Sunday 29 January 2023

தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன் - புத்தக விமர்சனம்

                    பயணங்கள்! யாருக்கு தான் பயணங்கள் பிடிக்காது. நண்பர்களுடன் போகும் சில பேர், தனிமையில் பயணம் செல்லும் சில பேர். அப்படி பயணங்கள்என்று தனியாக போகாவிட்டால் கூட வாழ்க்கை நம்மை பல நேரங்களில் பயணங்களுக்கு இட்டு செல்லும். அப்படி சில பயன்களில் வாயிலாக என்ன சொல்ல உள்ளார் என்பதை அறிவதற்க்கே இந்த வாசிப்பை இந்த வருடம் எடுத்தேன். இரண்டு வருடங்களாக புத்தக அறையில் என் தீண்டலுக்காக இருக்கும் இந்த புத்தகம் எப்படி இருந்தது என்று பார்ப்போம். 

                    ஒரு சாதாரணமான பயண குறிப்பு அல்லாமல் வாழ்க்கையின் பல நுணுக்கமான விஷயங்களையும் சேர்த்து சொல்லியுள்ளார் எஸ்.ரா. தனது வீட்டின் ஜன்னல் வழியாக உலகத்தை பார்க்க ஆரம்பித்ததை பற்றி எழுதும் அவர் இந்த புத்தகத்தின் முடிவில் எல்லா பயணங்களும் முடிவது நம் வீட்டை நோக்கி என்று சொல்லியுள்ளது அவ்வளவு அழகாக இருந்தது. இந்த உலகத்தில் நாம் சிறு சிறு விஷயங்களில் கூட சந்தோஷத்தை காணலாம் என்றும் நம்மை வியப்புக்கு உள்ளாக்க நம் நாட்டிலே எத்தனையோ இடங்கள் உண்டு இதற்காக கண்டம் விட்டு கண்டம் சுற்றி அலையவேண்டிய அவசியம் இல்லை என்ற உண்மையை அருமையாக சொல்லியுள்ளார். அவர் போன பல இடங்கள் நான் காண ஆசை பட்ட இடங்கள் தான் - சரஸ்வதி மஹால், கங்கை கொண்ட சோழபுரம், காசி என்று பல இடங்கள். சென்னையில் நான் வசித்த 9 வருடங்களும் பரங்கிமலை என்ற ஒரு ரயில் நிலையத்தை கடந்து சென்றிருக்கிறேன் பலமுறை. ஆனால் அந்த இடத்தின் பெருமையை அவர் சொல்லி தான் அறிகிறேன்.அடுத்த முறை சென்னை செல்களில் கண்டிப்பாக அந்த மலையை சென்று காணவேண்டும். இது போன்று எத்தனை எத்தனை அனுபவங்களால் நம்மை சுற்றி இருக்கும் விசாலத்தையும் நாம் அதற்குள் ஒரு சிறு புள்ளி தான் என்பதையும் உணர்த்துகிறார். மிக அழகான எளிமையான நடை. ஒவ்வொரு பகுதிக்கும் ஆரம்பத்தில் ஒரு அழகிய கவிதை கூட இருந்தது.        

                    ஒரு தனிமை விரும்பியான நான் பயணங்கள் செல்வது மிகவும் கம்மி. சென்றால் கூட தனியாகவோ அல்லது நெருங்கிய நண்பன் ஒருவனுடனோ மட்டும் தான். அப்படியே சென்றாலும் எல்லோரும் செல்வது போல முக்கியமான பொழுதுபோக்கு இடங்களை நாடி செல்வதில்லை. கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், காடு, மலை, ஊர் தெருக்கள் என்று சுற்றி திரிவது வழக்கம். அதே போல் மண், கற்று, மழை, மரங்கள், நீர்நிலைகள் என்று செல்லும் எனக்கு இது ஒரு சிறந்த புத்தகமாக பட்டது. என்னை போல் யோசிக்கும் ஒருவரின் அனுபவங்கள் எனக்கு மிக பெரிய ஊக்கமாக உள்ளது. இது போல் பயணங்கள் மேலு மேலும் மேற்கொள்ளவும் அதே போல் நம்மை சுற்றி உள்ள சிறு சிறு சந்தோஷங்களை கண்டறியவும்.

வாசிப்போம்! நேசிப்போம்!!



No comments:

Post a Comment