Saturday 9 May 2020

அபிதா - லா.ச.ரா. - புத்தக விமர்சனம்

                                                                                                                     

    அபிதா!! சென்ற வருடம் எனக்கு அதிகமான பரிந்துரைகள் வந்த ஒரு புத்தகம். லா.ச.ரா. என்ற எழுத்தாளரை அறிமுகம் இல்லாத நான்; அந்தப் புத்தகத்தை புறக்கணித்து வந்தேன். இந்த வருடம் இதன் மின்வடிவம் அகப்பட அபிதாவை வாசிக்க நேர்ந்தேன்.

     கதாநாயகனின் பார்வையில் நகர்கின்றது இந்த கதை. ஏதோ காரணத்திற்க்காக ஊரை விட்டு ஓடி வர நேர்ந்த கதாநாயகன் ஒரு செல்வந்தனிடம் வேலைக்கு சேர, நாளைடைவில் அவரது மகளான சாவித்ரியை மணக்கிறார்.  அவர் காலத்தின் பிறகு சொத்துக்களை பார்த்துக்கொள்கிறார். இருந்தும் மனதில் அமைதி இல்லை. நாளடைவில் அவர் மனைவியோடு சொந்த ஊரான கரடிமலைக்கு திரும்புகிறார். அவருடன் நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டி செல்கிறார். தான் காதலித்த பெண்ணை தேடி செல்கிறவர் அங்கு அதே வடிவில் இருக்கும் அவளின் மகளான அபிதாவை பார்க்க நேர்கிறார். அவருடைய கடந்த காலத்தின் சில ஏடுகள் மற்றும் நிகழ்கால  எண்ணங்களோடு நாமும் இணைத்து பிரயாணம் செய்வது தான் இந்த அபிதா. 

    லா.ச.ரா. வின் முழு பெயர் லா.ச.ராமாமிருதம். 'சிந்தா நதி ' என்ற படைப்புக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற இவரின் படைப்புகளில் எனது முதல் வாசிப்பு இந்த அபிதா. இப்புத்தகம் வாசிக்கையில் நம்மை ஈர்க்கும் முதல் விஷயம் தமிழ். தமிழ் என்ற அழகிய மொழியை மேலும் அழகுபடுத்தியிருக்கிறார் இப்புத்தகத்தின் வழியாக. அதிலும் இந்த புதினம் முழுதும் ஏராளமான உவமைகளை அள்ளி தெளித்திருக்கிறார். அத்தனையும் முத்துக்கள். அபிதா என்ற இந்த சாகரத்தில் முக்குளித்து நாம் இந்த முத்துக்களை நிறைய கண்டெடுக்கலாம். அதன் அழகை மனம் நிறைய ரசிக்கலாம். ஒரு சில பாத்திரங்களே கதை முழுதும் வந்து போகின்றன - கதாநாயகன், சாவித்ரி, சகுந்தலை மற்றும் அபிதா. அபிதா மற்றும் சாவித்ரியின் கதாபாத்திரங்கள் என்னை நன்கு கவர்ந்தது. கதை Non-linear ஆக நகர்கின்றது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இப்படி ஒரு விதத்தில் கதை நகர்த்தியிருப்பது ஒரு நல்ல முயற்சி என்றே கூறலாம்.  ஆனால் எனக்கு இக்கதையை ரசிக்க இது ஒரு தடையாக தோன்றியது. இது அவரின் படைப்புகளில் எனது முதல் வாசிப்பு என்பதால்தான் என்று நினைக்கிறேன்! முதல் வாசிப்பு கொஞ்சம் கடினமாகவே பட்டது. திடீர் என்று அவர் நினைவலைகள் அங்கிங்கு அலைபாய கதையின் ஓட்டத்தில் எனக்கு சில குழப்பங்கள் வந்தது. ஆனால் முதலில் நான் சொன்னது போல் மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம் அற்புதம். தனது அம்மாவை பற்றி கதாநாயகன் நினைவு கூறும் இடம், சாவித்ரியுடன் முதலில் ஏற்படும் சம்பாஷணங்கள், மற்றும் கரடிமலைக்கு திரும்ப வந்த பிறகு அவர் மனதில் ஓடும் நினைவலைகள் ஸ்வாரஸ்யத்தை அளித்தது. அதற்க்கு முக்கிய காரணம் அவர் லா.ச.ரா எழுதிய விதம். நாயகனின் மனதில் எழும் சிந்தனைகள், கேள்விகள், மனதிற்குள் எழும் குழப்பங்கள் இதெல்லாம் காரணம்  நிறைய இடங்களில் இதனை காதுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க நேர்ந்தேன். 100 - 120 பக்கங்களே இருக்கும் இப்புத்தகம் என்றாலும் பல வரிகளை மீண்டும் மீண்டும் வசித்து ரசித்தேன். தமிழ் மீதும் எழுத்தாளர் மீதும் எனது மரியாதை கூடியது.

    தமிழ் என்பது உலகிலேயே மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்று. இது மாதிரியான படைப்புகள் இருக்கும் வரை இனியும் பல நூறு ஆண்டுகள் இந்த மொழி இருக்கத்தான் போகிறது. தமிழ் மொழியை நேசிக்கும் யாவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் இந்த அபிதா. 




2 comments:

  1. Non-linear narration படிப்பது சற்று கடினமாக தான். என்றாலும் தமிழுக்காக நீங்கள் மெனக்கெட்டு படித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அதன் பின் என்ன நடிக்கிறது. கதை எப்படி முடிகிறது?

    ReplyDelete
  2. நன்றி. மீதி கதை இங்கு சொல்ல விருப்பம் இல்லை. தங்களுக்கு தனியாக சொல்கிறேன். நீங்களும் வாசித்து பாருங்க. 120 பக்கங்கள் மட்டுமே தான்.

    ReplyDelete