Sunday, 23 June 2024

செல்லாத பணம் - இமையம் - புத்தக விமர்சனம்


                    சென்ற வருடம் இறுதியில் என் புத்தக அலமாரியை இடம் மாற்றுகையில் இந்த புத்தகம் கண்ணில் பட்டது. சென்ற வருட புத்தக கண்காட்சியில் வாங்கி பிறகு அலமாரிக்குள் மறக்கப்பட்டு இருந்தது. இமயம் என்ற பெயர் கேட்டுள்ளேன். என் நண்பர்கள் அவரை பற்றி சொல்லியிருக்கிறார்கள். சரி இந்த வருடம் இந்த புத்தகம் படித்து விடலாமே என்று முடிவின் விளைவே இந்த வாசிப்பு.

                    அப்பா, அம்மா, அண்ணன் என்று ஒரு அழகான குடும்பத்தில் வளரும் ரேவதி. காதல் கல்யாணத்தால் குடும்பத்திடம் இருந்து பிரிந்து வாழ்கிற நிலைமை. அது காதல் கல்யாணம் என்று சொல்ல இயலாது. அவளை ஒருதலையாக காதலித்தவன் உயிரை விட்டுவிடுவேன் என்று சொன்னதால் ரேவதியின் முடிவு அவனை கல்யாணம் பண்ணிப்பதே  என்றாகிவிட்டது. திடீர் என்று ஒரு நாள் அவள் தீவிபத்தில் சிக்கி ஜிப்மர் மருத்துவமனையில்  சேர்க்கப்படுகிறாள். இதன் பின் என்ன நடக்கிறது, இந்த நிகழ்வால் அவள் குடும்பத்தினருக்கு ஏற்படும் கஷ்டங்களும் மனக்குமுறல்களுமே இந்த புதினம்.

                    எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பித்த வாசிப்பு. ஆனால் போக போக மீண்டு வரமுடியாத ஒரு அனுபவத்திற்கு உள்ளாக்கியது இந்த புதினம். எழுத்தாளர் யதார்த்தத்தை தத்ரூபமாக சொல்லியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மிடம் வாழ்க்கையை சொல்லி செல்கிறது.  ரேவதி முக்கால்வாசி கதையிலும் மற்றவர்கள் பேச்சிலும் நினைப்பிலுமே சஞ்சரிக்கிறாள். இந்த புதினத்தை வாசிக்கிறவர்கள் கண்டிப்பாக ரேவதியின் வாழ்க்கையையும் வழியையும் கஷ்டங்களையும் எளிதாக கடந்து போக மாட்டார்கள். கதை அதிகமாக நகரும் இடமானது ஜிப்மர் வளாகம் தான். அதுவும் குறிப்பாக தீக்காயசிகிச்சை பிரிவு. அங்கு நடக்கும் அவலங்கள் மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார், அங்கு தீக்காயம் பட்டு வருகிறவர்கள் வலி ஒரு புறம் என்றால் அவர்களுக்காக ஏங்கி அரை வெளியில் காத்திருக்கும் குடும்பத்தினர் மறு புறம். ஒரு சம்பவம் சுற்றியுள்ள எத்தனை பேரை பாதிக்கின்றது. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, புருஷன் என்று பல பேர் பார்வையில் இந்த கதை நகர்கிறது. ஒரு அற்பமான விஷயத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிறததா என்று நாம் ரேவதியை பற்றி நினைக்கலாம். அது ஒகாதல் என்று கூட நம்மால் சொல்ல இயலாது. ஆனால் போக போக அவள் அனுபவிக்கும் வலி அவள் வாழ்க்கையை பார்க்கும் விதம் மருத்துவமனையில் படும் இன்னல்கள். கோபம், பகை மற்றும் ஏற்றத்தாழ்வு மனிதர்களை எப்படியெல்லாம் நிலைகுலைய வைக்கிறது என்று இதில் நாம் காணலாம். இந்த புதினத்தை எளிதில் கடந்து செல்லமுடியாமல் பல முறை பக்கங்களை விரித்து வைத்து சிந்தனையில் ஆழ்ந்த்திருக்கிறேன், கணீர் விட்டிருக்கிறேன். அவளது அண்ணனும் அப்பாவும் அவ்வளவு கோவம் வைத்திருந்தாலும் செய்தி அறிந்த நொடிப்பொழுதில் அதெல்லாம் மறக்கப்பட்டது. ரேவதியின் கணவன் மீது வெறுப்பு ஏற்பட்டாலும் கூட கடைசியில் இலை விஷயங்களில் அவன் நினைப்புகள் சரியென பட்டது. பணத்தை வாரி இறைக்க தயாராக இருந்தும் அதை வைத்து ஒன்றும் செய்யமுடியாத நிலைமை. பணத்தால் மரணத்தை, வலியை போக்கமுடியுமா என்ன? மிக சரியாகவே இந்த பேரை இமையம் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த கதாபாத்திரங்கள் மட்டுமின்றி புதினம் முழுதும் வந்துசெல்லும் பாத்திரங்கள் மூன்று -  மரணம்,பணம், ஆம்புன்ஸ்.

                    அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாத புதினம். பல சிந்தனைகள் சில கண்ணீர்கள் நெறய சிந்தனை என்று எனக்குள் பலவிதமான உணர்ச்சிகளை உண்டாக்கிய வாசிப்பு. கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புதினம். இமையம் கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்கப்படவேண்டியவரே. இளகிய மனம் படைத்தவர்களுக்கு இது சற்று கடினமான வாசிப்பாகவே அமையும். 



No comments:

Post a Comment