தமிழ் நாவல்களை நான் படிக்க ஆரம்பித்தது சுஜாதாவின் புத்தகங்களின் வாயிலாகத் தான். அதுவும் துப்பறியும் கதைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். அதின் விளைவாகவே சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்தேன். பல நாட்கள் கழித்து அவர் புத்தகத்தை வாசிக்கலாம் என்று நினைத்தேன். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் படித்த இந்த புதினத்தைத் திரும்பவும் வாசிக்கலாமென்று எடுத்தேன்.
உமா மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் திருமணம் நடக்கின்றது. திருமண கோலாகலங்கள் முடிந்த பிறகு தேன்நிலவுக்காக பெங்களூர் செல்கிறார்கள். அங்கு ஹோட்டலில் கிருஷ்ணமூர்த்தி கொல்லப்பட யார் இதைச் செய்தார்கள் என்று கண்டறிவது தான் 'ஒரு நடுப்பகல் மரணம்'. காவல்துறை அவர்கள் தரப்பில் விசாரிக்க உமாவும் இதன் உண்மையைக் கண்டறிய முற்படுகிறாள்.
கணேஷ்-வசந்த் கதை என்று நினைத்துத் தான் இந்த புதினத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் இது அவர்கள் பாகமாகும் கதை அல்ல. துப்பறியும் கதைக்கே உண்டான வேகத்தோடு இந்த கதை நகர்கிறது. காவல்துறை விசாரணை நடத்தும் விதம் நன்றாகவே காட்டப்பட்டிருக்கிறது. இடையில் மரணத்திற்குப் பிறகு வீட்டில் சம்பவங்களை அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சென்னை மற்றும் பெங்களூரில் இந்த கதை அரங்கேறுகிறது. சுஜாதாவிற்குப் பழக்கப்பட்ட இடம் பெங்களூர் என்பதால் என்று நினைக்கிறேன். அவ்வளவு தத்ரூபமாக நம் கண் முன்னாள் அங்குள்ள இடங்களைக் கொண்டு வருகிறார். துப்பறியும் கதை என்பதால் அதிகமான கதாபாத்திரங்கள் இருந்தன என்றாலும் வாசகன் சந்தேகத்தை ஒருவர் பக்கம் திருப்பும் தருணங்கள் நிறையவே இருந்தது. என்றாலும் அதில் சிலது வேண்டும் என்றே திணிக்கப்பட்டது போல் தோன்றியது. முக்கிய பாத்திரங்களின் பாகங்கள் ஆழத்தோடு எழுதப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் வேகமாக வாசிக்க முடிந்த ஒரு விறுவிறுப்பான கதை. ஒரு திரைப்படம் பார்க்கும் அன்பவத்தைக் கொடுக்கிறது.
No comments:
Post a Comment