'அம்மா வந்தாள்' என்ற ஒரு புத்தகம். அது படிக்கிறபோது அதன் பொருள் பெரிதாக விளங்கவில்லை என்றாலும் அந்த எழுத்தாளரின் துணிச்சலை கண்டு வியப்படைந்தேன். வருடங்களுக்கு பிறகு You Tube -இல் பாவா செல்லதுரையின் பெருங்கதையாடலில் இந்த கதையை அவர் வாயால் கேட்க நேர்ந்தேன். பிரம்மித்துவிட்டேன். நான் வாசித்த பொது அதை புரிந்து கொள்ளும் பக்குவம் என்னிடம் இருக்கவில்லை போலும். அப்பொழுது தான் 'நளபாகம்' என்ற இந்த புத்தகத்தை பற்றி நினைத்தேன். சென்ற மாதம் வாங்கியது. அதே எழுத்தாளரின் படைப்பு. அதை வாசிக்க முடிவு செய்தேன்.
நர்மதா நதியை கடக்கும் யாத்ரா ஸ்பெஷல் ரயிலில் ஆரம்பமாகிறது இந்த புதினம். ரங்கமணி இந்த ரயிலில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்க வருகிறார். தனது குடும்பம் வழி வழியாக சுவீகார பிள்ளைகளால் தான் தொடர்கிறது என்ற ஒரு கவலை அவர்களுக்கு. சுவீகார பிள்ளையான தனது மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தைகள் இல்லை. அதனால் இந்த தலைமுறையும் சுவீகாரத்திற்கு தான் போகவேண்டும் என்ற அச்சம். யாத்திரையின் போது அவர் சந்திக்கும் ஜோதிடரிடம் இதை பற்றி கேட்கிறார். உங்கள் மகனுக்கு சந்தான பாக்கியம் இல்லை ஆனால் மருமகளுக்கு அந்த பாக்கியம் உண்டு என்று சொல்லி ரெங்கமணியை பதற வைக்கிறார். யாத்ரா ரயிலில் சமையல் வேலைகளை மேற்ப்பார்வை செயகிறவர் காமேசுவரன். நல்ல பக்திமான் அதை விட மிக நல்ல ஒரு மனிதன். அவனை பிடித்து போக; ரங்கமணி தன்னுடைய வீட்டிற்கு வந்து தங்கி விட சொல்கிறாள். காமேசுவரனும் ஒத்துக்கொள்கிறேன். ரங்கமணியின் ஊரான நல்லூருக்கு அவன் போன பிறகு என்ன நடக்கின்றது, புது வாழ்க்கை அவனுக்கு எப்படி அமைகிறது, என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வருகிறது, மருமகள் பங்கஜத்துக்கு குழந்தை பிறக்கிறதா என்பதை சொல்வதே 'நளபாகம்'.
என்னை முதலில் கவர்ந்தது ஜானகிராமன் அவர்களுடைய எழுத்து நடை. ரயில் நர்மதா நதியின் மேல் பிரயாணம் செயகிறபோதும் சரி, காமேசுவரன் நல்லூரில் சுற்றி திரியும் தருணங்களிலும் சரி காட்சிகளை அப்படி நம் கண் முன்னாள் நிற்க வைக்கிறார். எதோ நானே நல்லூருக்கு போய்விட்ட ஒரு உணர்வு. இந்த கதை எழுதப்பட்ட காலகட்டத்தை வைத்து பார்த்தால்; 'அம்மா வந்தாள்' புதினத்தை போலவே இப்புத்தகமும் மிகவும் துணிச்சலாக எழுதியிருக்கிறார் ஜானகிராமன். பெண்களின் மனதை பற்றியும் அவளின் எண்ணங்களை பற்றியும் மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் தி.ஜா. அதுவும் அவர்களில் உண்டாகும் தாபங்களும், இச்சைகளும், வெறுப்புகளும் எல்லாமே மறையேதுமின்றி காட்டியிருக்கிறார். காசநோயால் அவதி படும் ஒருத்தனை மனக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும் ரங்கமணியின் நினைவுகள் கொஞ்சமே சொல்லப்பட்டிருந்தாலும் அதில் எத்தனையோ அர்த்தங்கள் உண்மைகள். தனக்குள் இருக்கும் ஆசையால் கணவனை கட்டி பிடிக்க கூட முடியாத நிலைமை. நான் கட்டிப்பிடித்தால் ஒடிந்து விடுவாரோ என்ற நினைப்பு இருந்தாலும் அவளையும் மீறி எழும் தாபமானது அவளை கட்டி அணைக்க வைக்கும். ஆனால் நோயாளியான புருஷனால் அந்த அணைப்பை கூட தாங்க முடியவில்லை. இதை சர்வ சாதாரணமாக ஆனால் ஆழமாக சொல்லியிருப்பார் தி.ஜா.
அதை போல தான் பங்கஜம் என்ற மருமகளின் பாத்திரமும் அழகாய் சொல்ல பட்டிருக்கிறது. காமேசுவரன் அவர்கள் நிலையை கண்டு பரிதாப படுகிறான், கவலைப்படுகிறான், கோபம் கொள்கிறான். நாமும் கூட. பெண் என்ன உணர்ச்சி அற்ற ஒரு மரக்கட்டையா; இல்லை கூடத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டிய ஒரு ஜீவனா என்று நாமும் சேர்ந்து சினம் கொள்கிறோம். காமேசுவரனை எழுதியிருக்கும் விதம் அழகு. அவன் வாயிலாக அவனுடன் நமது பார்வையும் விகசிக்கிறது. ரங்கமணியின் மகனாக வரும் துரை மிகவும் வித்தியாசமாக சித்திரிக்கப்பட்டிருக்கிறான். கணவன் மனைவி இடையே இருக்கும் புரிதலை அழகாக சொல்லியிருக்கிறார் தி.ஜா. துரை மற்றும் பங்கஜம் இடையில் நடக்கும் சம்பாஷணைகளின் வாயிலாக. இதனை நாட்கள் திருமணமாகியும் இரண்டு பேருக்கும் இடையே புரிதல் இல்லை என்பது இரண்டு பெரும் உணரும் இடம் அருமை. அதை தாண்டி வந்த பிறகு அவர்களின் இடையே இருக்கும் அன்யோன்யம் அழகு. காமேசுவரன் மற்றும் அவன் தந்தை இடையிலான உறவை சில பக்கங்களில் அடக்கினாலும் அதின் தாக்கம் நம்மில் கதை முழுதும் தொடரும். அவனை வளர்த்த வத்சன், நண்பர்கள் இளங்கண்ணன் மற்றும் ஜகது, முத்துசாமி, நாயுடு, தேவாரம் ஐயங்கார் பாத்திரங்கள் கொஞ்சம் நேரமே வந்தாலும் நம் சிந்தனைகளில் வெகு நேரம் நிற்கின்றனர். அதிலும் காமேசுவரன் மற்றும் தேவாரம் ஐயங்கார் இடையே நடக்கும் சம்பாஷணை ஒன்று இடம் பெறுகிறது. சில பக்கங்கள் தான் இருந்து எத்தனை அர்த்தங்கள், சூட்சமங்கள்.
தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தனுக்கென்று ஒரு தனி இடம் உள்ளது. எதையும் சொல்லும் தைரியமும் துணிவும் உள்ள மனிதன். கன்னத்தில் அறைவது போல் நமக்குள் சிந்தனைகளை திணிக்கிறவர். அவரின் அந்த தைரியமும் தாக்கமும் நான் கண்ட இன்னொரு எழுத்தாளர் தி.ஜானகிராமன். முதலில் நான் சொன்னது போல அந்த காலகட்டத்தில் இப்படி எழுதுவது என்பது அரிது. இந்த வெளிப்படைத்தன்மையும் தைரியமும் தீர்க்கமான தெளிவான பார்வையும் என்னை என்றும் தி.ஜா வின் ஒரு பெரிய விசிறி ஆக்கியது. கண்டிப்பாக எல்லோராலும் படிக்க படவேண்டிய ஒரு புதினம்; ஒரு எழுத்தாளர்.
அருமையான பதிவு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/?m=1
nandri
Deleteஅருமையான பதிவு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/?m=1
nandri
Delete