Friday, 20 December 2024

ஆலம் - ஜெயமோகன் - புத்தக விமர்சனம்

                    ஒவ்வொரு வருடமும் புத்தகக்கண்காட்சியின்போது தவறாமல் ஒரு சில எழுத்தாளர்களின் புத்தகங்களில் ஒன்றேனும் வாங்கும் பழக்கம் என்னிடம் உண்டு. அதில் ஒருத்தர் ஜெயமோகன். அப்படி 2024இல் வாங்கின புத்தகம் தான் ஆலம். ஒரு தொலைக்காட்சி தொடருக்காக எழுதப்பட்ட கதை என்று தெரிந்ததும் பரபரப்பான ஒரு கதைக்களம் எதிர்பார்த்து வாசித்தது தான் இந்த புதினம்.

                    திருநெல்வேலியை மையமாக நடக்கும் கதை இது. பகை என்ற சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு குடும்பங்களில் ஒன்றைச் சார்ந்தது இந்த புதினத்தின் நிகழ்வுகள். இரண்டு குடும்பங்களின் நடுவே நடக்கும் ரத்த வெற்றியாட்டத்தின் நடுவில் ஒரு இளைஞன் தவறாகக் கொலை செய்யப்படுகிறான். அதையும் அந்த குடும்பம் துச்சமாக மதிக்கிறது. வருடங்கள் செல்ல செல்ல அந்த கொலை நிகழ்த்திய குடும்பத்தின் அங்கங்கள் பலர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த குடும்பமே பூண்டோடு அழியும் நிலையில் இதற்க்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். இரு குடும்பங்களின் பகையால் நடந்த கொலைகளா? அல்லது வேறு யாராவது நிகழ்த்தும் வெறியாட்டமா என்று கண்டறிவதே இந்த புதினம்.

                    முதல் பக்க முதல் கடைசி வரை பரபரப்பாகவே செல்லும் கதை இது. ஜெயமோகன் வழக்கமாக எழுதும் பாணியிலிருந்து சற்று வித்தியாசமாக நிற்கிறது இந்த புதினம். வேகமான நடையால் நம்மை கட்டிப்போடுகிறார். ஆனால் அந்த வேகம் கதையின் உணர்ச்சியை எங்கேயும் சிந்திக்கவில்லை. கதை மாந்தர்கள் அனுபவிக்கும் மரண பயமும், கோபமும், பகைமை உணர்வையும் நம்மால் உணர முடிகிறது. திரைக்காக எழுதப்பட்டதாலோ என்னவோ ஒரு திரைக்கதை வசிக்கும் அனுபவம் எனக்குள் இருந்தது. இந்த புதினத்தின் பெரு ஆலம். அதன் பொருள் நஞ்சு. பகையானது அதனைச் சார்ந்து இருக்கிறவர்களுக்கு எப்படி நஞ்சாக மாறுகிறது என்பதை இங்குக் காணலாம். ஒரு சாதுவான தனி மனிதனை எப்படி அது ஒரு மிருகமாக மாற்றுகிறது என்பதை மிக அழுத்தமாக இந்த புதினம் காட்டுகிறது. 

                    ஆரம்ப பக்கங்களில் பூஞ்சையைப் பற்றி வரும் பேச்சு எதற்கு என்று நம்முள் கேள்வி எழுந்தாலும் அதற்கும் கதைக்குமான தொடர்பை அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பகைமையைப் பூஞ்சையோடு நம்மால் உவமைப்படுத்த முடிகிறது. கதை முழுதும் நாம் இதைக் காணலாம். கத்தியின் முடிவுக்கு முன்னால் வரும் சில பாகங்கள் சற்று நம்பகத்தன்மை குறைவாக இருந்தது என்றாலும் நாம் அதைப் பெரிதாக நினைக்காத அளவுக்குக் கத்தி நகரும். ஒரு வழக்குரைஞரின் ஜூனியரின் பார்வையில் நாம் இந்த கதையைக் காண்கிறோம். கதையை ஒரு மூன்றாம் நபராகக் கதையின் வெளியிலிருந்து ரசிக்க அது உதவுகிறது. இந்த கதையில் வரும் கதை மாந்தர்கள் மிகவும் ஆழமானவர்களாகப் படுகிறார்கள். இருந்தும் பகை, பயம் இரண்டும் பொதுவானதாக உள்ளது. பழமை, புதுமை, ரத்த வெறியாட்டத்தை விட்டு வெளியே செல்ல நினைக்கும் சிலர், வேறு வழியில்லாமல் சிக்கித் தவிக்கும் சிலர் என்று வித்தியாசமான மாந்தர்கள். 

                    மிஷ்கின்-கௌதம்மேனன்-வெற்றிமாறன் கூட்டணியில் திட்டமிடப்பட்ட ஒரு தொடருக்கான கதை. அது எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லோராலும் வாசித்து ரசிக்க முடிந்த ஒரு கதை. கோபமும் பகையும் எதற்கும் தேர்வு அல்ல என்று அந்த இரண்டையும் வைத்தே சொல்லப் படும் ஒரு கதை. பகைமையும் ரத்த நெடியும் நிறைந்த ஓர் புதினம்.



No comments:

Post a Comment