விறுவிறுப்பான வாசிப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. நிறுத்தி நிதானமாக சிந்திக்க நமக்கு இடம் தராமல் அந்த வாசிப்பு நம்மை முள்முனையில் நிறுத்தும். சுஜாதா மற்றும் இந்திரா சௌந்தர்ராஜன் புத்தகங்கள் இந்த ரகத்தை சேர்ந்தது. மற்றொரு புத்தகத்திற்கு பதில் என்னவென்று தெரியாமல் எப்போதோ வாங்கின இந்த வானத்து மனிதர்களை வாசித்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் வாசிப்பில் கொண்டு நிறுத்தியது. அது முழுமை அளித்ததா என்று பார்ப்போம்.
தாணுமாலய வனத்தில் நடக்கும் கதை இது. புதிய வனச்சரக அதிகாரியாக பதவியேற்கும் சிவகுமார், தனது மனைவி வள்ளியம்மையுடன் அங்கு வருகிறார். வெளியேறும் அதிகாரியிடமிருந்தும் மற்று செய்திகளில் இருந்தும் இது மிகவும் மர்மமான காடு என்று அறிகிறார். மிகவும் வித்தியாசமான பழக்க வழக்கங்கள், ஊர் கட்டுப்பாடுகள், மர்மங்கள் நிறைந்த ஒரு காடு. வானத்து மனிதர்கள் எனும் ஒரு குழுவினர் இருப்பதாக சொல்ல படும் காடு. அவர்கள் விஞ்ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் அதெல்லாம் இல்ல போலி மனிதர்கள் என்றும் சொல்ல படுகிறது. மூட நம்பிக்கைகளை வெறுக்கும் சிவகுமார் அவர்களை பிடித்தே தீருவேன் என்று இறங்குகிறார். அவரும் அவரின் தம்பியும் இங்குள்ள நம்பிக்கைகளை கேள்வி கேட்கிறார்கள். தப்பானவர்கள் பரப்பும் வதந்தி இவன் என்று நம்புகிறார். ஆனால் வள்ளியம்மை வானத்து மனிதர்களை நம்புகிறாள். அப்படி இருக்கையில் ஒரு நாள் இதற்க்கு முன் அங்கு வேலை செய்த அதிகாரியின் பிணம் கிடைக்க, மர்மங்கள் ஆழத்தை கண்டுபிடிக்க முற்படுகிறார் சிவகுமார் மற்றும் அவரின் தம்பி. அவர்கள் அந்த மர்மங்களை கண்டுபிடிக்கிறார்களா? வானத்து மனிதர்கள், கற்பக விருட்சம் இவைகள் கட்டு கதைகள் மட்டுமா? இந்த புனிதமான காட்டில் கெட்ட சக்திகளின் நடமாட்டம் இருக்கிறதா? இவைகளை சொல்கிறார் இந்திரா சௌந்தர்ராஜன்.
எப்போதும் எனது எதிர்பார்ப்பை சற்றும் ஏமாற்றாத எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இந்த புதினத்தில் கூட அப்படித்தான். ஆன்மிகம், சித்தர்கள், நம்பிக்கை என்ற ஒரு புறமும் மூடநம்பிக்கை, போலி ஆன்மிகம் என்ற மற்றொரு புறமும் அழகாக சித்தரித்திருக்கிறார். வானத்து மனிதர்கள் எனும் கூட்டத்தினர் புத்தகம் முழுக்க ஒரு புதிராகவே வலம் வந்து செல்கின்றனர். சற்று விநோதமாகவும் தென்பட்டனர். காட்டில் வசிக்கும் மக்களும் அவர்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களும் வியப்பாகவே இருந்தது. தாவரங்களின் மேலும் விலங்குகளின் மேலும் அவர்கள் கொண்டுள்ள அன்பும் பாசமும் மரியாதையும் நல்ல ஒரு எடுத்துக்காட்டு. நமது நம்பிக்கைக்கு அப்பால் உள்ள விஷயங்களை அவநம்பிக்கை என்ற கோணத்தில் பாராமல் அதையும் அறியநினைப்பது எவ்வளவு முக்கியம் என்று எழுத்தாளர் சொல்லியிருக்கிறார். புத்தகம் முழுக்க வலம் வரும் பாத்திரங்கள் அனைவருக்கும் தங்களுக்குண்டான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. கதையின் முடிவு சற்று வித்தியாசமாக உள்ளது. கதைக்கு உகந்த முடிவா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. என்றாலும் எதிர்பார்த்த திருப்தியை கதையின் முடிவு எனக்கு அளிக்கவில்லை. 400 பக்கங்கள் கொண்ட இந்த புதினம் சற்று பெரிய ஒரு வாசிப்பு தான். இருந்தாலும் எனக்கு எவ்விதத்திலும் இந்த வாசிப்பு சலிப்பூட்டவில்லை.
எப்பொழுதும் போல இந்த புத்தகத்திலும் இந்திரா சௌந்தர்ராஜன் தனது முத்திரையை நிலைநாட்டுகிறார். அவருக்கே உண்டான கதைக்களமும் பாணியும் ரசிப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகம். பக்கத்துக்கு பக்கம் மர்மம் என்ற ஒரு வாசிப்பை விரும்புபவர்கள் கூட இந்த புதினத்தை தாராளமாக வாசிக்கலாம்.
No comments:
Post a Comment