Friday, 16 September 2022

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன் - புத்தக விமர்சனம்


                    என்றும் நம்மை தனது எழுத்துக்களால் ஈர்க்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற எழுத்தாளர்கள் சிலர் மட்டுமே. அவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். அவரின் மற்று படைப்புகளை வாங்கும்பொழுதெல்லாம் இந்த ஒரு புதினத்தை பார்த்ததுண்டு. வாங்கியதோடு சரி. வாசிக்கும் எண்ணம் ஏனோ வந்ததே இல்லை. இந்த வருடம் எப்படியும் வசித்தே தீர வேண்டும் என்று எடுத்து விட்டேன்.
                    கல்யாணி ஒரு நாடக நடிகை. தனது வேலையில் நிறைவாக உள்ளார். திரைப்பட நடிகை என்ற கனவுகள் ஏதும் இன்றி நாடகத்தை நேசித்து நடிக்கிறார். அப்போது சந்திக்க நேரும் ரங்கா என்ற ஒரு பத்திரிக்கைக்ககாரனுடன் நட்பு ஏற்படுகிறது. சில நாட்களிலேயே அது காதலாக மாறி இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்து ஒரு வீட்டிற்கு குடி போகிறார்கள். கொஞ்சம் நாட்களிலேயே ரங்கா சரியான புரிதல் இல்லாமல் கல்யாணியை விட்டு பிரிந்து செல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? ஏன் இந்த பிரிவு? அவர்களுக்கு இடையே புரிதல் மீண்டும் ஏற்ப்படிகிறதா? ஒன்று சேர்கிறார்களா? என்பதே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்".
                    என்னவென்று சொல்வது இந்த புதினத்தை பற்றி! அற்புதமான ஒரு படைப்பு. சில கதாபாத்திரங்கள் மட்டுமே இருந்தாலும் அவர்களை வைத்து ஒரு உண்மையான உலகை படைத்திருக்கிறார் ஜெயகாந்தன். மிக சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை எவ்வளவு சீக்கிரம் நம் மனதிற்குள் ஊடுருவுகிறது. யதார்த்தமான மனிதர்களையும் வாழ்க்கையையும் ஜெயகாந்தனை போல் யாரால் காண்பிக்க முடியும். இவ்வளவு தத்ரூபமாக! கல்யாணி, அண்ணாசாமி, ரங்கா, ராகவன், சின்ன நயினா,பட்டு, தாமு என்று சில பாத்திரங்களே இந்த கதையின் உலகத்தில் வாழ்கிறார்கள். கல்யாணி! அவர்களை பற்றி என்ன சொல்வது. உலகம் பற்றி சரியாக அறியாதவள் போல் தென்பட்டாலும் தனது சிந்தனைகள் மற்றும் வாழ்க்கையை பற்றின பார்வையில் தான் என்ன ஒரு தெளிவு! வாழ்க்கையை அவள் எதிர்கொள்ளும் விதம் அருமை. 
                    ரங்கா ஒரு முற்போக்கு வாதியாக தென்பட்டாலும் அவனும் ஈகோ என்ற மாய வலையில் சிக்கி ஒரு சாதாரமான மனிதனை போல நடந்து கொள்கிறான். அவன் ஒரு வில்லனாக சித்திரிக்கபடவில்லை ஜெயகாந்தனால். அவனுள் உள்ள நன்மையை எடுத்து காட்டவே செயகிறார். அண்ணாசாமி மற்றுமொரு சுவாரஸ்யமான பாத்திரம். கல்யாணிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தபோதிலும்; அவள் மேல் ஆசை கொள்ள, அதை கல்யாணி நோகாமல் எடுத்துறைக்கும் தருணம் அருமை. அவர்களுக்குள் அந்த நேரம் நடக்கும் சம்பாஷணை மிகவும் தெளிவாக இருந்தது. கல்யாணி சொன்ன விதம், அண்ணாசாமி எடுத்துக்கொண்ட விதம் இரண்டுமே அழகு! பட்டு, தாமு, சின்ன நயினா இவர்களெல்லாம் சொற்ப நேரம் வந்தாலும் கதையில் ஒரு தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். கல்யாணியின் வாழ்க்கையில் நேரும் திருப்பம் மற்றும் அதற்க்கு ரங்கா நடந்து கொள்ளும் விதம் நெகிழ்ச்சி. கதையின் முடிவு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இதை விட ஒருவர் கூட அழகாக இந்த கதையை முடித்திருக்க முடியாது. முடிவு என்று சொல்வதை விட மீண்டும் ஆரம்பித்தது என்று சொல்வதே சரி.
                    ஹென்றி எப்படி என் வாழ்க்கையில் ஒரு நீங்காத இடம் பெற்று நண்பனாகி விட்டானோ அதே போல் கல்யாணி கூட நினைவை விட்டு அகலாத ஒரு தோழியாகி விட்டிருந்தாள் இந்த புதினம் முடிவதற்குள். பந்தங்களின் ஆழம் மற்றும் பிணைப்பை நேர்த்தியாக சொல்லியிருக்கும் ஒரு அழகிய படைப்பு. 



No comments:

Post a Comment