நான் அதிகமாக வாசிக்காத சில எழுத்தாளர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் அசோகமித்திரன். 'தண்ணீர்', 'கரைந்த நிழல்கள்' என்று இரண்டு புதினங்கள் பல வருடங்கள் முன்பு வாசித்தது. பிறகு 18-ஆவது அட்சக்கோடு ஆரம்பித்து பாதியில் நின்றுவிட்டது. பல வருடங்கள் கழிந்தது இந்த வருடம் மீண்டும் இவரின் படைப்புகளை வாசிக்கவேண்டும் என்பதின் பலனே இந்த வாசிப்பு.
கோபால் மற்றும் சத்யன்குமார் என்ற இருவரை சார்ந்ததே இந்த புதினம். இரண்டு பெரும் திரை துறையை சேர்ந்தவர்கள். கோபால் மெட்ராஸில் வாழும் தமிழ் கதையாசிரியர். சத்யன்குமார் நாடறிந்த மிக பிரபலமான நடிகர். ஒரு படப்பிடிப்பின்போது இருவரும் சந்திக்க ஒரு நல்ல நட்புமலர்கிறது. சத்யா கோபால் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்க, கோபாலும் சத்யனிடம் அதே நட்பை பாராட்டுகிறார். இவர்கள் நட்பும், வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களும் இருவரின் பார்வையில் சொல்லப்படுவதே 'மானசரோவர்'.
வித்தியாசமான வாசிப்பு. ஒருவன் அவன் செய்யும் தொழில் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்து எப்படியெல்லாம் அவன் வகைப்படுத்தப்படுகின்றன என்பதை காணலாம். கோபாலின் மனைவி அவர் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறாள். சத்யனையோ அண்டிப்பிழைக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. தான் யோக்கியன் என்று எங்கும் சொல்லாத நபர். எங்கு சென்றாலும் அவரை திருப்திப்படுத்த நினைக்கும் கூட்டங்கள். கோபால் மீது சத்யன் கொண்ட மரியாதை கலந்த நட்பு இந்த கதையின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. எதையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று பார்க்கும் மனிதனின் குணத்தை இந்த கதை பிரதிபலிப்பதாக எனக்கு பட்டது. எழுத்து நடை சற்று வித்தியாசமாக தோன்றியது. வேகமாக சென்ற வாசிப்பு சில இடங்களில் தடை படுகிறது. புதினம் கோபால் மற்றும்சத்யன் என்ற இருவர் கோணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு இலை கதைமாந்தர்கள் என்றாலும் அவர்கள் கதையின் ஓட்டத்திற்கு பங்களிப்பவர்களாய் இருக்கின்றனர்.
கோபாலின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் சற்றும் எதிர் பாராமல் நிகழ்கையில் நம்மை நிலைகுலைய வைக்கிறது. அதில் இருந்து மீள எனக்கு சற்று நேரம் தேவைப்பட்டது. கதையின் ஓட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருவரின் பின்கதைகளை சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். கோபால் பல இடங்களில் ஒரு யோகியாக தென்படுகிறார். பணம், பதவி, அந்தஸ்து இருந்தும் நிம்மதியும் உண்மையான சந்தோஷமும் அறியாதவராக சத்யன் வளம் வருகிறார். ஒரு மரணம் கூட நம்மை பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது. புதினம் முடிகையில் நமது மனதிற்குள் அமைதிபரவுவது போல் ஒரு மாயை.
ஹிமாலய மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு ஏரி தான் இந்த மானசரோவர். இங்கு குளித்தால் பாவங்கள் தீரும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. வாழ்க்கை என்ற ஒரு புதிரை புரிந்துகொள்ள நினைக்கும் சில மனிதர்களின் கதையே இந்த "மானசரோவர்".
No comments:
Post a Comment