இரண்டு மூன்று வருடங்கள் முன்பு கேள்விப்பட்டு கடைசியில் வீட்டிற்கு பக்கம் இருக்கும் நூலகத்தில் யதேர்ச்சியாக கண்டெடுத்து வாசிக்க நேர்ந்தது தான் இந்த புதினம். எதாவது விமர்சனம் இல்லை முன்னுரை இந்த புதினத்தை பற்றி கேட்டதுண்டா என்றால் இல்ல. இருந்தாலும் எதோ ஒரு உந்துதல் இதை படித்தே ஆகவேண்டும் என்று.
புலிப்பனம் என்ற ஊரில் தான் இந்த கதையின் பெயரான புத்தம் வீடு உள்ளது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் நலிந்து போன குடும்பம். லிசி, அம்மா, அப்பா, தாத்தா, சித்தி, சித்தப்பா என்ற ஒரு குடும்பம். லில்லியின் பள்ளிப்பருவம் துவங்கி இந்த கதை அவளோடு வளர்கிறது. இடையில் ஏற்படும் சந்தோஷங்கள், கஷ்டங்கள், காதல் என்று பல நிகழ்வுகள். அந்த வீட்டில் உள்ளவர்களையும் அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் லிஸியின் பார்வையில் காணும் நாம் அவளுள் காதல் மலர்வதையும் காண்கிறோம் அந்த காதல் கைகூடியதா என்று சொல்வது இந்த 'புத்தம் வீடு'.
வாசிக்க ஆரம்பித்தபோது சாதாரணமாக தோன்றிய ஒரு கதை. படிக்க படிக்க மனதிற்குள் பல விஷயங்கள் வந்துபோயின. வெறும் ஒரு காதல் கதையாக மட்டும் இதை பார்த்துவிட முடியாது. கதை நடக்கின்ற காலகட்டம் என்று தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும் சுதந்திரம் அடைவதற்கு முன் என்பது நமக்கு புலனாகிறது. அந்த காலகட்டத்தில் பெண்களின் நிலைமையை தத்ரூபமாக ஹெப்சிபா அவர்கள் எழுதியுள்ளார். லிசி பள்ளிக்கு அனுப்ப பட்டாலும் வயதுக்கு வந்த பிறகு அவளது படிப்பை நிப்பாட்டி வீட்டுக்குள் அடைக்கப்பட்டாள். வயது வந்ததற்கு ஒரு குற்றமா? இது ஒரு சிறையில் அடைப்பது போன்ற வாழ்க்கை என்பதை லிசி யோசிக்கிறாள். அந்த குடும்பத்தின் ஆண்கள் பெருமை பேச மட்டுமே லாயக்கானவர்களாய் வந்து போகிறார்கள். அவளது தாத்தா கூட அப்படி தான் என்றாலும் அவள் மேல் கொள்ளை ஆசை அவருக்கு. லிசி மற்றும் அவர் தாத்தா இடையேயான இந்த அன்பை அழகாக காட்டியுள்ளார் ஹெப்சிபா அவர்கள். பாட்டி, சித்தி, அம்மா என்று புத்தம் வீட்டு பெண்கள் அனைவருமே வீட்டின் நான்கு சுவர்களை மட்டுமே அறிந்தவர்கள். தேவாலயம் செல்வதற்கு மட்டும் வெளியே செல்கிறவர்கள். அம்மா சித்தி, அப்பா, சித்தப்பா இவர்களிடையே ஏற்படும் மனஸ்தாபங்களை ஆழமாக காட்டப்பட்டுள்ளது. அப்பாவின் குடிப்பழக்கம், சித்தப்பாவின் ஊதாரித்தனம் மற்றும் கோபம் என்று கதை முன்னே நகர நகர உறவுகள் தடம் மாறி போகிறது. லிசி தனது சித்தியோட பெண் லில்லி மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அவர்களிடையே இருக்கும் அன்பு வயது ஏற எப்படி மாறுகிறது என்று காட்டும் தருணங்கள் அழகு. தனக்கு தானே லிசி அழும் தருணங்கள் எதார்த்தமானவை.
படிப்பு, வரன் தேடல், பெண் பார்க்கும் படலம், நிராகரிப்பு இதில் எல்லாம் பகடைக்காய் போல அவள் அலைக்கழிக்க படுகிறாள். இதில் மலரும் காதல் மிக அழகாக உள்ளது. இரண்டு பேரும் கிருத்துவர்கள் என்றாலும் ஜாதி அந்தஸ்து எல்லாம் பார்க்க படுகின்றது. அதையும் மீறி அவர்களுக்குள் வரும் காதல் அதனை அவர்கள் வெளிக்காட்டும் விதம் நேர்த்தியாக இருந்தது. கதையானது வேகமான ஒரு வாசிப்பை அளித்தது. 200 பக்கங்களுக்கும் குறைவாகவே இருந்தாலும் பல விஷயங்களை சொல்லியுள்ளது. எழுத்தின் நடை மிகவும் சாதாரனமாக ஆனால் ரொம்பவும் தாக்கமுள்ளதாக பட்டது எனக்கு. குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் எனக்கு அதில் வரும் இடங்கள், மக்களின் வாழ்க்கை, வட்டார வழக்கு இதெல்லாம் வெகுவே ரசிக்க முடிந்தது. கதையின் போக்கில் என்னை கதைக்குள் இழுக்க அது ஒரு முக்கியமான காரணியாக இருந்தது.
எல்லோராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புதினம் இந்த 'புத்தம் வீடு'. ஒரு காலகட்டத்தில் குடும்பங்களில் நிலவியிருந்தகட்டுப்பாடுகள், ஆணாதிக்கம் கொண்ட குடும்பங்களில் பெண்களின் நிலைமை, குடும்ப உறவுகள், காதல் என்று பல விஷயங்கள் லிஸியின் பார்வையில் சொல்ல பட்டிருக்கிறது. ஹென்றி, கல்யாணி இவர்களை போல் இனி லிசியும் என் மனதிற்கு மிகவும் இணக்கமான ஒரு கதாபாத்திரமாக இருப்பாள்.
No comments:
Post a Comment