நூலகங்கள். எந்த ஊர் சென்றாலும் நான் முதலில் அங்கு செல்ல நினைக்கிறது நூலகங்கள் மற்றும் புத்தக கடைகள் தான். அப்படி பட்ட எனக்கு இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் தென்பட்ட புத்தகம் தான் இந்த நூலக மனிதர்கள். புதினங்கள் வாசித்தல் சற்று சலிப்பு தட்டவே இந்த புத்தகத்தை படிக்கலாம் என்று நினைத்தேன்.
இந்த புத்தகமானது எஸ். ரா சென்றுள்ள நூலகங்கள் மற்றும் அங்கு அவர் சந்தித்த வேறுபட்ட மனிதர்கள், வேறுபட்ட அனுபவங்கள் - இவைகளின் தொகுப்பே இந்த புத்தகம். தனக்கு வாசிக்கதெரியாது என்றாலும் மகளுக்காக லா.சா.ரா-வின் புத்தகங்களை தேடி எடுத்து செல்லும் அப்பா, ஞாயிற்று கிழமையானால் நூலகம் வந்து வாசிக்கும் ஒரு குடும்பம், சமையல் குறிப்பு புத்தகத்தை மட்டுமே எடுத்து செல்லும் காவலர், நூலகத்தில் புத்தகங்கள் வசிப்பதற்காகவே அங்கு வேலை செய்யும் அகதிகள் என்று அவர் நூலகங்களில் கண்டவர்களை பற்றி சொல்லும் கட்டுரை தொகுப்பு இந்த நூலக மனிதர்கள்.
எஸ்.ரா-வின் கட்டுரை தொகுப்புகளுக்கென்று ஒரு தனி அழகு உண்டு. நேர்த்தியான சிந்திக்க வைக்கும் எழுத்து நடை. இதில் வரும் சில தொகுப்புகள் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. படிப்பின், வாசிப்பின் முக்கியத்தை உணர்த்தும் கட்டுரைகள் அவை. சில கட்டுரைகளினூடே அவர் சில கருத்துக்கள் மற்றும் திட்டங்களை கூறியுள்ளார். அது அமல்படுத்தினால் நன்றாக தான் இருக்கும். சற்று பொறாமையாக தான் இருந்தது எஸ்.ரா-வின் அனுபவங்களை வாசிக்கையில். எத்தனை பயணங்கள் அதில் தான் எத்தனை நூலக அனுபவங்கள்.
என்றுமே எஸ்.ரா-வின் புதினங்களை விடவும் அவரின் கட்டுரை தொகுப்புகளை நேசிக்கும் எனக்கு இது ஒரு சிறந்த வாசிப்பாக அமைந்தது. நூல்கள் மற்றும் நூலகங்களை நேசிக்கும் அனைவரால் வாசிக்க படவேண்டிய புத்தகம்.
நான் வாசித்த எஸ்.ரா-வின் மற்ற புத்தகங்களின் விமர்சனங்களை வாசிக்க கீழே கொடுத்துள்ள இனைப்புகளைபார்க்கவும்.
No comments:
Post a Comment