Friday 22 February 2019

கடைத்தெரு கதைகள் - ஆ.மாதவன் - புத்தக விமர்சனம்


புதினங்கள் எழுதுவது ஒரு கலை என்றால் சிறு கதைகள் எழுதுவது கூட ஒரு கலையே! புதினங்களில் நாம் சொல்ல நினைப்பதை விரிவாக எழுதிக்கலாம். ஆனால் சிறு கதைகளிலோ சொல்லப்போகும் கதை அல்லது கருத்து சில பக்கங்களுக்குள் அடங்கவும் வேண்டும் அதுபோல் மக்களிடம் சென்றடையவும் வேண்டும்அது போல வட்டாரம் சார்ந்த படைப்புகள் எனக்கு மிகவும் புடிக்கும். அந்த இடத்தின் மரபை பற்றியும்,மொழியை பற்றியும் அறிய வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள் எனக்கு என்றும்  பிரியமானவர்கள். நானும் அந்த ஊரை சேர்ந்தவன் என்பதால் ஒன்றிணைய முடிகிறது அந்த படைப்புகளில். ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, நீல பத்மநாபன், .மாதவன் - எல்லாரும் இவ்வூரை சார்ந்தவர்களே. அதிலும் நீ.பத்மநாபன் மற்றும் மாதவன் படைப்புகள் திருவனந்தபுரம் சார்ந்ததாக இருக்கும்.

'எட்டாவாது நாள்'-ல் வீட்டை விட்டு ஓடி வந்து சாலை தெருவை வீடாக்கி கொண்ட ஒரு முசல்மானின் கதை சொல்கிறார். ஜல்லிக்கட்டு காளையாக திமிறிய காலமும் அதன் பிறகு நோய் வாய்ப்படும் தருணமும் சொல்கிறார். ஒற்றையானாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் மக்கள் அவரை இயலாத வயதில் பார்க்கும் விதமும் சொல்ல பட்டிருக்கிறது. ஒரு மகனை மரணமும் அதற்க்கு கிடைக்கும் நஷ்டஈடும் அதை பெற நடக்கும் ஊதாரியும் குடிகாரனுமான அப்பனை பற்றியே 'ஈடு' வழியாக சொல்ல படுகிறது. தன் மனைவியின் மரணம் தொடர்ந்த விசாரணைக்காக காவல் நிலையம் செல்லும் ஒரு கணவனின் மனதில் எழும் நினைவுகளே 'பதினாலு முறி'.  'உம்மிணி' அதே பேருடைய ஒரு வெள்ளந்தியான கொஞ்சம் மனம் நலம் குன்றிய ஒருவன் சாலை தெருவில் வாழ்கிறான். அவன் வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வை சொல்கிறது. பாச்சி என்ற தன்  நாயை பற்றிய ஒரு முதிய கடை காவல்காரனின் நினைவுகளே 'பாச்சி'.  ஒரு பாலக்காரனும் அவனுடைய வயதான அம்மாவையும் சார்ந்தது 'தூக்கம் வரவில்லை'. தெருக்களில் அடிக்கடி சின்ன விபத்துக்கள் நடக்க காரணமான பசுவை அப்புறப்படுத்த வரும் அரசு அதிகாரிகளும் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடும் பசுவுமே 'கோமதி'. ஒரு நொண்டி பிச்சைக்காரன் அவனுக்கு பிச்சைபோடாத ஒருதனிடம் இருந்து எப்படியாச்சும் ஒரு வாட்டியாவது காசு பெர போராடும் 'நொண்டிச் சாக்கு' மற்றும் சாலை கடை தெருவிற்கு புதிதாக வரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் சார்ந்த சம்பவமே 'விசுவரூபம்' .

திருவனந்தபுரத்தில் முக்கியமான இடம் கிழக்கே கோட்டை. ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில் விட்டு வெளியே வந்து அந்த கிழக்கே கோட்டை சந்தியை தாண்டியதும் ஒரு நீளமான தெரு உள்ளது. சாலை தெரு. நிறைய கடைகள் நிறைந்த ஒரு கம்போளத்தெரு. .மாதவனின் இந்த கடைத்தெரு கதைகள் அனைத்தும் அங்கே நடைபெறுகிறது (ஒன்றை தவிர). அந்த மாதிரி ஒரு கம்போளத்தில் நாம் பல பாத்திரங்களை பார்க்கிறோம். கடைக்காரர்கள், சுமை தூக்குகிறவர்கள், பிச்சர்க்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் ஏன் மாடு, நாய் கூட!!! இவர்களை தினமும் நம்மை சுற்றி பார்க்கிறோமே தவிர இவர்களுக்கு பின்னாலும் ஒரு வாழ்க்கை கதை இருக்கிறது என்று நாம் உணருவதில்லைஅதிலும் தெருவில் சுற்றி திரியும் விலங்குகளை பற்றி எழுதின கதைகள்  என்னை மிகவும் கவர்ந்ததுஎல்லா கதைகளில் ஒரு உயிர் இருந்ததை உணர்ந்தேன். நாஞ்சில் மற்றும் திருவனந்தபுரம் பாகங்களில் பேசும் வட்டார தமிழ் பழக்கமில்லாதவர்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும்; சில சொற்கள்பச்சையான வாழ்க்கையை உயிரூட்டியிருக்கிறார் எழுத்தாளர். கடை கம்போளங்களையும் சுற்று பகுதிகளையும் அவர் விவரிக்கும் விதம் அந்த இடத்தின் மீது இருக்கும் அவர் பழக்கத்தை குறிக்கிறது.

நாம் தினமும் கண்டும், காணாமல் போகும் நிறைய மனிதர்கள் உண்டு. சமூகத்தில் நமக்கு கீழ் இருக்கும் மனிதர்களை பலபேர் கண்டுகொள்வதில்லை. அப்படி பட்ட மக்களின் வாழ்க்கையின் சில ஏடுகளை இந்த புத்தகம் புரட்ட வைக்கிறது.

Book-O-Meter

No comments:

Post a Comment