Wednesday, 10 April 2019

சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் - புத்தக விமர்சனம்


தமிழ் இசையின் மிக முக்கியமான இசை கருவிகளில் ஒன்று நாதஸ்வரம். தமிழகம் போல் உலகத்தில் வேறு எங்கும் இந்த இசை கருவி வாசிக்க படுவதும் இல்லை. தென்னிந்தியாவில் கல்யாணம் மற்றும்  கோவில் மங்கள இசையில் மிக முக்கியமான இடம் நாதஸ்வரத்திற்கு உள்ளது. சிலப்பதிகாரத்தில் கூட கூறபட்டிருக்கிறது. "தில்லானா மோகனாம்பாள்" படம் பற்றி தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. தஞ்சாவூர் பக்கம் நல்ல பெயர் பெற்ற நாதஸ்வர வித்வான்கள் இருப்பதை கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் கரிசல் நிலத்திலும் இருந்ததை இந்த புத்தகத்தின் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன்.

ரத்தினமும் பக்கிரியும் கரிசல் பூமியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள். ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்றவர்கள் ஜாதி பெயர் சொல்லி அசிங்க படுகிறார்கள். ரோஷக்காரனான பக்கிரி கையை ஓங்கவே அது ஒரு சண்டையாகி ஊர் மக்களால் கட்டி வைத்து உதைக்க படுகிறார்கள். அதற்கிடையே இரண்டு சாதிகளுக்குள் கூட உரசல் வருகிறது; கோவில் மரியாதையை சொல்லி. எல்லோரும் தூங்கிய பிறகு கோவில் பூசாரி அவர்களை விடுவிக்கிறார். பக்கிறியோ அங்கு தீ வைத்து விட்டு செல்கிறான். அவர்கள் போலீஸிடம் சிக்காமலிருக்க அங்கிருந்து தப்பித்து செல்லும் இடங்களில் நாமும் அவர்களுடன் பயணிப்பதே இந்த சஞ்சாரம். அவர்கள் கூட மட்டும் இன்றி அவர் நினைவலைகளில் கூட சஞ்சரிக்கிறோம். பக்கிரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ஊடே நாம் செல்கிறோம். அவன் நாதஸ்வரம் கற்ற விதம், சென்ற கச்சேரிகள், படும் கஷ்டங்கள் - இதெல்லாம் சொல்வதன் வழி எழுத்தாளர் நம்மை அவர்களின் வாழ்க்கைக்கே எடுத்து சென்று விடுகிறார். நாதஸ்வர கலைஞர் கவுரவ படுத்த பட்ட காலம் முதல் போக போக அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களும் படும் அவமானங்களும் வெளிச்சமிட்டு காட்டுகிறார் எழுத்தாளர் பக்கிரி மற்றும் ரத்தினத்தின் வழி.

முகலாய சாம்ராஜ்யம் வரை சென்ற நாதஸ்வர இசையின் புகழ் காலத்தின் போக்கில் பேண்ட் செட், செண்டை மேளம் இவைகளின் மத்தியில் நலிந்து போக ஆரம்பிக்கும் நிலைமையை காண்கிறோம். கடவுள் முன்னும், கச்சேரிகளிலும், ராஜாக்களின் முன்பும் வாசிக்க பட்ட அந்த இசை காலப்போக்கில் தெரு கூத்துகளிலும், கல்யாண வீடுகளிலும் மட்டும் காணும் ஒன்று ஆகிவிட்டது. தஞ்சை பகுதிகளில் நாதஸ்வர கலைஞர்கள் புகழை அடைந்த போது கரிசல் நிலைத்து கலைஞர்கள் யாருக்கும் தெரியலாமே இருந்து விட்டார்கள். ஜாதி அமைப்புக்கு கூட இதில் ஒரு பெரிய பங்கு இருக்கிறது.

நாம் அன்றாடம் செல்லும் அதிகமான கோவில்களில் கவனித்து பாருங்கள். ஒரு இயந்திர கருவியே மங்கள இசை முழக்குகிறது . சற்று அதை கூர்ந்து கவனித்தால் ஒரு கலைஞன் வாசிப்பில் இருந்து நாம் அடையும் சந்தோஷமும் பக்தியும் பரவச நிலையும் என்றும் அந்த கருவி தர இயலாது. கலைஞர்கள் வாசிக்க கிடைக்கும் இடங்கள் இன்னும் நலிந்து போய்விட்டது இந்த காலத்தில். பணம் பெரும் பங்கு வகிக்கும் இந்த காலகட்டத்தில் இந்த கலையை கற்க வரும் மக்களும் குறைத்துவிடுகிறார்கள். நான் வாசிக்கும் எஸ்.ரா-வின்  முதல் படைப்பு இது. யாரும் சிந்திக்காத இந்த தலைப்பை எடுத்ததற்கு அவருக்கு என் பாராட்டுக்கள். காலத்தின் போக்கில் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் அருமையாக சொல்லப்பட்டிருக்கும் இந்த புத்தகம் சாகித்ய அகாடெமி விருது பெற்றது ஒன்றும் ஆச்சர்யப்படும் தகவல் அல்ல. இந்த இயந்திர உலகத்தில் நலிந்து வரும் ரசனை, பிணைப்பு, மதிப்பு இவையெல்லாம் பற்றி சொல்லும் இந்த புத்தகம் கண்டிப்பாக வாசிக்கப்படவேண்டிய ஒரு படைப்பே.

Book-o-Meter

No comments:

Post a Comment