Thursday 3 December 2020

ஆனந்த தாண்டவம் - இந்திரா சௌந்தர்ராஜன் - புத்தக விமர்சனம்

 

                    எப்போதாவது வாசிப்பில் சற்று சலிப்பு தட்டினால் நான் முதலில் நாடுவது இந்திரா சௌந்தர்ராஜனின் புத்தங்கங்களைத் தான். அவர் கதைகளில் வரும் சுவாரஸ்சயங்களும்  மர்மங்களும் ஆன்மீக கருத்துக்களும் வாசிப்பை பரபரப்பாக்குகின்றது. அப்படி ஒரு கட்டத்தில் நான் வாசிக்க நேர்ந்ததே இப்புத்தகம்.

                    மழையே இல்லாது வாடி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தேவபுரம். அங்குள்ள கோவிலில் திடீரென்று தேவதாசி குலத்தை சேர்ந்த கமலாம்பாள் நடனம் ஆடுகிறாள். அதை தொடர்ந்து மழை பெய்ய; அது சரியாக மூன்று நாள் நீடிக்கிறது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்த பத்திரிகையாளன் பிரபாகரன் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க அங்கு வருகிறார். அனைத்தும் கடவுள் செயல் என்ற நம்பிக்கையை முறியடிக்க முயல்கிறார் அவர். இதற்கிடையில் சொர்ணம் என்ற ஒரு திருநங்கை கமலாம்பாளின் சதங்கைகளையும் தட்டுக்கட்சியையும்  திருடிகிறாள். ஒரு சாபத்தால் மழையின்றி அவதிப்படும் தன் ஊர் நஞ்சுண்டாபுரத்துக்காக. அங்கு என்ன நடக்கிறது? பிரபாகரனால் இந்த மர்மத்தை கண்டறிய முடிந்ததா? திருட்டு போன பொருட்கள் மீட்டெடுக்கபட்டதா? என்பது தான் கதைக்களம்.

                    ஏற்கனவே சொன்னது போல் கதைகளை பரபரப்பாக கொண்டு போகும் திறமை உடையவர் இந்திரா சௌந்தர்ராஜன். இந்த புதினமும் அப்படியே. ஆரம்பத்தில் ஒரு ஐந்து பக்கங்கள் வரை சற்று தொய்வாக இருந்தாலும் பிறகு நன்றாகவே சென்றது. ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டவில்லை. ஏனென்றால் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டே இருந்தது. எழுத்தாளரின் மற்று கதைகளை போல் இதிலும் ஆன்மிகம் மற்றும் நாத்தீகம் இடையிலானு பட்டிமன்றம் நடக்கின்றது கதாபாத்திரங்களின் வாயிலாக. சொர்ணம், குருக்கள் இவர்கள் எல்லாவற்றையும் ஆன்மீக ரீதியாக பார்க்க; பிரபாகரனோ எல்லாம் விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவோடு அணுகுகிறான். நமக்குள் எடக்கு மடக்காக எழும் கேள்விகள் அனைத்தையும் பிரபாகரன் வழியாக இதில் கேட்க படுகிறது. சொர்ணம் என்ற பாத்திரம் திருநங்கையாக வருகிறாள். ஒரு திருநங்கையின் கோணத்தில் எழுதின பகுதிகள் இந்த காலகட்டத்திற்கு ஏற்றதே. தேவதாசிகளை பற்றியும் சில விஷயங்கள் இந்த புத்தகத்தினூடே தெரிந்து கொன்டேன். பிரபாகரன், அஸ்வதி, பத்திரிகை ஆசிரியர், நர்த்தகி, சொர்ணம், கமலாம்பாள், குருக்கள், யோகி என்று எல்லா பாத்திரங்களுக்கும் அவர்களுக்குண்டான முக்கியத்துவம் அளிக்க பட்டிருக்கிறது.

                     ஒவ்வொரு ஆன்மீக ரீதியான சிந்தனைகளையும் விஞ்ஞான ரீதியாக கேள்வி கேட்டு கடைசியில் அவருக்கே உரிய பாணியில் ஆன்மீக சிந்தனைகளை நிலை நாட்டுகிறார் எழுத்தாளர். இந்திரா சௌந்தர்ராஜன் எழுத்துக்கள் புடிக்கும் அனைவரும் வாசிக்க தகுந்த ஒரு புத்தகமே இது.



No comments:

Post a Comment