சந்தர்பசூழ்நிலைகள் மனிதர்களை என்னவெல்லாமோ செய்ய தூண்டுகிறது. அதனை அடிப்படையாக கொண்டு பல கதைகளும் படங்களும் வந்திருக்கிறது. அதில் இருந்தெல்லாம் சற்று மாறுபட்ட கண்ணோட்டத்தில் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த வெக்கையின் வாயிலாகத் தான். பூமணியால் எழுத பட்ட இந்த புதினம் ஒரு படமாக்கப்படுகிறது என்று கேள்வி பட்டதும் அதற்க்கு முன் இதை படிக்கவேண்டும் என்று இப்புத்தகத்தை வாசித்தேன்.
சிதம்பரம் என்ற சிறுவன் வடக்கூரானை கொலை செய்து தப்பித்து வருகிறான். தன் அண்ணனை கொன்றதன் பழி தீர்க்கும் படலம். அவன் மாமா அவனை தலைமறைவாக சொல்ல அப்பாவுடன் செல்கிறான். அம்மா தங்கை இவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுகிறார்கள். அப்பாவும் மகனும் தப்பித்து ஊர் ஊராக சுற்றி காடும் மேடும் ஏறி திரிந்தது எப்படி யார் கையிலும் சிக்காமல் இருக்க பிரயத்தனம் செயகிறார்கள் என்பதே இதன் கதைக்களம்.
மற்று கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு இயங்குகிறது இக்கதை. குற்றம் நிகழ்ந்த பிறகு மற்று கதைகள் போல் அதற்க்கு பழி அல்லது வேறு அசம்பாவிதங்கள் பக்கம் கவனம் செலுத்தாமல் இருவரும் எப்படி தலைமறைவாகி ஊர் ஊராக சுற்றுகிறார்கள் என்றும் அதன் போக்கில் செல்லும் அவர்களின் நினைவலைகளும் ஒரு புது அனுபவமே. கதையின் முடிவு திறந்தவெளியாக முடிக்க பட்டிருக்கிறது. அவர்களின் ஒரு முடிவில் நிறுத்தப்படும் இந்த புதினம் அதற்க்கு மேல் ஊடுரவவில்லை. சிதம்பரம் மற்றும் அவன் அப்பா மட்டுமே இக்கதை முழுதும் பிரயாணம் செய்கிறார்கள். அவர்கள் இடையே உள்ள உறவை ஆழமாக காண முடிகிறது. காடும் மேடும் சுற்றி திரிகையில் அப்பாவின் அனுபவமும் ஆற்றலும் உதவுகின்றது. இருந்தாலும் மாமன், அம்மா, தங்கை, அண்ணன் என மற்று பாத்திரங்கள் அவர்கள் முத்திரையை பதித்த தான் செயகிறார்கள். கரிசல் நிலத்தை தத்ரூபமாக கண்முன் கொண்டு வருகிறார் எழுத்தாளர். சிதம்பரத்தோடு நாமும் அப்பாவுடன் ஊர் ஊராக தலைமறைவாகி ஓடுகின்றோம். அப்பா அந்த தப்பித்தலின் போது உயிரை தக்க வைக்க கையாளும் யுக்தியும் நன்றாக சொல்ல பட்டிருக்கிறது. அம்மாவின் பாத்திரம் சில நேரம் தான் வந்தாலும் இந்த களேபரத்தில் சுழலும் மன நிலையை நன்றாக சொல்ல பட்டிருக்கிறது. கதையின் போக்கில் அந்த நிலத்தின் அரசியலையும் ஜாதி பாகுபாட்டையும் பற்றி மிகவும் அழகாக எழுத்தாளர் இணைக்கிறார்.
இதை தழுவி வந்த படத்தையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. தழுவல் என்று சொன்னதன் காரணம் என்னவென்றால் கதைக்களம் மட்டுமே இதில் இருந்து எடுக்க பட்டிருக்கிறது. அதற்க்கு பின் படத்திற்கு உண்டான சம்பவங்களுடன் கோர்த்து இணைக்க பட்டிருக்கிறது. அதனாலேயே இரண்டில் எது சிறந்தது என்ற வாதத்திற்கு நான் முற்படவில்லை. இரண்டுமே அதன் அதன் வழிகளில் நன்றாகவே அமைக்கப்பட்டிருந்தது. கிராமத்து கதை அல்லது பழிக்கு பழி சம்பந்தமான கதைகள் பல வாசித்திருந்தாலும் தனித்து நிற்கும் ஒரு நல்ல படைப்பே வெக்கை.
Book-o-Meter

நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா for supporting my blogs.
Delete