ஒவ்வொரு வருடமும் முன்பு படித்திடாத ஒரு எழுத்தாளரின் படைப்பை வாசிப்பது என்பது என்னுடைய வழக்கம். இந்த வருடம் சோ.தர்மன் புத்தகங்களுக்கு அறிமுகம் ஆகலாம் என்று எண்ணி இருந்தேன். அப்போது தான் என் நண்பனின் பரிந்துரைப்படி இந்த புத்தகத்தை வாசிக்க முடிவு செய்தேன். இதன் படைப்பாளி என்.கணேசன் கூட நான் வாசிக்காத ஒரு எழுத்தாளர் தான்.
பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட 'நீ நான் தாமிரபரணி' என்ற ஒரு பிரபலமான புதினம். அதை எழுதிய சேதுபதி என்ற எழுத்தாளர் அதன் பின் காணாமல் போகிறார். அவரை பற்றி துப்பு துலக்க "உண்மை" பத்திரிக்கையின் நிறுவனர் அம்பலவாணன்; அருண் என்ற பத்திரிகையாளரிடம் ஒப்படைக்கிறார். பழசை கிளற கிளற எதிர் பாராத இடங்களில் இருந்து தடங்கல்கள். அது மட்டுமின்றி தனது குடும்பத்திற்குள்ளும் இந்த மர்மம் ஊடுருவுவதை காண்கிறான். அந்த கதையில் உண்மை உள்ளது என்று கண்டு பிடிக்கிறான் அருண். பிறகு அந்த எழுத்தாளரை கண்டு பிடிக்கப்படுகிறாரா, புதினத்தின் உண்மை என்ன, தன குடும்பம் எந்த விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று கண்டறிவதே "நீ நான் தாமிரபரணி".
வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்.கணேசன். கதைக்குள் கதை என்று நகர்கிறது இந்த புதினம். கதையில் வரும் பாத்திரங்களை நன்றாக வரைந்துள்ளார் எழுத்தாளர். அருணின் அப்பா, ஈஸ்வரன், தாமிரா, மாரிமுத்து மற்றும் ஆச்சியின் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது என்ன நடக்கும் என்கிற சுவாரஸ்யத்தை நிலைநாட்டினாலும் சில இடங்களில் அது சலிப்பை உண்டாக்கத்தான் செயகிறது. கதை நன்றாக கோர்க்க பட்டிருந்தாலும்; அடிக்கடி வாசகரின் கவனத்தை ஈர்க்கவே ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதே மர்மத்தில் கொண்டு சென்று நிறுத்தப்படுவதை போல ஒரு உணர்வு. பின்கதை சற்று நம்பகத்தன்மை அற்றதாக இருந்தாலும் அந்த கதைக்கு பொருந்தினாற்ப்போல் பட்டது. அதிகமாக மர்மக்கதைகளை படிப்பதனாலோ என்னமோ என்னால் அந்த மர்மத்தையும் பின்கதையையும் யூகிக்க முடிந்தது. அண்ணன் தங்கை உறவையும் அப்பா மகள் உறவையும் சொல்லப்பட்டிருக்கும் விதம் நன்றாகவே உள்ளது.
காதலுக்கு அழிவில்லை என்ற ஒரு அடிப்படை விஷயத்தை சற்று மர்மம் கலந்து அளிக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பே இந்த புதினம். சற்று வித்தியாசமான ஒரு வாசிப்பாகவே அமைத்தது இந்த நாவல்.
முதலில் என் பரிந்துரையின் பேரில் இந்த "நீ நான் தாமிரபரணி" புதினத்தை வாசித்ததர்க்கு நன்றி. எனக்கும் குற்றம் சார்ந்த மர்மக் கதைகள் நிறைய படித்திருந்தால் இந்த புதினம் சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது. விமர்சனம் சற்று எழுத்து பிழைகள் இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது.
ReplyDeleteநன்றி. பிழைகள் திருத்தி விடுகிறேன். Google transliteration issues 🤪
ReplyDelete