தமிழில் விறுவிறுப்பான கதைகளை அளிப்பதில் முக்கிய இடம் வகிப்பவர் ராஜேஷ் குமார். சற்றே தொய்வான கதையை படித்த பிறகு குற்றம் மற்றும் மர்மங்களை பின்னணியாக கொண்ட இவர் படைப்பை படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் ஆரம்பிக்கும் இந்த கதியில் இன்சொல் என்ற பெண்மணி நித்தீஷ் மற்றும் அவன் அம்மாவை சந்திக்கிறாள். தனது அண்ணனை ஞாபக படுத்திய அவனுடன் நட்பு பாராட்ட விரும்பியவன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறாள். ஆனால் அதில் பெரிதாக வெற்றி காணவில்லை. சென்னை வந்து பிறகு அவர்கள் இரண்டு வழிகளில் பிரிந்து சென்றாலும் இன்சொல் காவலர்களிடம் மாட்டிக்கொள்கிறாள். நித்தீஷை பற்றி தான் கேள்வி. என்ன மர்மம் இது? ஏன் இன்சொல் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க படுகிறாள். உண்மையில் நித்தீஷ் யார், என்ன குற்றம் அரங்கேறியுள்ளது என்பதெல்லாம் கண்டறிவதே கதை.
விறுவிறுப்பான கதைக்களம், எளிமையான நடை. ஒரே மூச்சில் வாசிக்க முடிந்த அளவுக்கு கதை நிகழ்கின்றது. பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு என்று விளம்பரங்களில் சொல்லி கேட்டதுண்டு. இந்த புத்தகம் அந்த அனுபவத்தை தருகிறது. ஒரு நிகழ்வு நடந்து அதை புரிந்து கொள்வதற்குள் அடுத்த நிகழ்வு என்ற பாணியில் கதையின் போக்கு அமைகிறது. திருப்பங்களும் பஞ்சமே இல்லை. என்ன பிரச்னையென்றால் ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த வேகம் சலிப்பையும் எரிச்சலையும் தருகிறது. கதை நகர நகர புது புது பாத்திரங்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இரண்டு மூன்று பேரை தவிர யாரும் மனதில் நிற்கவில்லை. கதையின் பாதி பகுதி வரை வாசிப்பு சீராக சென்றாலும் அதன் பிறகு திக்கு திசையின்றி செல்கிறது. கதையின் முடிவு கூட எதோ சம்பந்தம் இல்லாத மாதிரியே பட்டது. அதை முடிவு என்றும் சொல்ல முடியாது.
மொத்தத்தில், வேகமாக கதைக்களம் கொண்ட ஒரு கதை. குழப்பங்கள் அதிகமாக உள்ளது என்றாலும் ஒரு முறை வாசிக்கலாம்.
No comments:
Post a Comment