Thursday 1 February 2024

குமரித்துறைவி - ஜெயமோகன் - புத்தக விமர்சனம்

 


                 சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியது. எல்லா வருடமும் தவறாமல் வாங்குகிற எழுத்தாளர்களில் ஒருத்தர் ஜெயமோகன். அதுவும் எங்க ஊரை சார்ந்த ஒரு புதினம் என்று தெரிந்ததும் வாங்கிவிட்டேன். வாசிக்கத்தான் சற்று நாட்கள் ஆகிவிட்டன.

                முகலாய படைகள் மதுரை மீது போர் தொடுத்தபோது மீனாட்சி மற்றும் சொக்கநாதர் சிலைகளை கோவிலில் இருந்து அப்புறப்படுத்துகிறார்கள். மீனாட்சி அம்மையை கொண்டு வந்தது ஆரல்வாய்மொழி பரகோடி சாஸ்தா ஆலயத்தில் தான். இதை அறிந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. பின்பு முகலாயர்களை வீழ்த்தி விஜயநகர பேரரசு ஆட்சியை பிடிக்கிறது. விஜயநகர ராணியின் கனவில் மீனாட்சி அம்மை தோன்றி தன்னை மறுபடியும் அழைத்து செல்வதற்கு சொல்ல, வேணாடு அரசு அவர்களை மனமில்லாமல் வழியனுப்புகிறார்கள். நாஞ்சில் நாட்டில் இருக்கும் மீனாட்சியை சொக்கநாதருக்கு கல்யாணம் பண்ணி அனுப்புவதாக முடிவாகுது. மீனாட்சி சொக்கநாதர் கல்யாண வைபவத்தை கருவாக கொண்டதே இந்த குமரித்துரைவி.

                ஜெயமோகன் அவர்கள் இதை ஒரு மங்கள படைப்பாக குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையான வார்த்தை. இதை வாசிக்கையில் ஒரு மகா திருமண வைபவத்தை கண்ட அனுபவம். எப்போதும் தமிழ் மொழியை ஜெயமோகன் அவர்கள் கையாளும் விதம் என்னை வியப்படைய செய்யும். இந்த புத்தகத்தில் கூட அப்படியே. மொழியின் ஆளுமை என்னை வியப்பூட்டியது. ஒரு சிறு கதையாக முடிக்க முடிந்த ஒன்று தான் இந்த கதைக்களம் . ஆனால் தனது கற்பனை குதிரைகள் பூட்டிய ரத்தத்தில் ஏற்றி நம்மை ஒரு பயணமாக கொண்டு செல்கிறார். என்றாலும் சிலருக்கு கொஞ்சம் சலிப்பு தட்ட வாய்ப்பு உள்ளது. அவர் அவர் ரசனையை பொறுத்து. நாஞ்சில் நாட்டை சேர்ந்த எனக்கு அதன் இலக்கணம்,  நம்பிக்கை, வழக்கு இதெல்லாம் பழக்கம் உள்ளதினால் இந்த புதினத்தினுள் வெகுவாக ஊடுருவ முடிந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளும் அருமையாக காகிதத்தில் வரையப்பட்டுள்ளது. ஒரு போரை தடுப்பது மட்டுமல்ல இந்த ஒரு நிகழ்வை ரெண்டு நாட்டிற்கும் இடையே சந்தோஷத்தை அளிக்கும் தருணமாக மாற்றி அமைத்த ஏராளமான கதாபாத்திரங்கள். அரசர்கள் ஆண்ட காலத்தில் கல்யாணம் என்ற ஒரு நிகழ்வை இதற்க்கு பயன்படுத்த பட்டத்தை நாம் நிறையவே வாசித்திருக்கிறோம். ஒரு சில பாத்திரங்கள் மட்டுமே சற்று எதிர்மாறாக செயல் பட்டது. ஒரு பெண்ணை தாரை வார்த்து குடுக்கும் அப்பா, சகோதரன், அனைத்து சொந்தபந்தங்கள் இவர்களில் ஒன்றாக நாமும் மாறிவிடுகிறோம். வாசித்து முடிக்கும் பொழுது எனக்குள் ஒரு சிறு புன்னகை மலர்ந்தது. ஜெயமோகன் படைப்புகளை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அவரோட கதை, இடம், சூழல் விரிவாக்கம் பற்றி. கல்யாண வைபவம், அதற்க்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகள், பந்தி, சொந்தபந்தங்கள், ஊரார்கள், அந்த ஊர் அமைப்பு என தத்ரூபமாக வர்ணித்துள்ளார் அவர். 

                இந்த கதை அரசல்புரசலாக ஊரில் கேள்விப்பட்டதுண்டு என்றாலும் பரசேரி சாஸ்தா கோவில் சென்றதில்லை இது வரை. கண்டிப்பாக ஒரு நாள் அங்கு சென்று பார்க்க வேண்டும். இந்த கதை உண்மையில் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை என்றாலும் அங்கு சென்று இந்த கதை மற்றும் வர்ணனையை சற்று நேரம் கண்மூடி இருந்து நினைத்து பார்க்க வேண்டும். எல்லாமே மங்களமாக அமையும் இந்த புதினம் ஒரு சிறந்த பீல்-குட் வாசிப்பு. ஏற்கனவே சொன்னது போல் சிலருக்கு இது சற்று இழுவையாக தோன்றலாம். 



No comments:

Post a Comment