கடல் சார்ந்த எதுவும் எனக்கு மிகவும் நெருக்கமானது. அப்படி ஒரு அமைதியை கொடுக்கும் அது. அடிக்கடி திருச்செந்தூர் செல்கயில் மணப்பாடு என்ற ஒரு அழகிய கடற்கரை கிராமத்தை கடந்து செல்வதுண்டு. அந்த பயணங்களின் பொது நா எப்போதும் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் அந்த ஊரை கடந்து செல்லும் அனுபவம் தான். ஏன் அந்த இடத்தை பிடித்திருக்கிறது என்றும் எனக்கு சொல்ல தெரியவில்லை. அந்த ஊரை மையமாக கொண்ட கதை என்பதாலேயே இந்த வாசிப்பை நான் மேற்கொண்டேன்.
மணப்பாடு என்ற ஒரு அழகியகடற்கரை கிராமத்தில் வசிக்கும் குரூஸ் மைகேல் என்ற மீனவனும் அவனது குடும்பமும் மையமாக எழுதப்பட்ட கதையே 'கடல்புரத்தில்'. அவருடன் அவரது மனைவியும் பிலோமி என்ற அவர் மகளும் வசிக்கின்றனர். அவரது மகன் வாத்தியாராக வேறு ஊரில் பணிபுரிகிறார். அவர்களது வாழ்க்கையில் வரும் சந்தோசங்கள், துன்பங்கள், சண்டைகள், காதல், நட்பு இவை எல்லாம் முக்கியமாக பிலோமியின் வழியாக சொல்கிறார் வண்ணநிலவன்.
இது ஒரு சிறு புதினம். ஆனால் எவ்வளவு அர்த்தங்கள் அதற்குள்.பிலோமியுடன் நாம் செல்லும் ஒரு சிறு பயணம் தான் எத்தனை விஷயங்களை நமக்கு சொல்லி தருகின்றனது - வாழ்க்கையை பற்றி, உறவுகளை பற்றி, நட்பு மற்றும் நம்பிக்கையை பற்றி. இந்த புதினத்தை வாசிக்கும்பொழுது இருந்த என் மனநிலையோ தெரியவில்லை ஆனால் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த சிறு புதினம். பிலோமி பேதமையில் இருந்து சில நூறு பக்கங்களில் முதிர்ச்சி அடைகிறார். அவள் பார்வை விரிகிறது. நமக்கும் கூட. பிலோமி - ரஞ்சி இடையே நிலவும் அந்த நட்பு எவ்வளவு தத்ரூபமாக மென்மையாக சொல்ல பட்டிருக்கிறது. எனக்கு இந்த புதினத்தில் பிடித்த பாத்திரங்கள் கூட இவர்கள் தான். கவலைகள் இடையே அவர்கள் நட்பு ஒரு கலங்கரை விளக்கமாகவே தென்படுகிறது. ஆண் பாத்திரங்களை விட பெண் பாத்திரங்களை புரியும் தன்மை அதிகமாக கொண்டவர்களாக தென்படுகின்றன. இருக்கும் வரையில் அம்மாவை புரிந்துகொள்ளாதவள் அவர்கள் இறந்த பிறகு இன்னும் ஆழமாக அவர்களை கண்டறிவது நெகிழ்ச்சி. செபஸ்தி, சாமிதாஸ் - இரண்டு பெரும் எனக்கு என்னமோ ஒன்றாகவே பட்டனர். தேவையற்ற ஓசைகளை எழுப்பும் வெண்கல பாத்திரங்களாகவே தென்பட்டனர். கதை முடியும் தருணத்தில் பிலோமி அந்த பள்ளிக்கூட வாத்தியாரிடம் நடத்தும் உரையாடல் மிக குறைவான பக்கங்களே என்றாலும் எனக்கு எத்தனையோ விஷயங்களை சொன்னது. வண்ணநிலவனின் எழுத்து என்னவென்று அறியாத எண்ணங்களை அலை அலையாக என்னுள் தந்தது. பல இடங்களில் அவர் எழுத்துக்கள் கவிதைகளாக தோன்றின. அவரின் எழுத்துக்களின் வாயிலாக நம்மை அலைகள் கொஞ்சி விளையாடும் அந்த அழகிய சிறு கிராமத்திற்கு இட்டு செல்கிறார்.
இந்த வருடம் நான் வாசித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று கண்டிப்பாக இந்த 'கடல்புரத்தில்'. மென்மையாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் சொல்ல பட்டிருக்கும் மணப்பாடு என்ற ஒரு அழகிய ஊரில் வாழும் மனிதர்களின் கதை. இனியும் திருச்செந்தூர் செல்லும்போது எல்லாம் இந்த குட்டி ஊரை கடந்தது செல்லத்தான் போகிறேன். அப்பொழுது கண்டிப்பாக என் கண்கள் பிலோமியையும் ரஞ்சியையும் குரூசயும் தேடி கொண்டு தான் இருக்கும்.
No comments:
Post a Comment