Monday, 27 April 2020

கொலையுதிர் காலம் - சுஜாதா - புத்தக விமர்சனம்



2016-இல் தமிழ் புதினங்கள் நான் வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் வைரமுத்து, ஜெயமோகன், கல்கி இவர்களது புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வந்தேன். எனக்கு பிடித்தமான மர்ம நாவல்களை தேடி அலைந்த அலைச்சல்; சுஜாதாவின் கணேஷ் வசந்தை அறிமுக படுத்தியது. அந்த புத்தகம் 'கொலையுதிர் காலம்'. அன்று ரசித்த அந்த புதினத்தை மீண்டும் இப்பொழுது ரசிக்க முற்பட்டேன். நான்கு வருடங்கள் ஓடிப்போய்விட்டதால் அறவே மறந்திருந்தேன் கதைக் களத்தை!
               லீனா என்ற பெண்மணி எக்கச்சக்கமான சொத்துக்களுக்கு வாரிசு. அவளது சித்தப்பாவான குமார வியாசன் இத்தனை நாட்களாக அந்த சொத்துக்களை பராமரித்து வந்துள்ளார். அதை அடையப் போகும் தருணம் நெருங்கி வர; கணேஷ் மற்றும் வசந்த் சட்ட ரேகைகளை சரி பார்க்க  வண்டலூர் தாண்டி இருக்கின்ற அவர்களுடைய இடத்திற்கு  செல்கிறார்கள். எளிதில் முடியும் என்று நினைத்ததன் நடுவில்  பல மர்மங்கள் அரங்கேறுகின்றன. தொடர்ந்து கொலைகள், காணாமல் போகும் பிணங்கள்,  எதிர் கொண்ட சாபம், பழி வாங்க துடிக்கும் ஆவி, லீனாவை ஆவி ஆட்கொள்வது என பல அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன. சந்தேகத்தின் நிழல் குமார வியாசன்மேல் படரும் தருணம் அவரும் கொலை செய்யப்படுகிறார். குழப்பங்கள் அதிகரிக்க அறிவியலா அல்லது பைசாசமா என்ற அதன் மர்ம முடிச்சை கணேஷ் வசந்த் இருவரும் சேர்ந்து அவிழ்ப்பதே கதை களம்.
               சுஜாதா என்பவர் 80- 90 க்களில் மிகவும் பிரபலம் அடைந்த எழுத்தாளர்களில் ஒருவர். அறிவியல், மர்மம், காதல், குடும்பம், இலக்கியம் என்று பல ரகங்களில் எழுதியவர். அவர் கதைகள் என்றும் ஒரு தமிழ் படத்தை பார்க்கின்ற ஒரு பிரதிபலிப்பை தருகிறது. காலத்தை வெல்லும் அறிவியல் சார்ந்த நிறைய விஷயங்களை அவர் புத்தகங்களில் பார்க்கலாம். ஒரு தமிழ் படத்திற்கு தேவையான அனைத்தும் அவர் புத்தகங்களில் காணலாம் - பாடல்களை தவிர்த்து. அதனால் தான் என்னமோ திரை துறையுடன் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது! அதிலும் வெற்றி கண்டார்.
               சரி, புத்தகத்திற்கு வருவோம்! கதையின் மர்மத்தை நன்றாகவே நிலைநாட்டியுள்ளார் சுஜாதா. இது இப்படி இருக்கக் கூடுமோ என்று நினைப்பதற்கும் வேறு சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அவ்வளவு பரபரப்பாக செல்கிறது கதை. என்னால் இப்படி இருக்க கூடுமோ என்று இந்த மர்மத்தை அணுக முயன்றபோதும் எதிர்மாறாக பல விஷயங்கள் நடந்தது குழப்பத்தை நன்றாக நிலைநாட்டியது.ஒரு கைப்பிடி அளவுக்குத் தான் கதாபாத்திரங்கள். அவர்களையும் நன்றாக பயன்படுத்த்தியுள்ளார். இருந்தாலும் லீனா இவ்வளவு வெகுளியாயிருப்பது என்னமோ என்னால் ஏற்க முடியவில்லை. நடுவில் தீபக்கின் பெயரில் சந்தேகத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் வெறும் திசை திருப்பும் நோக்கமாகவே எனக்கு பட்டது. ஆனால் மர்மத்தை கடைசி வரை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளார் எழுத்தாளர். மர்ம முடிச்சுக்கள் அவிழும் தருணங்கள் நன்றாக வரையப்பட்டுள்ளது. இருந்தாலும் பல கேள்விகள் விடைகள் இல்லாமலே விடப்பட்டிருக்கின்றன. மர்மம் அம்பலமான பிறகும் முடிவு கூட உங்கள் ஆற்றலின் படி என்பது போல் நிறைவு பெரும் விதம்; இன்னும் பல கேள்விகளை கேள்விகளாகவே விட்டு செல்கின்றன.
               மொத்தத்தில் ஒரு நல்ல மர்ம படம் பார்க்கின்ற போல் ஓர் உணர்வு. நான்கு வருடங்கள் முன்பு படிக்கையில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மர்ம கதையாக இருந்த இப்புதினம் இக்காலகட்டத்தில் கூட என்னை வெகுவாக கவரவே செய்கின்றது.  நான் படித்ததிலேயே முதன்மையான மர்ம புதினமா என்று கேட்டால்; அல்ல. இருந்தும் என்றைக்கும் என்னை ஈர்க்கும் தன்மை உடையதாகவே இருக்கும்.


2 comments:

  1. கொலையுதிர் காலம் என்ற இந்த புதினத்தை விமர்சனம் செய்து உள்ளீர்கள். கதையின் எழுத்தாளர் சுஜாதா பற்றியும் கதை பற்றியும் சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள். அதில் வரும் கதாபாத்திரங்களை பற்றி சொல்லும் பொழுது ராமபத்ரனை பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே. இருந்தாலும் விமர்சனம் நன்றாகவே இருக்கிறது.

    என்னுடைய கருத்துகள் சில:
    லீனா கனேஷுக்கு கடைசி வரை ஒரு புதிராகவே இருக்கிறாள். பார்க்க வெகுளியாக இருந்தாலும் அவள் சொல்வது நிஜமா இல்லை பொய்யா என்று அவன் குழம்புகிறான் பல சமயம். உதாரணமாக குமார வியாசனின் அறைக்கதவு வெளியில் பூட்டி இருந்தும் இல்லை என்று சாதித்தாள். இறுதியில் கூட அவள் சொல்வதை நம்புவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது.

    நீங்கள் சொன்னது போல குற்றவாளியின் வாயால் இதன் பின்கதை கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில கதைகளில் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்காமல் போய்விடும். இது அந்த வகையை சேர்ந்தது. கணேஷ் வசந்த் இது எல்லாம் விஞ்ஞானமா இல்லை பைசாசமா என்று விவாதிப்பது போல் வாசகர்கள் தங்களுக்குள் விவாதம் நடத்திக் கொள்ளக் கூடும். எனினும் இவ்வளவு வினோதமான சம்பவங்களுக்கும் தகுந்த விளக்கம் தந்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.

    கொலையுதிர் காலம்‌ பல வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ஆகும். இப்பொழுது அதை ஒரு விறுவிறுப்பான கதையாக படிதத்து நல்லதொரு அனுபவம். அதுவும் ஒரே சமயம் உங்களுடன் படித்து கதையை விவாதித்தது மறக்க முடியாத அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. அமாம். நிறைவை பற்றி நீங்கள் கூறியது உண்மை.
      இது நாம் சேர்ந்து வசித்து விவாதித்த முதல் புதினம். நல்ல ஒரு அனுபவமும் கூட.
      You tube இல் தேடி பார்த்தேன். அந்த தொடரை கண்டு பிடிக்க முடியவில்லை.

      Delete