"ஜாவர்" சீதாராமன் என்ற பெயரை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் எனது தந்தை. 'பட்டணத்தில் பூதம்' படத்தின் கதையாசிரியர் மற்றும் அதே படத்தில் பூதமாக நடித்தவர் என்ற ஒரு விஷயம் அப்போது தெரிந்திருந்தது. பின்பு வருடங்கள் கடந்த பின் எனது நண்பர் தாசரதி சொல்லித்தான் அறிந்தேன் அவர் ஒரு எழுத்தாளரும் கூட என்று. எனக்கு புடித்த திரில்லர் ரகத்தை சேர்ந்த இந்த புதினத்தையே இந்த வருஷத்தில் முதல் புத்தகமாக வாசித்தேன்.
வக்கீல் ராமநாதன் தனது தம்பி திலீபனை கொல்ல நினைக்கிறார். என்றாலும் மனக்குழப்பம். கொஞ்ச நாட்களாக திலீபன் விசித்திரமாக நடந்து கொள்கிறான். இதையும் தாண்டி அவர் திலீபனை சுடுகிறார். வழக்கு விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் பாகமாக சம்பவங்களை சொல்வதுதான் கதை. அவர்களது பின்னணி, திலீபனிடம் கண்ட மாற்றங்கள், அதன் காரணங்கள், சுடுவதற்கு ஆளாக்கப்பட்ட காரணம், பின்பு திலீபன் மற்றும் ராமநாதனுக்கு என்ன நடக்கிறது இதெல்லாம் வாக்குமூலம் மற்றும் ரேகைகள் மூலம் பயணம் செய்வதே இக்கதை.
1970க்கும் முன்னதாக எழுத பட்ட கதை இது. இருந்தும் என்னை கவர்ந்தது என்னவென்றால் காலத்தையும் கடந்து இந்த புதினம் பரபரப்பாக நகர்கிறது. இது ஒரு மர்ம கதையா அல்லது திகில் கதையா அதுவும் அல்ல பேய் கதையா என்று கதை முடிவதற்க்கு சற்று முன்பு வரை நம்மை யூகிக்க வைக்கிறார் ஜாவர். காலத்தையும் கடந்து வசியம், ஹைப்னோடிசம், அமானுஷியம் என்று பல விஷயங்கள் வருகிறது. ராமநாதன், திலீபன், சீதா, ஆனந்தி, மாயநாதன் என்று ஒரு சில முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே. இருந்தும் கதை முழுதும் நிறைந்து இருக்கிறார்கள். திலீபனின் கதாபாத்திரம் அழகாக அமைக்க பட்டிருக்கிறது. நல்லவனா, கெட்டவனா, பைத்தியமா, வேறு யாரோ தான் அவனை ஆட்டி வைக்கிறார்களா அதுவும் அல்ல பேய் பிடித்திருக்கிறதா என்ற குழப்பம் கதை முழுதும் நீடிக்கிறது. அதுவே அந்த மர்மத்தை தக்க வைக்கிறது. ஆனந்தியின் பாத்திரம் மிகவும் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. 'அவள்' அல்லது 'அது' யார் என்ற மர்மம் சற்றும் பிழை இல்லாமல் உயிர்பிக்கப்பட்டிருக்கிறது. சீதாவின் கதாபாத்திரம் முதலில் வெள்ளந்தியாவும் பிறகு ஆற்றல் மிக்கவளாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அந்த திடீர் மாற்றம் சற்று நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தாலும் கதையின் போக்கில் அதை நாம் ஏற்றுத்தான் விடுவோம். குழப்பமாக நகரும் கதை போக போக கோர்க்கப்படுகின்ற விதம் இப்புத்தகத்தில் நன்று காணலாம்.
ஆங்கிலித்தில் Page Turner என்று சில புத்தகங்களை குறிப்பிடுவார்கள். மர்மமும் பீதியும் சற்றும் தளராது நம்மை ஆட்டி வைத்து நம்மை வரும் பக்கங்களை புரட்ட வைக்கும். அதே ரகத்தில் சேர்க்க தகுந்த புத்தகம் இது. அறிவியல் காலத்தில் இப்படியும் முடியுமா என்று நம்மை கற்பனை செய்ய வைக்கிறது.
Book-o-Meter

No comments:
Post a Comment