சின்ன வயதில் இருந்தே நான் தொலைக்காட்சியில் ரசித்த தொடர்களில் பலவற்றின் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். மர்ம தேசம், சிவமயம், கிருஷ்ணதாசி, ருத்ரவீணை, கோட்டைபுரத்து வீடு என்று பல தொடர்கள். பிறகு வாசித்தலே வாழ்க்கையானபோது அதிகமாக வாசித்ததும் இவர் புத்தகங்களைத்தான். இந்த வருடம் இவரின் படைப்பில் எனது முதல் வாசிப்பு இந்த புதினம்.
காவேரி கரையில் உள்ள மகேந்திரமங்கலம் என்ற தனது ஊருக்கு ராஜேந்திரன், மனைவி, மகளோடு வருகிறார். குடும்ப சொத்தை விற்றுவிட்டு போவது என்பதே லட்சியம். தடங்களில் ஆரம்பிக்கும் இந்த பயணம் ஊருக்கு வந்த பிறகும் மேலும் மேலும் தடங்கல்களாக மாறுகிறது. வீட்டில் அவர் கண்டெடுக்கும் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி. அதை கண்டுபிடித்த பின் ஊருக்குள்ளும் குடும்பத்திலும் நிகழும் விசித்திரமான சம்பவங்களும் அதன் பின்னணி கண்டறிவதுமே இந்த புதினம்.
சித்தர்கள் ஆன்மிகம் என்ற எழுத்தாளரின் பழக்கப்பட்ட பாணியில் கதை நகர்கின்றது. அடிப்படை கருத்துக்கள் இவைகள் என்றாலும் வித்தியாசமான கதைக்களம் வாசிப்பை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. 250 பக்கங்கள் கிட்ட வரும் இந்த புத்தகம் சற்றும் சலிப்பு தராமல் நகர்கின்றது. ராஜேந்திரனின் மகளில் தெரியும் மாற்றங்கள் அதிகமாக கதையின் சுவாரஸ்யாவும் அதிகரிக்கிறது. இரண்டு மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஆரம்பிக்கும் கதையில் திடீரென்று ஏகப்பட்ட பாத்திரங்கள் வந்து போகின்றன. இருந்தும் கதையின் வேகத்தை எந்த அளவிலும் இது பாதிக்கவில்லை. ஒரு படம் பார்க்கின்ற போல் எண்ணம். இருந்தும் கதை சற்று அவசரப்படுத்தியது போல் தோன்றியது. சில கேள்விகளுக்கு பதில் தெரியாமலே போனது போல் ஓர் உணர்வு,
விறுவிறுப்பாக நகரும் கதைகளை வசிப்பவர்களுக்கு இந்த புதினம் ஒரு நல்ல வாசிப்பாக அமையும். அனைவராலும் வேகமாக ஒரு முறை வாசிக்க தகுந்த ஒரு புத்தகம்.
No comments:
Post a Comment