Friday 20 November 2020

கழிமுகம் - பெருமாள் முருகன் - புத்தக விமர்சனம்

 

             

                    சென்ற வாரம் நூலகம் சென்றிருந்தேன். புத்தக அறைகளூடே சஞ்சரிக்கையில் Estuary by  Perumal Murugan  என்ற தலைப்பு கண்ணில் பட்டது. புத்தகத்தின் முதல் சில பக்கங்கள் வாசித்தேன். ஆங்கில மொழி பெயர்ப்பு என்னை அவ்வளவாக கவரவில்லை. இருந்தும் மனதிற்குள் அதை தமிழாக்கம் செய்து பார்த்தபோது வழக்கத்திற்கு மாறான ஒரு நெடி அவர் எழுத்துக்களில்! உடனே அதன் தமிழ் பதிப்பை பெற்று வாசிக்க ஆரம்பித்தேன். கடந்த இரண்டு வருடங்களினுள் பெருமாள்  முருகன் என்ற எழுத்தாளரின் படைப்புகள் எனக்கு அறிமுகமாகி என் மனதிற்குள் நீங்கா இடத்தை பெற்றிருந்தது. அப்படி இருக்கையில் இதை மட்டும் விட்டு விடுவேனா என்ன!
                    குமராசுரர், மங்காசுரி மற்றும் மேகாஸ் என்ற ஒரு சிறு குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை இது. அரசு வேலை புரியும் குமராசுரரின் குடும்பமானது ஒரு நடுத்தர குடும்பம். குமராசுரர் எப்பொழுதும் எல்லாத்துக்கும் தேவைக்கு மேலயே யோசித்து தன்னையே வருத்திக்கொள்ளும் இயல்புடையவர். தன் வாழ்க்கையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைப்பவர். மற்றொரு  ஊரில் உள்ள கல்லூரியில் படிக்கும் அவரது மகன் மேகாஸ் ஒரு நாள் இரவு அவருடன் கைபேசி வாயிலாக பேசுகிறான். வழக்கத்திற்கு மாறாக  ஒற்றை வசனங்களுக்கு மேல் பேசுகிறான் என்று அதிசயித்தவரிடம் ஒரு புதிய கைபேசி வேணும் என கேட்கிறான். அதன் விலை கேட்டு அதிர்கிறார். வாங்கி தருவதா இல்லை வேண்டாமா என்பதை பற்றி ஒரு பெரிய பட்டிமன்றமே மனதிற்குள் நடக்கிறது. தொடர்ந்து அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் அதை சுற்றியே வலம் வருகிறது. அவர் பயணிக்கும் அந்த பாதைகள் மற்றும் நினைவலைகளில் நம்மையும் இழுத்து சென்று அவருடன் சேர்ந்து ஒரு முடிவை எடுப்பதே இந்த 'கழிமுகம்'.
                    ஒரு புத்தகத்தின் முன்னுரையை படிக்கும் பழக்கம் வந்ததற்கு முதல் காரணம் பெருமாள் முருகன். இக்கதையில் நான் மனிதர்கள் மற்றும் தெய்வங்களை பற்றி எழுதவில்லை. நேர்கோட்டில் செல்லும் அவங்களை பற்றி எழுதி என்ன பலன். அசுரர்களை பற்றி சொல்கிறேன் என்று அழகாக நகைக்கிறார். மற்றும் இந்த புதினத்தில் எந்த ஒரு பாத்திரத்தின் முகம் மற்றும் உடல் அமைப்பும் அவர் விவரிக்கவில்லை. உங்கள் மனபிம்பத்தின் வாயிலாக கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார். பெருமாள் முருகனின் மற்ற நூல்களில் இருந்து இந்த நூலை தனித்து காட்டுவது கதை நடக்கும் களம் தான். நான் இது வரை வாசித்த அவரின் புதினங்கள் அனைத்தும் கிராமங்கள் மற்றும் கிராமத்து வாழ்க்கையை சுற்றியே இருக்கும். மண்வாசனை கமழும் புதினங்கள். ஆனால் அதற்க்கு மாறாக இப்புதினம் நகரம் மற்றும் நகரவாழ்வை சார்ந்ததாக இருக்கிறது. அனாலும் அவர் அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார். கிராமத்தை நம் கண்முன் கொண்டுவந்த அதே நேர்த்தி நகரத்தினுள்ளும் காணலாம்.
                     ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை கொண்டதே இந்த கழிமுகம். இருந்தும் பல குரல்கள் கேட்பது போல உள்ளது. குமராசுரர், மங்காசுரி மற்றும் மேகாஸ் ஒரு வீட்டினுள் இருந்தாலும் வெவ்வேறு கோணங்களாக தென்படுகிறார்கள்.  நல்ல படிப்பும் உலக ஞானவும் இருந்தும் கூட தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு அதில் கட்டுண்டு கிடைக்கும் குமராசுரர். காலத்துக்கேற்ப மாற அவர்  தயங்குகிறார். அதிகமாக படிப்பறிவும் உலகத்தை பற்றிய ஒரு விரிந்த பார்வை இல்லாதபோதிலும் மகனின் உந்துதலால் தன்னை நவீனமென  காட்ட நினைக்கும் மங்காசுரி. இந்த காலத்து இளைஞனாக வலம்  வரும் மேகாஸ். ஒரு சின்ன விஷயத்துக்கு கூட பதட்டப்படும் தந்தை ஒரு புறமிருக்க தனக்கான தேவையை மிக நன்றாக புரிந்து வைத்திருக்கும் மகன் இன்னொரு புறம் இருக்கிறான். காலகட்டத்தின் இடைவெளியை உணர்த்தி இந்த அப்பா மகன் உறவை  வித்தியாசமாக காண்பிக்கிறார். 
                    எனக்குள் ஒரு குமராசுரர் இருப்பதை கண்டு கொண்டேன். ஒரு காலகட்டத்தின் வெளியில் வரமுடியாமல் சிக்கித் தவிக்கும் உணர்வு எனக்கு நன்றாகவே தெரியும். அவருடன் சிரிக்கவும் வாய் விட்டு அழவும் செய்தேன். ஒரு கட்டத்தில் அவர் மனக்குமுறல்கள் வெடித்து மங்காசுரி தோள் சாய்ந்து அழுததில் யதார்த்தம். மீதி இருக்கும் கதாபாத்திரங்கள் குமராசுரரின்  மனதில் எழும் கேள்விகளும் பதில்களுமாக தெரிகின்றன. மங்காசுரியின் பாத்திரம் ஆரம்பத்தில் தெளிவாக இல்லாவிட்டாலும் மிக முக்கியமான தருணத்தில் அந்த கதாபாத்திரத்தை அழகாக அமைக்கிறார் எழுத்தாளர். மேகாஸ் நடத்தை இந்த நவீன யுகத்தில் காணும் ஒரு சாதாரண பையனை ஞாபகப்படுத்தினாலும் இந்த காலகட்டத்து இளைஞர்களின் தெளிவும் முதிர்ச்சியும் அவனில் காணமுடிகிறது. சமூகத்தையும் அரசையும் மற்றும் இயல்புகளையும் அவருக்கே உரிய பாணியில் பெருமாள் முருகன் எள்ளி நகையாடுகிறார். "மாற்றம் ஒன்றே மாறாதது" என்பதை அழகாக முன்வைக்கிறார் எழுத்தாளர். கடைசியில் அவர் அதிகாசுரனுடன் சிலவிடும் சில நாட்களை அழகாக மென்மையாக சொல்லியிருக்கிறார். அவருக்கு கழிமுகத்தில் கிட்டும் அனுபவம் நானும் நன்றாக ரசித்தேன். இந்த பெயர் எதற்கு என்று முதலில் தெரியாவிட்டாலும் கதையின் கடைசி பகுதியில் அது தெளிவாகிறது.
                    மர்மம், திகில் என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்தஎனது வாசிப்பு பெருமாள் முருகன், ஜெயகாந்தன் மற்றும் ஜெயமோகன் என்பவர்களின் எழுத்துக்களால் தான் விரிவடைந்தது. தமிழ் மேல் உள்ள எனது பற்றும் அபிமானமும் காதலும் பன்மடங்கு வளர மிக முக்கியமான காரணமும் இவர்கள் தான். அதிலும் பெருமாள் முருகனின் கதைகள் தைரியமும் யதார்த்தமும் ஒரு திடமான பார்வையையும்தருகிறது. அந்த கைகளில் இருந்து வந்த இந்த படைப்பு கண்டிப்பாக அனைவராலும் வாசிக்க தகுந்த ஒரு நூல். அவரது இயல்பான கிராமத்து  நடையில் இருந்து விலகியது முதலில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தாலும் போக போக இந்த கதை நமக்கு ஒரு சிறந்த வாசிப்பை தருகிறது. 


No comments:

Post a Comment