Sunday, 25 December 2022

வெண்முரசு 01 - முதற்கனல் - ஜெயமோகன் - புத்தக விமர்சனம்

 

                    பாரதத்தின் மிக பெரிய காவியங்கள் இரண்டு - ராமாயணம் மற்றும் மகாபாரதம். அதிலும் மகாபாரதம் என்பது பல கிளை கதைகளை கொண்ட மாபெரும் காவியம். அதை ஒருவர் மீண்டும் தனக்கே உண்டான பாணியில் எழுதுவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். அதுவும் ஜெயமோகன் அதை முயற்சிக்கிறார் என்பது எனக்குள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதின் விளைவு தான் இந்த வாசிப்பு. 

                    நாகர்களிடம் இருந்து ஆரம்பிக்கும் இந்த பாகம் முக்கியமாக கங்கை மற்றும் பீஷ்மரின் ஆரம்ப கால கதையை சுற்றியே சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல அஸ்தினாபுரம் என்ற நாட்டையும் அதற்காக பீஷ்மர் செய்யும் தியாகங்கள் மற்றும் செயல்களை பற்றி சொல்ல பட்டிருக்கிறது. மற்றுமொரு முக்கியமான பாத்திரம் பீஷ்மர் மேல் பகை கொண்டிருக்கும் சிகண்டி. இவர்கள் இரண்டு பேரின் கதையும் முக்கியமாக சொல்லப்பட்டிருப்பதே இந்த "முதற்கனல்".

                    சிறந்த ஒரு அனுபவத்தை தந்த ஒரு வாசிப்பு இந்த புத்தகம். அதுவும் கதைக்கான அரங்கம் அமைக்க பட்டிருக்கும் விதம் அற்புதம். இது ஒரு கதையாடல் என்று நம்மை மறக்க செய்யும் ஒரு அனுபவம் இந்த முதற்கனல். ஜெயமோகனின் மொழி ஆளுமையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். பல வார்த்தைகள் புரிவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. இருந்தாலும் அந்த எழுத்து நடை மற்றும் கற்பனை அவ்வளவு அழகாக சொல்ல பட்டிருக்கிறது. இப்படி ஒரு முயற்சிக்காக ஜெயமோகனை பாராட்டியேயாகவேண்டும். மகாபாரதத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார் எழுத்தாளர். பல அர்த்தங்களை கொண்ட இந்த பாகத்தை ஒரே வாசிப்பில் படித்து புரிந்து கொள்வது என்பது சற்று சிரமமான காரியமே. கண்டிப்பாக இன்னொரு முறை நான் படிக்கத்தான் போகிறேன்.

                    ஒரு மாபெரும் காவியத்தை மீண்டும் தனக்கே உரிய பாணியில் எழுதுவது என்பது ஒரு அறிய சாதனையே. எத்தனை கதைமாந்தர்கள், எத்தனை பரிமாணங்கள், எத்தனை படிமங்கள் - இதை கண்டிப்பாக ஒவொருவரும் வாசித்து கொண்டாடவேண்டிய ஒரு தொடர். அடுத்த வருடம் மீண்டும் ஒரு முறை இதை வாசித்து ஜெயமோகனின் தமிழையும் சிந்தனைகளையும் ரசிக்கத்தான் போகிறேன். கதைகள் வாசிக்க பிடிக்கும் அனைவராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புத்தகம் இந்த முதற்கனல்.



No comments:

Post a Comment