ரொம்ப நாட்களாக கையில் இருக்கின்ற புதினம். இப்போது தான் வாசிக்க ஒரு மனம் வந்தது. வாசிப்பதற்கு முன் சில விமர்சனங்களை கண்ட பிறகே இந்த வாசிப்புக்கு வந்தேன்.
சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பி அவனது அம்மாவின் சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். மீதி நாட்கள் அங்கேயே ஒரு தொழில் செய்து தனது மக்களோடு வாழவேண்டும் என்பது அவன் ஆசை. சாயாவனம் என்ற ஊருக்கு வரும் அவன் அங்கு ஒரு காட்டை விலைக்கு வாங்குகிறான். அதை அழித்து ஒரு சர்க்கரை ஆலை துவங்குவதே அவன் ஆசை. ஆனால் அது ஒரு சாதாரணமான காடு அல்ல. வருடங்களாக வளர்ந்து ஒரு பெரும் வனமாக தென்பட்டது. முதலில் தனியாக ஆரம்பிக்கும் அவன் போக போக தனது மாமா அந்த ஊரில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் என்று ஒரு சிறு கூட்டத்தை சேர்த்து அழிக்க முற்படுகிறான். அந்த பெருங்காட்டுடன் நடந்ததும் போராட்டமே இந்த புதினம்.
ஒரு அழிவின் கதையை வாசிப்பது என்பது சற்று கஷ்டமான ஒன்று. எழுத்தாளர் இந்த கதையை சொல்லியிருக்கும் விதம் அந்த வாசிப்பை மிகவும் கடினமாக்குகிறது. அழிவும் சேதாரங்களும் நம் மனதில் ஆழமான ஓர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிதம்பரம் தன் வழியில் எது வந்தாலும் அதை ஏறி மிதித்து முன்னேறி செல்லும் ஒருவன். லட்சியத்தை அடைய துடிக்கும் அவன் மன உறுதி அபாரமானது. ஆனால் மறு பக்கத்திலோ அந்த வனமும் தன் முழு பலத்தை வெளிக்காட்டுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவன் உறுதி வெல்வதை காண்பது வேதனையாக இருந்தது.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரை மிக அழுத்தமாக காட்டியுள்ளார் சா.கந்தசாமி. சிதம்பரம் எனது கண்ணில் ஒரு வில்லமாகவே காட்சியளிக்கிறான். பல விதமான மரங்களும் சிறு விலங்குகளும் பறவைகளும் கொண்ட அந்த பூமி கடைசியில் வெறிச்சோடி கிடக்கையில் மனதில் இனம்புரியாத ஒரு நெருடல், ஒரு வலி. வனம் தோல்வியினுள் தள்ளப்பட என் வாசிப்பின் வேகமும் வெகுவாக குறைந்தது. எழுத்தாளரின் பலம் அதில் தென்படுகிறது. நம்முள் அந்த வலியை மிக ஆழமாக கொண்டு வருகிறார். மனித உறவுகளோடு கடந்து செல்லும் இந்த கதையில் எங்குமே வனத்தின் அழிவுக்கு எதிராக ஒரு குரல் கூட கேட்கவில்லை. சிதம்பரத்தினுள் ஒரு சிறு குற்ற உணர்ச்சி ஆழ் மனதில் இருந்தாலும் எந்த பயனும் இல்லை. கதை நடக்கும் காலகட்டத்தை நுணுக்கமாக சொல்லியுள்ளார் சா.கந்தசாமி. பாப்பாவின் கல்யாணம், பண்டம் மாற்றும் முறை, பிறகு காசு என்ற ஒரு பொருளை அங்கு சிதம்பரம் கொண்டு வருவது, அதை முதலில் கையாள தெரியாமல் கஷ்டப்படும் ஜனங்கள், அந்த காலத்து ஊரின் அமைப்பு, கிராமத்து வாழ்க்கை என்று அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் கந்தசாமி அவர்கள்.
வாசிப்பின் போது ஒவ்வொரு மரம், செடி, விலங்கு இவற்றின் பெயர்களை கோடிட்டுகொண்டே வாசித்தேன். போக போக கோடுகள் குறைந்து வெறுமை மட்டுமே மிஞ்சியது. கதையின் ஒரு தருணத்தில் ஒரு கூடு உடைந்து விழுந்து சிறு குஞ்சு ஒன்று பரிதாபமாக இரக்கிறது. சிதம்பரம் கண்ணீர் விட்டான். கூடவே நானும். புத்தகத்திலும் மனதிலும்! ஆங்கிலத்தில் "Sustainable Development" என்று ஒரு வார்த்தை உண்டு. இயற்கையோட இணைந்தது நாமும் வாழுதல் வளருதல் - இதுவே சரியான ஒரு வளர்ச்சி என்பது. நாம் பள்ளிகளில் இதை படித்திருப்போம். அது துளி கூட இல்லாத ஒரு கதை. ஆனால் அதன் முக்கியத்தை உணர்த்தும் ஒரு கதை. "சாயாவனம்" என்ற தலைப்பு கூட ஏதோ சொல்ல நினைப்பது போல் ஒரு உணர்வு. கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்கபடவேண்டிய ஒரு புத்தகம்.
No comments:
Post a Comment