இந்த வருடம் இரண்டு எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்கு அறிமுகமானது. ஒன்று இமயம் அவர்கள். இன்னொன்று ஆதவன். ஆதவன் என்ற பெயரைக் கேட்டதுண்டு என்றாலும் இது வரை அவரின் படைப்புகள் எதுவும் வாசித்ததில்லை. நூலகத்தில் சென்ற பொது பார்க்க நேர்ந்த இந்த புத்தகத்திலிருந்து இவருடன் அறிமுகம் ஆகலாம் என்று முடிவு செய்தேன்.
தில்லியில் வசிக்கும் பசுபதி மற்றும் அவர் குடும்பத்தின் வாழ்க்கையில் சில நாட்களே இந்த புதினம். அரசு அதிகாரியாகப் பனி புரியும் பசுபதி, அதற்க்கேரப்ப பகட்டு வாழ்க்கை வாழும் மனைவி. குடும்பத்தின் மீது பிணைப்பே இல்லாமல் வாழும் பத்ரி, வாழ்க்கையை எந்த திசைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று தெரியாத செல்லப்பா, அமெரிக்காவில் முதுகலை படிப்பு படிக்கும் விசுவம் என்று இவர்கள் சிந்தனைகளினூடே செல்லும் கதை இது.
எனக்கு இந்த வாசிப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றியது. கதையானது கதைமாந்தர்களின் நினைவுகளின் வாயிலாக நகர்கின்றது. நிகழ்வுகளைவிட நினைவலைகளே இதில் நிறைந்திருக்கிறது. இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. கதை முழுதும் தில்லியில் நடக்கிறது. ஆதவன் சில காலம் அங்கு வேலை புரிந்ததாலோ என்னமோ அந்த இடத்தை தத்ரூபமாகக் காட்டியுள்ளார். இடம், சுற்றுச்சூழல், மக்கள், நெரிசல் என்று அனைத்தையுமே நம் கண் முன்னாள் காட்டுகிறார். சிந்தனைகளினூடே நகரும் இந்த கதையில் பல நம் சிந்தனைகளை அங்கங்கே பிரதிபலிக்கத்தான் செய்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை சமூகச் சூழல்களால் எப்படி மாறுகிறது என்று இதில் காணலாம். சிந்தனைகள் கூட. சிந்தனைகளின் உள்ளும் புறமும் நடக்கும் சம்பாஷணைகள் பல கதைமாந்தர்கள் எப்படி வாழ்க்கையைப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தனி நபர் சுதந்திரம், பெண்ணியம், சமூக மாற்றங்கள், காதல், காமம், வேளையில் நடக்கும் அரசியல்கள் என்று பல விஷயங்கள் இங்குப் பேசப்படுத்து. இருந்தும் இந்த கருத்துக்களும் கதைமாந்தர்களும் நம் மனதில் அவ்வளவாக ஒன்றவில்லை. அங்கங்கே சில இடங்களில் வாசிப்பு சற்று தொய்வடைகிறது.
ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை ஆதவன் இதில் எனக்கு அளித்திருக்கிறார். ஆழமான கருத்துக்களைக் கொண்டாலும் என் மனதுள் ஆழமாகப் பதியவில்லை. ஒரு முறை வாசிக்கலாம்.
No comments:
Post a Comment