Wednesday, 27 November 2019

பூக்குட்டி - சுஜாதா - புத்தக விமர்சனம்


தமிழில் மிக பிரபலமான எழுத்தாளர்களில் முக்கியமானவர் சுஜாதா. இலக்கியம் மட்டுமின்றி திரை துறையிலும் பணியாற்றியவர். பல ரகங்களில் கதைகளை புனைபவர் அவர். திகில், மர்மம், குடும்பம், விஞ்ஞானம் என்று பல ரகங்கள். ஆனால் அவர் சிறுவர்களுக்காக ஒரு குட்டி புதினம் எழுதியுள்ளார் என்று தெரிந்ததும் அதை வாசிக்க வேண்டும் என்ற முடிவு இந்த 'பூக்குட்டி' யில் வந்து நின்றது.

செல்வ செழிப்பில் வளரும் ஒரு பெண் குழந்தை விம்மு. அப்பா,  அம்மா,வேலையாட்கள், பெரிய வீடு, பொம்மைகள் என்று எல்லாம் இருந்தும் அவளிடம் ஒன்று மட்டும்  இல்லை. ஒரு நட்பு. அவள் படிக்கும் பள்ளியின் பக்கம் இருக்கும் சேரியை சேர்ந்த வேலாயி என்கிற ஒரு ஏழை பெண் சிநேகிதம் கிடைக்கிறது. தன் தராதரத்திற்கு ஏற்ற நட்பில்லை என்று சொல்லியும் அதை சட்டை செய்யாமல் நட்பு வளர்கிறது. வேலாயியின் நாய் பூக்குட்டி உடனான நட்பு பெரிதும் வளர்கிறது விம்முவிற்கு. அந்த நட்பு தடுக்கப்பட விம்மு நோய்வாய்ப்படுகிறாள். வேலாயி குடும்பம் அங்கிருந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்களை கண்டடைகிறார்களா விம்முவிற்கு என்ன ஆச்சு, பூக்குட்டியுடன் சேர்கிறார்களா என்று அழகாக நகர்கிறது கதைக்களம்.

மிகவும் மென்மையாக எழுதப்பட்டிருக்கும் கதை இந்த பூக்குட்டி. வெறும் 80 பக்கங்கள்  மட்டுமே. ஆனால் அந்த 80 பக்கங்களுக்குள் நிறையவே சொல்லியிருக்கிறார். குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற உலகத்தினுள்ளும் வாழ்கையினுள்ளும் நாம் ஊடுருவி செல்கிறோம். ஒரு குழந்தையின் சந்தோசம் அவர்கள் உடுக்கும் உடையோ வாழுமோ வீடோ பொறுத்ததன்று. அவர்களின் மெல்லிய இதயத்தில் மலரும்  உணர்ச்சிகளே. அவர்கள் கண்களால் காணும் இவ்வுலகையே. தராதரம், பணம், கெளரவம் இதெல்லாம் அவர்கள் அகராதியில் இல்லை. தராதரம் பார்க்கும் விம்முவின் அம்மா அதற்க்கு நல்ல உதாகரணம். விம்முவிற்கும் வேலாயிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணை நன்றாக  எழுதப்பட்டிருக்கிறது. காசு பணம் இல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டில் கிடைக்கும் சந்தோசம்; செல்வ செழிப்பில் திளைக்கும் விம்மு வீட்டில் இல்லை. விம்மு மற்றும் வேலாயி யின் அப்பாக்களின் பாத்திரங்கள் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ரெண்டு தரப்பட்ட வாழக்கை சூழ்நிலைகளும் சுஜாதா அருமையாக ஒப்பிடுகிறார். ஒரு பக்கம் அணைத்து வசதிகள் இருந்தும் பாசம் நட்பு இதற்கெல்லாம் சூழல் இல்லை. மற்றொருபுறம் அன்னாடம்காச்சிகள் ஆனாலும் சந்தோஷம் நிறைந்த சூழல். சில பக்கங்களே கொண்ட கதை என்பதால் எங்கும் நமக்கு சலிப்பு தட்டாது. கதையின் முடிவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு சில நல்ல கதாபாத்திரங்களை கொண்டு மிக அழகாக சொல்ல பட்ட ஒரு குட்டி கதை இது. ஒரு குழந்தையின் மனதை போன்ற ஒரு மெல்லிய கதை. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறு புதினம் இது. அதுவும் சுஜாதாவிடம் இருந்து வருகிறபோது சொல்லவா வேண்டும்!!!

Book-o-Meter

2 comments:

  1. பலே பலே. பிச்சுடீங்க போங்க! உங்கள் விமர்சனம் புதினத்தை படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. மறக்காம படிங்க!!!!

      Delete