கினது இந்த புத்தகம். இதை பற்றி நான் முன்னதாக கேள்விப் பட்டதில்லை என்றாலும் இந்த அட்டைப்படம் எனக்கு பிடித்திருந்தது. கா.நா.சு வின் மொழி பெயர்ப்பு என்பதால் வாங்கி படித்து பார்ப்போமே என்ற ஒரு ஆவல்.

                ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளே இந்த புதினம். ஒரு ஏழையான எழுத்தாளர்நோர்வேயில் உள்ள ஒரு நகரத்தில் வசித்து வருகிறான். தன் வீட்டு வாடகை கூட கட்ட வழியில்லாத ஏழை. சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல் அவஸ்தை படுகிறான். எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தின் மேல் சிறிய மரக்கட்டைகளை வாயிலிட்டு உரியுறான் தன பசியை போக்கிக்கொள்ள. தனது தொழில் தொடர காகிதங்களோ, பென்சிலோ கூட வாங்க வழியில்லாமல் தனது கோட்டின் பொத்தானை பிரித்து விற்கும் அளவிற்கான கஷ்டம். ஒரு கட்டத்தில் அவன் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக கூட நடந்துகொள்கிறான். அவன் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள், சம்பவங்கள், பசி, இருட்டில் வெளிச்சமாய் சிறிய ஒரு காதல் என்று பல அத்தியாயங்கள் தான் இந்த பசி.

                ஒரு வித்தியாசமான வாசிப்பு. ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றிய கதை சில பக்கங்கள் தாண்டி அந்த கதைக்குள் என்னை கொண்டு சென்றது. அந்த எழுத்தாளனின் வாயிலாகவே நாம் இந்த கதையா; அதாவது அவன் வாழ்க்கையை பார்க்கிறோம். பசி மற்றும் குளிர் வாட்டி எடுக்கும் தருணங்களை மிகவும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் கதையின் ஆசிரியர். காசில்லாத ஒரு மனிதன் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்று தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. என்ன தான் ஏழ்மை அவனை வாட்டினாலும் நல்ல இருந்த நேரத்தில் வாழ்ந்த வாழ்க்கயே வாழ நினைக்கிறார். நண்பர்களிடம் உதவி கேட்க வெட்கப்படுகிறார், அத்தோடு சந்தோஷமாக இருப்பது போல் அவர்களிடம் பிரஸ்தாபிக்கிறார். தான் கஷ்டப்படும் போதும் மற்றவர்களுக்கு சிறு உதவிகள் புரிவது உதவும் மனப்பான்மையை விட தன்னை ஒரு வசதியானவர் என்று காட்டிக்கொள்ளவே என்றுதான் யோசிக்க தோன்றுகிறது. நடுவில் வரும் காதல் பகுதி மென்மையாக வந்து அதே போல சென்று விடுகிறது. சில நேரங்களில் மனச்சிதைவுக்கு உள்ளாகும் தருணங்கள் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. க.நா.சு -வின் மொழிபெயர்ப்பு மிகவும் கச்சிதமாக உள்ளது. அந்த கதாபாத்திரத்தின் அனுபவங்கள் துல்லியமாக மொழிபெயர்த்துள்ளார் க.நா.சு.

                இந்த புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பசியின் கொடுமை ஒரு மனிதனை எப்படி எல்லாம் ஆட்கொள்ளும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த புதினம் கண்டிப்பாக வாசிக்க படவேண்டிய ஒன்று தான்.



No comments:

Post a Comment