சில புத்தகங்கள் நம்மை விட்டு என்றும் பிரியாமல் நமக்குள்ளே ஒரு அங்கமாகவே ஆகி விடும். இந்த புத்தகம் நான் முதல் முதலாக வாசித்தது 5 வருடங்கள் முன்னால். எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வாசிக்க நேர்ந்தேன். ஆனால் அதுவே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அங்கம் ஆகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்ற போது மீண்டும் இந்த புதினத்தை படிக்க ஒரு ஆவல். முடிவை எடுக்கும் தருணத்தின் முன் ஹென்றியுடன் அவன் ஊருக்கு சென்று வருவோம் என்று நினைத்து இப்புதினத்தை மீண்டும் படித்தேன்.
துரைக்கண்ணுவுடன் அவனது லாரியில் பிரியாணிக்கும் ஹென்றி என்ற அசலூர்காரனில் இருந்து கதை ஆரம்பமாகிறது. கிருஷ்ணராஜபுரம் நோக்கியுள்ள அந்த பிரயாணத்தின் போதே அந்த லாரியில் உள்ளவர்களிடம் நட்பு கொள்கிறான். அதுவும் தேவராஜ் என்ற ஒரு பள்ளி ஆசிரியர் அவனிடம் நல்ல பழகுகிறார். அந்த ஊரில் உள்ளதனது வீட்டிற்கு விருந்தாளியாக கூட்டி செல்கிறார். நாட்கள் போக போக அவனது வெள்ளந்தியான சுபாவத்தால் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறான். தேவராஜின் வீட்டிற்கு எதிரில் உள்ள பாழடைந்த வீட்டை அவர் சொந்தமாக்க ஆசை படுகிறார். ஏன் இந்த ஆசை? எதற்க்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறார்? ஹென்றியின் பின்னணி என்ன? அவர் மற்றவர்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் கொண்டு வருகிறார்? என்று சொல்கிறதே இந்த கதை.
அது தான் கதை என்று மேலே நான் சொன்னாலும் எனக்கு அது மட்டுமாக படவில்லை இந்த புதினம். எழுத்தாளரின் நடை மிக அருமை. நம்மை ஹென்றியுடன் ஒரு பயணத்திற்கு இட்டு செல்கிறார் ஜெயகாந்தன். அவரின் மற்ற புதினங்களில் காணாத ஒரு சிறப்பு இதில் என்னால் காண முடிந்தது. நேர்மையான அணுகுமுறையால் நம் அனைவரும் ஹென்றியினூடே கவர்கிறார் எழுத்தாளர். உண்மையா இல்லை கற்பனையா என்று நம்மை சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது ஹென்றி மற்றும் அவர் தந்தை என்ற இரண்டு பாத்திரங்களும். எல்லாவற்றிலும் நன்மையை மட்டும் காணும் அவர்களது குணம் மற்றும் தன்னிடம் உள்ளத்தில் சந்தோசம் அடைவது என்ற குணம் இது ரெண்டும் நமக்குள் ஆழமாக பதிய வைக்கிறார் ஜெயகாந்தன். ஹென்றி, அவரின் தாய் தந்தை, துரைக்கண்ணு மற்றும் அவர் குடும்பத்தவர், தேவராஜ் மற்றும் அவர் அக்கம்மாள், மணியக்காரர், பாண்டு எல்லோருமே அவ்வளவு அழகாய் வரையப்பட்டிருக்கிறார்கள். இத்தனை கதாபாத்திரங்களும் இந்த உலகத்தில் தானா இந்த கதை நகர்கிறது என்ற அளவுக்கு அந்த பாத்திரங்கள் அவ்வளவு அன்யோன்யமாக பழகுகிறார்கள். ஹென்றியிடம் காணும் தன்னிறைவு தான் என்னை இந்த புத்தகத்தில் மிகவும் கவர்ந்தது. அப்பா அம்மாவுடனான ஹென்றியின் பிணைப்பு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. கிராமத்து வாழ்க்கையை ஏளனமாக நினைக்கும் தேவராஜுடன் சேர்ந்து அந்த ஊர் வாழ்க்கையை கண்டு ஹென்றி சந்தோசம் அடைகையில் தேவராஜுடன் சேர்ந்து நாமும் அவன் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளும் விதத்தை கண்டு மகிழ்கிறோம்! வியக்கிறோம்!புதினம் முழுதும் ஒரு கெட்ட கதாபாத்திரம் கூட காண நேரவில்லை. எல்லோருக்குள்ளும் நன்மை இருக்கின்றது என்பதை முன்வைக்கிறார் போலும் ஜெயகாந்தன். எப்போதும் போலவே அவர் எழுத்துக்கள் எளிமையானதாகவும் அதே நேரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் இருந்தது. கடைசியில் வரும் அந்த பெண் புதிராகவே வந்து செல்கிறாள். இருந்தும் பல அர்த்தங்கள் அவளுள்.
நான் முதலில் சொன்னது போல் மனக்குழப்பம் அடைந்திருக்கும் நிலையில் அடிக்கடி ஹென்றியுடன் கிருஷ்ணராஜபுரம் சென்று வருவதுண்டு. அவனுடன் சேர்ந்து துரைக்கண்ணு மற்றும் தேவராஜுடன் சற்று நேரம் உரையாடி வருகையில் எப்பொழுதும் போல இந்த வாட்டியும் மனதில் ஒரு தெளிவு. என்றும் எப்பொழுதும் நம்மை சுற்றியிருக்கும் நன்மை, அன்பு, பாசம் என்பவற்றை கொண்டாடும் ஒரு படைப்பே இந்த புதினம். அதன் தலைப்பின் முக்கியத்துவம் இந்த புதினம் வாசிக்கையில் நாமே தெரிந்துகொள்ளலாம். இந்த மகத்தான படைப்பை வாசிப்போம் வாழ்க்கையை அன்பை கொண்டாடுவோம்.
No comments:
Post a Comment