Sunday, 18 December 2022

விக்ரமா விக்ரமா (பாகம் 1) - இந்திரா சௌந்தர்ராஜன் - புத்தக விமர்சனம்

                    எப்பொழுதெல்லாம்  வாசிப்பில் ஒரு சோர்வு வரும்பொழுது எல்லாம் நான் நாடுவது இந்திரா சௌந்தர்ராஜனின் புத்தகங்களை தான். இப்போது அப்படி ஒரு தருணத்தில் படித்ததே இந்த புத்தகம். சென்ற ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியின் பொழுது வாங்கப்பட்டது. கற்பனையும் நற்கருத்துக்களும் இணைத்து கதைகள் புனைவதில் இவருக்கு ஒரு தனி திறமை.

                    கதை இரண்டு காலகட்டத்தில் நகர்கின்றன. விக்ரமாதித்த மகாராஜாவின் கதை ஒரு காலகட்டம். அதில் அவர் பிறப்பு, வாழ்க்கை, ஆட்சிக்காலம் மற்றும் வேதாளத்தை துரத்தி செல்வது என்றபடி நமக்கு பழக்கப்பட்ட கதை நகர்கிறது. இன்றைய காலகட்டத்தில் இன்னொரு கதை கூடவே  நகர்கின்றது. விக்ரமன் மற்றும் பட்டாபி என்று இரண்டு இளைஞர்கள் அவர்கள் வளர்ந்த அநாதை இல்லம் விட்டு வெளியே வர யதேர்ச்சியாக ஒரு குழந்தையை காப்பாற்ற நேர்கிறது. அதன் விளைவாக ஒரு வேலையும் நல்ல வாழ்க்கையும் கிடைக்கிறது. ஒரு ஏட்டின் படி இவர்கள் விக்ரமாதித்த மஹாராஜா மற்றும் பட்டியின் கடைசி  மறுபிறவிகளில் என்று தெரிய வருகிறது. இந்த ரகசியத்தை அறிந்தவர்கள் இதை நம்பினாலும் விக்ரமன் இதை ஒரு பகுத்தறிவாளனாக பார்த்து ஏளனம் செயகிறான். அதற்கிடையே ராஜாவின் காலத்தில் இருந்த துஷ்ட சன்யாசி மற்றும் வேதாளம்; நந்தன் பைராகி மற்றும் வேதாள சிங் என்று பிறவி எடுக்கிறார்கள். பல கொலைகள் செய்த நந்தன் பைராகி விக்ரமன் வாயிலாக அற்புத வாள் அடைய விரும்புகிறான். விக்ரமனின் உயிரையும் கூட. தனது ஜாலத்தால் அடிமையாக்குகிறான் விக்ரமனை. வீட்ல சிங் நான்தான் பைராகியை கொல்ல முயற்சிகள் மேற்கொள்கிறான். இவர்களது எண்ணங்கள் ஈடேறுமா? கடைசியில் நன்மை ஜெயிக்குமா? விக்ரமனின் பிறவிக்கான இலக்கு அடையப்படுமா? என்பது தான் விக்ரமா விக்ரமா வின் முதல் பாகம்.

                    இந்திரா அவர்கள் இந்த கதையையும் அவருக்கே உரிய பாணியில் நகர்த்தி செல்கிறார்.  கதையின் ஓட்டம் பரபரப்பாகவே கொண்டது சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் கேட்டு பழக்கப்பட்ட விக்ரம் வேதாளம் கதையை நவீன காலத்துடன் இணைத்து சொல்லியிருக்கும் முயற்சி பாராட்ட தக்கது. சிறு வயதில் அம்புலிமாமா புத்தகங்கள் வாசித்த நாட்களுக்கு கொண்டு செல்கிறார். இரண்டு காலகட்டத்தை இணைக்க மறுபிறவி என்ற ஒரு யுக்தியை கையாண்டதோடு அதை சிறப்பாக நகர்த்தியுள்ளார். மாற்று புத்தகங்களை போலவே ஆன்மிகம் மற்றும் பகுத்தறிவை சமமாக கொடுத்துள்ளார் இந்திரா சௌந்தர்ராஜன்.விக்ரமன், பட்டாபி, அய்யா, சுடுகாட்டு புலையன், நந்தன் பைராகி, வேட்டல் சிங், தீபா என்று எல்லா பாத்திரங்களும் அழகாக அமைக்க பட்டிருக்கிறது. விறு விறுப்பான கதையை முக்கியமான ஒரு கட்டத்தில் முடித்துள்ளார். அடுத்த பாகத்தை வாசிக்க ஆவல் தூண்டும் விதத்தில்.

                    நல்ல ஒரு விறுவிறுப்பான கதை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக ரசிக்க முடிந்த ஒரு கதை இது. இந்திரா சௌந்தர்ராஜனின் எழுத்துக்கள் பரிச்சயமானவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல ஒரு அன்பவத்தை கொடுக்கும்.



No comments:

Post a Comment